கனவு

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு – கொடர்டூர் ஏரி – 17.10.2026

கடந்த 17ஆம் தேதி, நண்பர் ஒருவரை சந்திப்பதாக திட்டம். காலை எட்டு மணிக்கு சந்திப்பு முடிவாகியிருந்த இடம் கொரட்டூர் ஏரிக்கு அருகில் எனபதாலும், பெரிதாக மழையும் இல்லையென்பதாலும், சுமார் ஆறரை மணியளவில் கொடர்டூர் ஏரியின் மேற்கு பகுதியை, பறவைப் பார்த்தலுக்காக வந்தடைந்தேன்.

எண்திசைக் காவலர்கள் போல, கொடர்டூர் ஏரியின் எட்டுதிசைகளுக்கும் பிரத்தேயகமான பறவைகள் உண்டு. உதாரணமாக ஏரியின் வடமேற்கு திசைக்கு சாம்பல் கதிர்குருவி (Ashy priniya), தென் மேற்கிற்கு நத்தை கொத்தி நாரை (Asian openbill) கிழக்கில் கொடிமரம் போல் நின்றிருக்கும், மொட்டைப் பனையில் வசிக்கும் பச்சைக்கிளி (Rose ringed parakeet) போன்றோரின் அழைப்பின்றி நாம் உள்ளே நுழையமுடியாது. அது போல மேற்கிற்கு நெடுங்கால் உள்ளான் (Black winged stilt). சமீபமாக ஏரியின் மேற்கில் eBird பட்டியலைத் துவங்குகையில் நெடுங்கால் உள்ளானை உடனடியாக பதிவிட்டு, பின்பே பறவைகளை அவதானிக்கத் துவங்குவது வழக்கமாகிவிட்டது. எண்ணிக்கையை மட்டும் உலா முடிந்தபின் கணக்கிட்டு சரிசெய்து கொள்வேன்.

நெடுங்கால் உள்ளான் (Black winged stilt)

எனவே இன்றும் சந்தேகத்திற்கு இடமின்றி நான் முதலில் சந்தித்தவர் அவரே. நெடுநாள் பழக்கத்தில் எங்கள் எல்லைகளை அறிந்தவர்கள் என்பதால் சிறு-மௌன-நல விசாரித்தலுக்குப்பின் இருவரும் அவரவர் வேலைகளை கவனிக்கத் துவங்கினோம். அவர் தன் பவளக் கால்களின், கூர் அலகின், வெண்மார்பின், அதன் இருபுறமும் நீண்ட கருஞ்சிறகுகளின் அழகை, ஆடியென சூழந்திருந்த ஏரிப்பரப்பில் தன் மாறா மழலைக் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆ! என்ன ஒருப் பேரழகு!!

மனிதற்களான நமக்கு ஏன் இத்தனை நிறங்களில்லை? நாம் அணியும் வண்ண வண்ண ஆடைகளனைத்தும், ஒரே நிறத்தில் நம்மைப் படைத்தவனை நோக்கிய நம் கண்டனத்தின் வெளிப்பாடா?

ஊர்த் தேன்சிட்டு (Purple rumped sunbird)

கோடையில் வற்றிய ஏரி, பெரும் மணற்திட்டுகளின் நடுவே தேங்கிய சிறு சிறு குட்டைகளாக தெரிந்தது. மழைக்காலம் துவங்கிவிட்டதால் இனி ஏரியைக் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைக் கழிவுநீரைக் கொண்டு நிரப்பும் பணியை நகர நிர்வாகம் கவனித்துக் கொள்ளும். அதை எதிர்த்து பல ஆண்டுகளுக்கு முன்பே வாதாடி வென்ற வழக்கின் தீர்ப்புடன் தொடரும் போராட்டத்தை சூழலியலாலர்கள் கவனித்துக் கொள்வார்கள். இனி வரும் தலைமுறைகள், நம் முந்தைய தலைமுறைகள் விட்டுச் சென்ற காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற ஏரி நகரங்கள்தோரும் தொழிற்சாலைகள் அமைத்த, ஆறுகளின் கரைகளில் குளிர்பான, உற்சாகபான ஆலைகள் அமைத்த நம் தலைமுறையின் நகர, தொழிற் கட்டமைப்புகளின் நிர்மானத்திறனை, நிர்வாகத்திறனை நினைத்து வியக்கக்கூடும். இதைத்தான் வள்ளுவர் ‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம்… நினைக்கப்படும்’ என்றார் போல !

