தூவித்தோழர்கள்-11

கரிச்சான் (Black Drongo)

ஒரு கம்பியில் அமர்ந்திருந்த காக்கையை, சுற்றி சுற்றி பறந்து துரத்தி விட்டபின், கரிச்சான் அந்த இடத்தில் அமர்ந்து கொண்டது .வகுப்பில் ‘வலிமை குறைந்த‌ பறவைகள், கரிச்சான்களின் கூடுகளுக்கு அருகில் தம்முடைய கூட்டை பாதுகாப்புக் கருதி அமைத்துக்கொள்ளும். தன் எல்லைக்குள் வரும் பெரிய பறவைகளையும் கரிச்சான்கள் தாக்கும்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

மின்னும் கரிய நிறம். மெலிந்த உடல். நீண்ட பிளவுள்ள வால். மாலை வேளைகளில் தண்ணீர் தொட்டி அருகில் உள்ள T குழாயில் அமர்திருக்கும். எப்பொழுதாவது இரண்டு பறவைகள் வரும்.

படித்தறிந்தது

  • குச்சிகள், புற்கள் வைத்து கட்டிய கூட்டில், பொதுவாக 3–4 முட்டைகள் இடும். இரு பறவைகளும் சேர்ந்து 14–16 நாட்கள் அடைகாக்கும். வரிக்குயில், சதுர வால் கரிச்சான் குயில் ஆகிய பறவைகள், இதன் கூடுகளில் முட்டையிட்டுச் செல்லும்.
  • பிற பறவைகளின் உணவைத் திருடவும், ஆபத்தில் இருந்து தப்பிக்கவும், மற்ற பறவைகளைப் போல் ஒலி எழுப்பும்.
  • வேறு பெயர்கள்: காரி, கருவாட்டு வாலி, கருங்குருவி,மாட்டுக்காரக் குருவி. ஆண்டாள் திருப்பாவையின் ஏழாவது பாடலில், “கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!” என்ற வரிகள் உள்ளன. இதில் வரும் ‘ஆனைச் சாத்தன்’ என்பது கரிச்சானை குறிக்கிறது என மா. கிருட்டிணன் குறிப்பிட்டுள்ளார்.(பறவைகளும் வேடந்தாங்கலும்,பக்கம் 34)