சுடலைக்குயில் (Jacobin/Pied Cuckoo)
வெளியில் சென்றுவிட்டு, எங்கள் தெருவில் வரும்போது, என் நேரெதிரே இருந்து வெள்ளையும் கருப்புமாக ஒரு பறவை பறந்து வந்து, தலைக்கு மேல் மின்சார கம்பியில் அமர்ந்தது. கொண்டையை பார்த்தவுடன் தெரிந்து விட்டது, அது சுடலைக்குயில் என்று. ஒரு நிமிடம் அமர்ந்திருந்தது; பின் பறந்து சென்று விட்டது. பறவை பார்த்தலின் மிகப்பெரிய வரமே, இதுபோன்ற தருணங்கள் தான். இயற்கை கொடுத்த பரிசு போல, எங்கிருந்தோ வரும். வந்த சுவடே இல்லாமல் மறைந்தும் போய்விடும். ஆனால் அந்த நினைவுகள் என்றுமே, மனதில் இருக்கும். நினைக்கும் போதெல்லாம் ஆனந்தத்தை தரும்.

கொண்டை, அலகு, தலை, உடலின் மேல்பகுதி கருப்பு. அடிஉடல் வெள்ளை. கருப்பு, வெள்ளை கலந்த வால். தியேட்டர் பாஸ்கரன் சார் கட்டுரையில் இதை சாதகப்பறவை என்கிறார். அதேபோல, அன்று மழையும் பெய்தது.
படித்தறிந்தது
- ‘ஜேகோபின்(Jacobin)’ என்பது, டொமினிகன் வரிசையைச் சேர்ந்த துறவிகளின் கருப்பு மற்றும் வெள்ளை ஆடையைக் குறிக்கின்றது . பிரான்ஸ் நாட்டில், டொமினிகன்கள் “ஜேகோபின்கள்” என்று அழைக்கப்பட்டனர். அதிலிருந்து தான் இதன் இனப்பெயர் வந்தது. (Clamator jacobinus)

- சுடலைக்குயில் காட்டுச் சிலம்பன்,சின்னான் ஆகிய பறவைகளின் கூட்டில் முட்டைகள் இடும்.
- தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் ஆண்டு முழுவதும் சுடலைக்குயில் காணப்படுகிறது. இதன் துணையினம் (Clamator jacobinus pica) ஆப்பிரிக்காவிலிருந்து வட இந்தியாவிற்கு மழைக்காலத்தின் துவக்கத்தில் வலசை வரும். குளிர் காலத்தில் ஆப்பிரிக்கா திரும்பும்.