நான் வலதுபுரம் திரும்பி, நடைபாதையை அடைந்து ஏரியைச் சுற்றத் துவங்கினேன். மலர்களற்ற சிறு மரம் ஒன்றில், ஓர்  ஊர்த் தேன்சிட்டு  மேலும் கீழுமாக அலைந்து கொண்டிருந்தது. அது செய்வது புரியாமல் நான் நிதானித்துப் பார்க்க, இலைகளின் மேலிருந்த சிறு சிறு போர்வைகளைக் கிழித்து உள்ளே உறக்கத்திலிருந்த புழுக்களை எடுத்து உண்டு கொண்டிருந்தது.

ஊர்த் தேன்சிட்டு (Purple rumped sunbird)

என் பயணக் குறிப்புகளை தொடர்ச்சியாக வாசிப்பவர்களுக்கு, ‘அமுதம்’ எனும் கருத்தை நான் பல கோணங்களில் அணுகி, அதை விளங்கிக் கொள்ளும் முயற்சியிலிருப்பதைக் கவனித்திருக்கலாம். மகரந்தங்களைப் பரப்ப பட்டாம்பூச்சிகளும், வண்டுகளும், தேனீக்களும் கணக்கற்று இருக்க, இச்சிட்டும் தேனருந்தும் படி தாவரங்கள் தங்கள் மலர்களை ஏன் அமைத்துக் கொள்ள வேண்டும்?  இன்று இக்காட்சியைப் பார்க்கையில், அரித்து அழித்துக் கொண்டிருக்கும் ஒன்றிலிருந்து தன்னை விடுவித்த அச்சிறிய பறவைக்காக அகம் மலர்ந்து, தன்னில் ஊற்றெடுத்த அன்பை துளியென தேக்கியதன் பெயரல்லாவா அமுது என எண்ணிக் கொண்டேன்.

வெண்புருவச் சின்னான் (White browed bulbul)

ஏரியின் உள்ளும் புறமும் பறவைகளை பார்த்தபடி நடந்து கொண்டிருந்தேன். வெண்புருவ சின்னான் ஒன்று மிக அருகில் வந்து சென்றது. சுமார் ஒரு மணிநேரம் கடந்திருக்கும். ஏரியினுள் பல்வேறு பறவைகள் ஒரேயிடத்தில் முகாமிட்டிருக்க, அருகே நடைபாதையின் குறுஞ்சுவரில் நான் அமர்ந்து கொண்டேன். நேர்எதிரே சங்குவளை நாரைக் கூட்டம். எவ்வளவு நேரம் சென்றிருக்கும் எனத் தெரியாது. யாரோ உரக்கச் சிரிக்கும் ஒலி கேட்டு நினைவு ‘திரும்பியது”. சுற்று முற்றும் தேடினேன். அருகே யாரும் இல்லை. தொலைவில் தெரிந்த  மனிதர்களிடமிருந்து எழும் ஒலி இவ்வளவு தூரம் வர சாத்தியமுமில்லை என குழம்பிக் கொண்டிருக்கையில், மீண்டுமொலித்த சிரிப்பொலி ஏரியிலிருந்து வந்தது. திகைப்புடன் திரும்பி நோக்கினேன். ஏரியில் நாரைக் கூட்டத்திலிருந்துதான் யாரோ சிரிக்கிறார்கள்!

என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள், “உனக்கு வாய் கொஞ்சம் நீளம்தான்” என யாரோ சொல்வது கேட்டது.

