தட்டேக்காடு பறவைகள் சரணாலயம்

தட்டேக்காடு பறவைகள் சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பெரியார் நதிக்கரையில் அமைந்துள்ளது. இச்சரணாலயம் 25 சதுர கிலோ மீட்டர் மட்டுமே, ஆனால் 250க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கு உண்டு. சாலிம் அலி இவ்வழியாக செல்லும் போது, அவரது வண்டி பழுதாக, இங்கு இரு நாட்கள் தங்கும் படி ஆனது. அப்போது இந்த பகுதியை அவர் பார்வை இட்டு சரணாலயமாக பரிந்துரைக்க பட்டது என்கின்றனர் இங்குள்ளவர்கள்.

இவ்விடம் இன்னும் சுற்றுலா தலமாக ஆகாததால் அமைதியான கேரள கிரமாகவே உள்ளது. நாங்கள் சென்றது அக்டோபர் இரண்டாவது வாரத்தில். வலசை பறவைகள் நவம்பர் முதல் வர ஆரம்பிப்பதால், பறவை ஆர்வலர்களும் புகைப்பட எடுப்பவர்களும் கூட தென்படவில்லை. சரணாலயத்தின் நுழைவு சீட்டு வாங்கும் இடத்தில் கூட “ஏன் வந்தீர்கள்” என்ற மரியாதை தான். இரண்டு மணிக்கே கதவை மூடி, நாளை வாருங்கள் என்றார்கள். இங்கு நான்கு வழித் தடங்களில் பறவை பார்க்க அனுமதிக்கிறார்கள். ஒன்றில் நாமே செல்லலாம், மற்றனைத்தும் வனத்துறையினருடன் செல்ல வேண்டும்.

இங்குள்ள காடுகளில் மரங்கள் உயர வளர்ந்து இருந்தன. எப்படியும் முப்பது அல்லது நாற்பது அடி இருக்கும் ஒவ்வொரு மரமும். இங்கு பறவைகள் மரத்தின் பல அடுக்குகளில் வாழ்வதை பார்க்க முடிந்தது. தரையில் தவிட்டு குருவிகளும், புதரில் சின்னான்களும் கதிர்குருவிகளும், மேல் கிளைகளில் மரங்கொத்திகளும், இருவாச்சிகளும்  வால்காக்கைகளும், உச்சிக் கிளைகளில் பருந்துகளும் பங்கு போட்டு வாழ்ந்தன. பறவைகள் மட்டுமன்றி, பலவித உயிரினங்களை கவனிக்க முடிந்தது. மண்ணுக்கு வெளியே மக்கும் வித்தையை செய்யும் காளான்களை பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் தென்பட்டன. பட்டாம் பூச்சிகள், மலபார் அணில்கள், பறக்கும் பல்லிகள், அட்டை பூச்சிகள், சிலந்திகள் இப்படி எங்கும் உயிர்கள் நிறைந்து இருந்தன.

பறவைகள் பல காண முடிந்தாலும் சில பறவைகள் மனதில் நின்றுவிட்டன. துடுப்பு வால் கரிச்சான் காட்டை ஆக்கிரமிப்பு செய்தது போல் எங்கு சென்றாலும் நம்மை கண்காணித்து, சாகசங்கள் செய்து கூடவே இருந்தன. இரண்டடி தூரத்தில் இப்பறவைகள் சாதாரணமாக எங்களை கடந்து சென்றது. மா கிருஷ்ணன் கரிச்சானை பற்றிய பழமொழி ஒன்றை மாற்றி எழுதி இருப்பார், அதுவே மண்டையில் ஓடியது

வால் நீண்ட கருங்குருவி

வலமிருந்து இடம் போனால்

கால் நடையாய் சென்றோரும்

காரில் திரும்புவாரே

எங்களை காட்டிற்குள் அழைத்துச் சென்ற இயற்கையலாளர், ஒரு புதரின் சருகுகள் நிறைந்த பகுதியை காண்பித்து, தவளை வாயனை பார்க்க முடிகிறதா என்றார். சருகுகள் உடன் இயைந்து அசையாமல் முனிவர் போல காவி உடையுடன் கண்மூடி அமர்ந்திருந்தது. அதை காண முடிந்தவுடன், சற்று பின் நகர்ந்தோம். மிக அருகில் நாங்கள் நின்றிருந்தோம். அப்பறவை மனிதர்கள் பழகி விட்டது போல் கண் திறந்து மூடிக்கொண்டது, துளியும் அசைவில்லை. மற்றொரு இடத்தில் ஜோடியாகவும் கண்டோம். இதனை படம் எடுக்க அதை சுற்றி உள்ள சருகுகளை கூட கழிப்பார்கள் என்றார் அவர்.

ரயிலில் பயணம் செய்யும் போது எங்களுக்குள் உரையாடல். இருவாச்சியை அழகில்லை என்று டக்ளஸ் டீவார் ஒரு கட்டுரையில் எழுதி இருப்பார். கண் பழக்கமே காரணம் என நான் சொல்லிக் கொண்டு வர, நாமெல்லாம் விரும்பும் பறவை அவர் அப்படி சொல்லலாமா என அதித்தி கோபப்பட்டாள். காட்டிற்குள் செல்லும் போது, பல அடி தூரத்தில், மலை இருவாச்சிகள் இரண்டு மர உச்சியில் அமர்ந்திருந்தது. அதன் பிரமாண்ட உயரமும், அலகிற்கும் உடலிற்கும் உள்ள அழகிய நிற முரணும் சிலிர்ப்பூட்டின. மகளின் கோபம் நியாயம் என்றே தோன்றியது. 

பெரிய கருப்பு மரங்கொத்தியை தெளிவாக நெடுநேரம் காண முடிந்தது. அதன் உலோக ஒலியும், மரத்தை கொத்தும் சத்தமும் கேட்டுக்கொன்டே இருந்தது. அதனோடு வெண்வயிற்று வால் காக்கைகளும் சேர்ந்து ஒலி எழுப்பியது. இவ்வால் காக்கையின் உடலில் வெள்ளை நிறம் எடுப்பாக தலை முதல் வால் வரை தெரிந்தது. 

கருங்கோண்டை பருந்துகள், காட்டு பஞ்சுருட்டான், மலபார் தீக்காக்கை, சிறு மீன்கொத்தி என அப்பகுதிக்கு உரிய பல பறவைகளையும் கண்டோம்.

இவ்வனைத்தும் தாண்டி நின்றது அந்த காடும் காட்டின் முழுமையுமே.