தியோடர் சாருடன் நேற்று உரையால் முடிந்த கையுடன் இன்று காலை சோழிங்கநல்லுர் அருகில் உள்ள சதுப்பு நிலத்திற்கு பறவை பார்க்கச் சென்றோம். இவ்விடம் 1200 ஏக்கர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தெற்குக் கோடி முனையில் உள்ளது. இதன் கிழக்கு பகுதியில் கல்லூரி வலாகம், தெற்கில் அடுக்கு மனைகள் உள்ளன. மேற்கில் சிறு ஏரியும், வடக்கில் நான்குவழிச் சாலையுமாக நடுவில் சதுப்புநிலத்தின் சிறு பகுதி உள்ளது. நாணல் போன்ற சம்பு (Typha angustifolia) முன்னாலிருக்க மற்ற நீர் தாவரங்கள் பின்னாலிருந்தன. ஆங்காங்கே மண் திட்டுக்களும் உண்டு. இவ்விடம் பாதுகாக்கப்பட்ட சதுப்பு நில பகுதியை சார்ந்தது.
அதிகாலை பெய்த மழையும், மேக மூட்டமும் காலை பொழுதை இனிதாக்கியது. குழந்தைகள் மூவரும் பெரியவர்கள் ஐவருமாக பறவைகளை நோக்க ஆரம்பித்தோம். சாம்பல் நாரை (Grey Heron) ஒன்று தண்ணீரின் நடுவில் இருந்த தொட்டியின் மேல் நின்று கொண்டிருந்தது. தனது கழுத்தை உள்ளிழுத்து தலையை மறுபுறம் திருப்பி நின்று கொண்டிருந்தது. புள்ளி மூக்கு வாத்துகளின் (Spot billed duck) தலையும் வாலும் தண்ணீரின் உள்ளே மூழ்கி இருக்க உடல் மட்டும் ஆமை போல் தெரிந்தது. இந்த வாத்துக்கள் எல்லாமே இப்படித்தான் இருந்தன.
“Jizz” என்ற வார்த்தையை அகல்யா எங்களுக்கு அறிமுகப் படுத்தினார். அருகில் நீல வால் பஞ்சுருட்டன் (Blue tailed bee-eater) அமர்ந்திருக்க, கூர்ந்து பார்க்காமலே பெயர் நினைவு வந்தவுடன் “Jizz” என்று நினைத்துக் கொண்டேன்.

பறவைகள் இன்று குறைவு என்று விஜய் வருத்தப்பட, யாரும் அதை பொருட்படுத்தாமல் அவரவர் ஒவ்வொன்றில் மூழ்கி இருந்தனர். அகல்யாவும் அதித்தியும் ஒரு பூவை பறித்து என்ன என்று கேட்க, குட்டி மஞ்சு தனது அப்பாவின் பாத நாற்காலியில் அமர்ந்து நடப்பது அனைத்தையும் நோட்டமிட, தெற்கு கரையோரம் நின்ற பறவைகளை நாங்கள் நோட்டமிட்டோம்.
வெள்ளை அரிவாள் மூக்கன் (Black headed Ibis), சிறிய அரிவாள் மூக்கன் (Glossy Ibis), சங்குவளை நாரை (Painted Stork), மடையான் (Pond Heron), பவளக்கால் உள்ளான் (Black winged stilt) பறவைகளை கண்டோம். எங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன எங்கள் அருகில் வந்து இறங்கிய இரு வாத்துக்கள். சீழ்க்கை வாத்து (Whistling duck) என்று ஜிஸ்ஸாக, வழக்கமான குழப்பம் எழுந்தது. சீழ்க்கை சிறகியா (Fulvous whistling duck) அல்லது சின்ன சீழ்க்கை சிறகியா(Lesser whistling duck) என்று. வெள்ளை பிட்டம் (rump) ·V வடிவில் அழகாய் தெரிய, அதன் இறகுகள் கருப்பை ஒத்த நிறத்தில் இருக்க, மெர்லின் சீழ்க்கை சிறகி என உதவியது. எங்கள் முன் அழகாக வந்திறங்கிய இந்த சீழ்க்கை சிறகியில் இனி குழப்பமில்லை.
தொடர்ந்து நடந்து சென்று தாழைக்கோழி (Eurasian Moorhen) , கறுப்பு தாமரைக்கோழி (Bronze winged jacana), நாமக் கோழி (Eurasian coot) பார்த்து விட்டு நடந்தோம். கதிர்குருவி (Plain prinia) மற்றும் சாம்பல் கதிர்குருவி (Ashy prinia) சம்பு புதர்களில் தொடர்ந்து பார்த்து வந்தோம். பாதையின் அருகில் இருந்த சர்க்கரை பழ மரத்தை குழந்தைகள்காண்பிக்க, அதில் சின்னான் (Red vented bulbul) சிகப்பு பழத்தை அழகாய் விழுங்கிய காட்சியில் நின்றோம். தேடிப் பிடித்து கனிந்த பழங்களை விழுங்கிய படி இருந்தன இந்த பறவைகள்.
பேருந்து நிறுத்தத்தில் இடம் கிடைக்க குழு சென்று வசதியாய் அமர்ந்தது. விஜய் gap filling பற்றி பகிர்ந்து கொண்டிருந்தார். தண்ணீர்க் கோழியின் (Watercock) தலை மகுடம் வைத்தார் போல தெரிய உரையாடலில் இருந்து கலைந்தோம்.
இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஆக கிளம்பலாம் என தயாராக, மஞ்சுவின் கால் இருக்கையின் கம்பிகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்டது. சிறு போராட்டத்திற்கு பிறகு, அவள் மகிழ்ச்சியாய் வெளியே வர, ஆரம்பித்த இடத்திற்கே திரும்பி வந்தோம். சாம்பல் நாரை மட்டும் அதே இடத்தில்.
மொத்தமாக 30 பறவை இனங்களை பட்டியலிட்டிருந்தோம். https://ebird.org/checklist/S271143063
புத்தகங்கள், பறவை வகுப்பு, அடுத்த பயணம் இப்படி பேச்சினூடே விடை பெற்றுத் திரும்பினோம்.
மற்றுமொரு பயணத்தை எதிர்நோக்கி.