பார்த்துவிட்டேன்! அதோ கூட்டத்தில் வலது ஓரத்தில் இருக்கும் அவ்விரு நாரைகள்தான் பேசிக் கொண்டிருந்தன. அவற்றின் கண்களில் நான் சற்று முன்பு கேட்ட சிரிப்பு எஞ்சியிருந்தது.

இருவர் – சங்குவளை நாரைகள் (Painted storks)

“பின்னே? நீளமான வாய்தானே நம் சிறப்பே” என்றது மற்றொரு நாரை.

“ஆனால், அவர்கள் போல நமக்கும் வாயில் பையிருந்தால், இப்படி அலைந்து கொண்டிருக்காமல் வாயைத் திறந்து போட்டு, மீன்கள் அதுவாய் வந்து மாட்டும் வரை காத்திருந்திருக்கலாம்” என்றது.

“உண்மைதான். ஆனால், நேற்று அவர்கள் கூட்டத்தில் ஒருவன் வாயில் மாட்டிய கல்லை, மீனென்று நினைத்து அப்படியே பறக்க முயல, தலை குப்புற நீரில் விழுந்ததைப் பார்த்து இந்த ஏரியில் இருந்த மீன்கள் வரை சிரித்ததை நீ மறந்துவிட்டாயா?” என முந்தைய நாரை கூற மீண்டும் சிரிப்பலை எழுந்தது.

ஊடே நின்றிருந்த சின்ன கொக்குகளும் சிரிக்க, நீரில் மூழ்கியிருந்த சிறிய நீர்காகங்கள் தலையை வெளியே நீட்டி,
“என்ன நடந்தது?” என தங்களுக்குள் கேட்டுக் கொண்டன.

சின்ன கொக்குகளுடன் (Along with Little Egrets)

அருகே சிறகுலர்த்திக் கொண்டிருந்த கூழைக்கடாக்களிடமிருந்து எழுந்த ஒலி நாரைகளுக்கான கண்டனங்கள் போலிருந்தது. அதுவும் வாய் முழுதாக மூடாமுடியாமல் சற்றே திறந்திருந்த ஒரு கூழைக்கடா, சற்று வலுவாகவே கண்டனம் தெரிவிப்பது போலிருந்தது.

காற்றை கிழித்தபடி ஓர் அலறல் எழ, நாரைக் கூட்டம் அமைதியானது. சில நொடிகளில் மீண்டும் மெலிதாக பேச்சொலி எழுந்தது.

“முந்தைய தலைமை எவ்வளவோ பரவாயில்லை. அவர் குனிந்த தலை நிமிராமல் மீனையும், நண்டையுமே கவனித்துக் கொண்டிருப்பார்”  என்றது நாரைகளிலொன்று.

செந்நீலநாரை (வலது) – Purple heron (on right)

“இப்போதிருப்பவர் உணவைக் கவனிக்காமல் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார். சிறிது நாட்களாக செந்நீல நாரையுடனான அவரது பழக்கம் தீவிரமடைவதை நான் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன். சிலை போல் தலையை நிமிர்த்தி நின்றிருப்பதே இரையைக் கொய்வதற்கான சிறந்த வழி என  அதுதான் தலைமைக்கு சொல்லியிருக்க வேண்டும். அதன் வயிற்றிற்கு இரண்டு, மூன்று முறை வாயைத் திறந்தால் போதும். நமக்கு அது சரிபட்டு வருமா? நாள் முழுவதும் வாயைத் திறந்த படி நீரில் துழாவினால் கூட முக்கால் வயிறுதான் நிரம்புகிறது’ என குறைபட்டுக் கொண்டது.

“உஷ்ஷ். அவர் கவனிக்கிறார்” என்றது சிறகைக் கோதுவது போல தலையை திருப்பிய மற்றொரு நாரை.

