Shikra (வல்லூறு)
ஒரு நாள் அதிகாலை, அதுவரை கேட்டிராத கிகீ என்ற சத்தம் கேட்டது. மெர்லினில் போட்ட போது வல்லூறு என்று வந்தது. உடனே வெளியே சென்று பார்த்தால், கண்ணில் படவில்லை. ஒருநாள் காலை பறவை பார்த்துக் கொண்டிருக்கும் போது, வீட்டில் சுவற்றிலேயே அமர்ந்திருந்தது. வெகு நேரம் அங்கு நின்று கவனித்தது, பின், பறந்து சென்று ஒரு கம்பியில் அமர்ந்தது. இப்பொழுது தினமும் பார்க்க முடிகிறது. பள்ளிக்கூடம் கிளம்பும் நேரத்தில், இதன் குரல் கேட்கும். நிமிர்ந்து பார்த்தால், வானில் ஜோடியாக வட்டமிட்டு கொண்டிருக்கும்.

சில பறவைகளை வேறு இடங்களுக்கு சென்று தான் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வீட்டின் அருகிலேயே வல்லூறு போன்ற பறவைகளை பார்க்கும் போது, ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. புறா அளவு தான் இருந்தாலும், ஒரு கம்பீரமான தோற்றம்.சாம்பல் நிற இறக்கைகள். சிவப்பு நிற கருவிழிகள்.வெண்ணிற உடலில் பழுப்புநிற வரிகள். பெண் பறவை பெரிதாகவும், மஞ்சள் நிற கருவிழியுடனும், அடர் சாம்பல் நிற இறக்கைகளுடனும் இருக்கிறது.

படித்தறிந்தது
- இதன் வேறு பெயர்கள்:வில்லேத்திரன் குருவி, பறப்பிடியன், வைரி
- ஒரு சமயத்தில் மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடும்.
- ஷிக்ரா என்ற வார்த்தைக்கு, இந்தி மொழியில் வேட்டைக்காரன்(शिकारी) என்று பொருள்.
- 2009 ல் இந்திய கடற்படை, மும்பையில் உள்ள ஹெலிகாப்டர் தளங்களில் ஒன்றிற்கு INS Shikra என்று பெயரிட்டது.