எச்சரிப்பு

“அவர் பார்பதற்காகத்தான் இப்படி பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றது முந்தையது. “அங்கே பார், நேற்று குழுவில் பொறுப்பற்று பேசிக் கொண்டிருந்தவனுக்கு தண்டனையாக, இன்றொருநாள் குழுவை விட்டு வெளியே நிற்கச் சொன்னாரல்லவா? இதுவும் செந்நீல நாரையின் பரிந்துரைப்பாகத்தான் இருக்க வேண்டும். அவன் இதுவரை நம் வாயளவு பெரிய மீன்கள் நான்கை விழுங்கிவிட்டான்” என்றது.

அப்பறவை சொன்ன திசையில் பார்க்க, அங்கே தனித்து நின்றிருந்த ஒரு சங்குவளை நாரை, பெரியமீன் ஒன்றை விழுங்க போராடிக்கொண்டிருந்தது.

“இங்கே வாயைத் திறந்தபடி நாம் சேற்றில் புதைந்திருக்கும் மீன்களையும், நண்டுகளையும் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். நம்மால் கலைக்கப்பட்டு சிதறி ஓடும் மீன்களை இந்த கொக்குகளும், நீர்காகங்களும் பிடித்துக் கொண்டிருக்கின்றன” என சலித்துக் கொள்ள, கூட்டத்திலிருந்து “ஆம். ஆமாம்… ” என கலவையான முழக்கம் எழுந்தது.

பிரதிநிதிகள் வருகை

இப்போது மீண்டும் தலைமையிடமிருந்து ஓர் அலறலொலி. இது முந்தைய அலறலைப் போலன்றி சற்று தணிந்தது போலிருந்தது. நான் அமரந்திருந்த திசையிலிந்து நான்கு நாரைகள், கூட்டத்தை நோக்கி பறந்து சென்றிறங்கின. தலைமை அவர்களை வரவேற்று பேசத் துவங்கியது.

“நானும் வரவேண்டும் என்றிருந்தேன். ஆனால் மழைக் காலங்களில் நம்மில் ஒருவராவது இங்கிருந்தாக வேண்டுமல்லவா? சரி போகட்டும். மலைகடல் கடப்போரின் பிரதிநிதிகளும் வந்திருந்தார்களா?” என்றது தலைமை.

“ஆம். இம்முறை நிறைய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இன்னும் சிலர் வழியிலிருப்பதாகவும், அடுத்த கூட்டத்தில் அவர்களும் கலந்து கொள்வார்கள் என்றும் சொன்னார்கள்” என்றது நான்கில் ஒன்று.

“நல்லது. அவர்கள் அனுபவசாலிகள்.  நம் குழப்பங்களுக்கான பதில் அவர்களிடமிருந்ததா? என்றது தலைமைப் பறவை.

“இல்லை. அவர்களிடம் நேரடியான பதிலில்லை” என வந்தவர்கள் சொல்ல சற்று நேரம் கூட்டத்தில் ஆழ்ந்த அமைதி நிலவியதைப் போல உணர்ந்தேன்.

“ஆனால், அவர்களும் வேறு சில ஏரிகளில், குளங்களில் முந்தைய பயணங்களில் இதைப் போலவே செத்து மிதக்கும் மீன்களைப் பார்த்திருக்கிறார்கள்” என்றபடி தொடர்ந்தது.
“எளிதாக கிடைக்கும் அம்மீன்களை, எச்சரிக்கையை மீறி உண்ட சிலர் உடல்நலம் கெட்டு இறந்திருக்கிறார்கள். எனவே குழுவில் இருக்கும் பறவைகளுக்கு, அதிக அளவில் செத்து மிதக்கும் மீன்களை உண்பதற்கு, தடை விதிக்கப்பட்டிருக்கிறது”.

தலைமை “அதன் காரணம் கண்டறியப்பட்டதா?” என்றது.

“அவர்களால் அறுதியாகக் கூற முடியவில்லை” என்றன வந்திறங்கியவை. 

“அவர்கள் அனுபவத்தில், மழைக்காலங்களில், நீரில் மின்னல் தாக்கிய இடத்தில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்கள் இறந்து மிதப்பதைப் பார்த்திருக்கிறார்கள். அந்த மீன்கள் உண்பதற்கு சுவையானவை என்பது அவர்கள் அனுபவம். மேலும் இப்போது நடப்பதைப் போல கொத்து கொத்தாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மீன்கள் மின்னலால் இறந்து அவர்கள் பார்த்திருக்கவில்லை” என்றது மூன்றாவது பறவை.

“மற்றொரு முக்கியமான தகவல். வறட்சி காலத்தில் சேற்றில் மூழ்கி தப்பிக்கும் மீன்கள், மின்னலால் இறப்பதில்லை. ஆனால் சமீபமாக, அவையும் பெருமளவில் இறந்து மிதப்பதை அவர்கள் கவனித்திருக்கிறார்கள். சேற்றில் மூழ்கும் மீன்களே, கோடைக்குப் பிறகான மழைக்காலங்களில் மீன்கள் நீர்நிலைகளில் மீண்டும் பெருக முக்கியக் காரணம். இந்த மீன்கள் செத்து மிதந்த நீர்நிலைகளில் மீன்கள் அருகிவிட்டதையும் மலைகடல் கடப்பவர்கள் கவனித்திருக்கிறார்கள்.”

“எங்கெல்லாம் இதுபோல் அசாதாரணமான அளவில் மீன்கள் செத்து மிதந்ததோ, அங்கெல்லாம் நீரின் நிறமும், வாசமும் மாறியிருந்தது என்பது அவர்கள் அனைவரின் பொதுவான அறிதல்” என்றன அவை.

“அவர்களிடமாவது விடையிருக்கும் என எதிர்பார்த்தோம்” என்றது தலைமை. “சரி, நம் பெண்கள் குழந்தைகளாக பெருகுகையில் கனவுகான வேண்டுமா எனக் கேட்டீர்களா?” என்றது.

“ஆம்” என்றன அவை.

“என்ன சொன்னார்கள்?”

நால்வரும் பெருமூச்சுடன் சொல்லத் துவங்கினர். “பண்ணெடுங்காலமாக, நாம் உயிர்வாழ்வதில் பெரிய இடர் தோன்றுகையில், நம் சந்ததியினர், அந்த இடரிலிருந்து மீண்டெழ உருவை, அளவை, நிறத்தை, உறுப்புகளை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு நமக்களிக்கப்பட்டிருந்தாலும், என்ன மாற்றம் தேவை என்பதை நம் முன்னோற்கள் நன்கறிந்திருந்தனர்,   என்றனர்.”

“பேருரு கொண்டிருந்த நம் மூதாதையர், ஆபத்துகளில் ஒளியவும், இருக்கும் இடம் விட்டு விரைந்து அகலவும் முடியாமல் மாண்டு கொண்டிருந்த போது, நம் மூதன்னையர் கண்ட கனவுகளில் மழலைகள் குற்றுடலும், பெருஞ்சிறகுகளும் கொண்டிருந்தனர். நாம் இன்று சிறகுகளுடன் இருப்பதற்கு அவர்களின் கனவே காரணம்.”

“பல்கிப் பெருகிய நம் முன்னோர்களுக்கு, நிலத்தில் கிடைக்கும் உணவு மட்டும் போதாமலாக, நீரிலும் பறக்கும் குழந்தைகளை அன்னையர் கனவு கண்டனர். அதனால் நம் முன்னோர் நீரையும் ஆளத்துவங்கினர். நீரில் கிடைக்கும் பலவகை உணவுகளையும் புசிக்க விதவிதமான வாய்களுடன், கால்களுடன், சிறகுகளுடன் அன்னையர் கண்ட கனவே நாம்.”

“ஆனால் நம் முன்னோர்களுக்கு பிரச்சனையும், அதன் காரணமும் தெரிந்திருந்தது. தீர்வை அவர்களின் உள்ளுணர்வு கூற அது கனவாய் மாறியது. நாமும் மாறினோம். இன்று நமக்கு பிரச்சனை மட்டும்தான் தெரியும், அதன் காரணமல்ல. எனவே தீர்விற்கான வழியும் இப்போதைக்கு இல்லை, என்றனர்”

“மேலும், நீரில் நடப்பது போலவே, நிலத்திலும் நம்வர்களின் முக்கிய உணவான பூச்சிகளும், புழுக்களும் பெருமளவில் குறைந்துவிட்டன. எனவே நாம் மீண்டும் நிலத்திற்கு திரும்புவதும் சாத்தியமில்லை, என்றனர்”.

மீண்டும் அமைதி சூழ, முதலில் சிரித்துக் கொண்டிருந்த நாரைகளிலொன்று மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தது தெளிவாக கேட்டது.

“நாம் ஏன் பிரச்சனை, காரணம் என்று தேடிக் கொண்டிருக்க வேண்டும். மீன்களும், பூச்சிகளும் இல்லையென்றால் என்ன? இந்நிலம் முழுக்க திரிந்து கொண்டிருக்கும் வாலற்ற இருகால் குரங்குகளை உணவாக்கிக் கொள்ளலாம். அன்னையரை, நம் முதல் மூதாதையை கனவு காணச் சொல்லுங்கள்” என்றதும், சிரிப்பலை அமைதியை விரட்டிப் பரவியது.

“ஆம், ஆம்” என கரண்டி வாயன்களும், மூனறு வகை கொக்குகளும் சிரித்தன. முகத்தை இருக்கமாய் வைத்திருந்த கூழைக்கடாக்கள் கூட சிரிப்பதைப் பார்த்தேன். தகைவிளான்கள் வெண்வயிறு தெரிய சிரித்தபடி பறந்தன. வலாட்டி குருவிகள் இரண்டு ஏரிக்கரையிலிருந்து உள்ளே வந்து, விஷயத்தைக் கேட்டறிந்து பலமாக வாலாட்டிச் சிரித்தபின் பறந்து சென்றன. ஆலாக்கள் தாழப்பறந்து வந்து நடப்பதை அறிந்து சிரித்தபடி மேலேறின.  சிரிப்பொலிப்பிரவாகமெடுத்து, என்மேல் பாய்ந்து மூழ்கடித்துச் சென்றது. சில நொடிகளில் நினைவு திரும்ப என் கைப்பேசி ஒலித்துக் கொண்டிருப்பதை உணரந்தேன். நண்பர்தான் அழைத்திருந்தார். எழுந்து நடக்கத் துவங்கினேன்.

சின்ன கொக்குகள் (Little Egrets)

ஏரி பறவை ஒலிகளால் நிரம்பியிருந்தது. சங்குவளை நாரைகள், பாதி நீரில் மூழ்கிய திறந்த வாயுடன் சிறுநடையிட்டுக் கொண்டிருந்தன. வெண்சிலையென நின்றிருந்தன சின்ன கொக்குகள். தூரத்தில் கூழைக் கடாக்களின் கூட்டம். ஆங்காங்கே செந்நீல நாரையும், சாம்பல் நாரையும் இருந்தன. கரண்டிவாயன்களின் குறுங்குழுவை கடந்து சென்று நடைபாதையின் எல்லையை அடைந்தேன்.

நடைபாதையை விட்டு இறங்கும் முன் தன்னிச்சையாக ஏரியினுள் சென்ற கண்கள் திகிலுடன் திரும்பின.

நத்தைக்கொத்தி நாரை (Asian open bill)

உள்ளே, எனக்கு சற்று அருகே வானில், குளிர்ந்த கருமைமின்னும் கண்களில் கனவை சுமந்தபடி சென்று கொண்டிருந்தது ஒரு நத்தைக் கொத்திநாரை!

eBird trip report: https://ebird.org/checklist/S405173784


லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்,
சென்னை,
25.10.2026