ஒன்றும், ஐந்தும்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு – வழுதிகைமேடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை பறவைகளைப் பார்த்து பதிவு செய்யாத இடங்களை நிரப்புவதற்காக,  வழுதிகைமேடு எனும் கிராமத்திற்கு
6 ஜூலை 2025 அன்று காலை புலரிக்கு முன் சென்றிருந்தேன்.

கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பணைப் பகுதியிலிருந்து பறவைப் பார்த்தல் துவங்கியது. ஆற்றில் நீரோட்டம் நின்றுவிட்டிருந்தது. தடுப்பணைக்கு முன் நீர்த்தேக்கமும் அதற்கு எதிரே பொட்டல்வெளியும் என விரிந்த நிலப்பரப்பு. விரிநிலங்கள் நம்மையும் அகத்தே விரிய வைப்பவை என்பதை அனுபவத்தில் உணரமுடியும்.

தடுப்பணைக்கு இறங்கிச் செல்லும் முன் ஓர் ‘எங்கேயோ கேட்ட குரல்’. அதிக சிரமமில்லாமல், சற்று தொலைவில் சிறுநடையிட்டுக் கொண்டிருந்த நெல்வயல் நெட்டைக்காலி-யை (Paddy field pipit) கண்டுகொண்டேன். பச்சைப்புல்வெளி பகைப்புலமாய் மாறி அதைக் காட்டிக் கொடுத்துவிட்டது. ஆனால் அப்பொழுது தெரியாது ஒன்று, ஐந்தென அவதரிக்கும் விந்தை கீழே காத்திருக்குமென.

நீரும் நிலமும் எதிரெதிரே இருக்கையில் எப்பொழுதும் நான் நீரை நோக்கி ஈர்க்கப்படுவது ஓர் விந்தைதான். நிலம் எப்போதுமென கிடக்கிறது. ஆனால் நீர் மேற்பரப்பில் அலையடித்துக் கொண்டே இருக்கிறது. எங்கோ கிளம்பிக் கொண்டிருப்பதைப் போல, சற்று தாமதித்து வந்தால் அங்கே அது இருக்காதென்பதைப்போல.

கருந்தலை அன்றில்கள் (Black headed ibis) கிழக்கு நோக்கி சென்று கொண்டிருந்தன. பாம்புதாராவும் (Oriental darter) சிறிய நீர்காகமும் (Little cormorant) கரையில் சிறகுகாய்ந்து கொண்டிருக்க, நெடுங்கால் உள்ளான் (Black winged stilt) இருகால் ஒன்றாக ஏகபாத தவத்தில் இருந்தது.

கருந்தலை அன்றில்கள் (Black headed ibis)
Left – பாம்புதாரா (Oriental darter), Right – சிறிய நீர்காகம் (Little cormorant)
நெடுங்கால் உள்ளான் (Black winged stilt)

இதற்கிடையே பின்புறம் நிலத்திலிருந்து ஓயாத அழைப்பு. Merlin செயலி ஒலிவழி பறவைகளை அடையாளம் கண்டு, அதை நான் காண்பதற்காக காத்திருந்தது. பொதுவான பார்வைக்கு நெட்டைக்காலி மட்டும்தான் உலவிக் கொண்டிருக்கிறது என நினைத்த எனக்கு ஆச்சரியம். வடிவ ஒற்றுமை கொண்ட மேலும் சில பறவைகளை Merlin அடையாளம் கண்டு வைத்திருந்தது.

ஜொர்டான் புதர் வானம்பாடி (Jordan bush lark) -ஐ நான் இதற்கு முன்பே பார்த்திருந்ததால் சற்று கவனித்ததில் அடையாளம் கண்டு கொண்டேன். இம்முறை நண்பர் மதன் தனுஷ்கோடி அவர்கள் மஞ்சள் குருகு-வை அடையாளம் காண உரைத்த கண்களை வைத்து வேற்றுமை காணும் முறை உதவியாய் இருந்தது.

ஜொர்டான் புதர் வானம்பாடி (Jordan bush lark)

மூன்றாவதாக சாம்பல் தலை வானம்பாடி (Ashy crowned sparrow lark) யைப் பார்த்தேன். நல்வாய்ப்பாக ஆண்பறவை காணக் கிடைத்தது.

சாம்பல் தலை வானம்பாடி (Ashy crowned sparrow lark)

பொதுவாக ஆண் பறவைகள் தெளிவான உருவ அமைப்புடன் நம்மை குழப்பி அலைகழிக்காமல் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளும். இந்த பெண்கள் இருக்கிறார்களே…… பறவைகளைச் சொன்னேன்.

நான்காவதாக தூக்கணங்குருவி (Baya weaver). இதை நான் நெட்டைக்காலி என தவறாக அடையாளம் கண்டுகொண்டேன். ஆனால் பட்டியலில் நான் பகிர்ந்த படத்தைப் பார்த்து நண்பர்கள் திருத்தினார்கள். 16 ஜூலை அன்று மீண்டும் இவ்விடம் செல்ல வாய்பமைந்ததால் இன்னுமொரு முறை உறுதிபடுத்திக் கொண்டேன்.

ஐந்தாம் பறவையை பார்த்த நிகழ்வு அந்நாளின் உச்சம். Merlin நான் இதுவரை பார்த்திராத ஒரு பறவையை பரிந்துரைத்தது. உருவத்தைப் பார்த்து கண்டுபிடிக்கலாம் என்றால் ஏற்கனவே மூன்று பறவைகளை அதே உருவ அமைப்பில் பார்த்தாயிற்று. இனி ஒலிதான் ஒரே வாய்ப்பு. Merlin-ஐ வைத்து ஒன்றிரண்டு முறை பறவையின் அழைப்பொலியை கவனித்துக் கொண்டேன். பின் அவ்வொலியை கவனிக்கத் தொடங்கினால் அடுத்த இடர். என் தலையைச் சுற்றி ‘surround sound system’ – தமிழில் சூழொலி அமைப்பு என்கிறார்கள் – அமைத்து போல் அனைத்து திசைகளிலிருந்தும் பறவையின் அழைப்பொலி கேட்டது. அண்மையில் அடுத்து சேய்மையில் மீண்டும் அண்மையில் என கேட்ட ஒலி தலையை சுற்ற வைத்தது.

விசிறிவால் கதிர்குருவி (Zitting cisticola) எனும் இப்பறவைக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது, ‘கருங்கொட்டு கதிர்குருவி’. அது என்ன கொட்டு? ஒருவேலை பழந்தமிழ் வாத்தியமான ‘கொட்டு’ ஒலி இதன் ஒலி போல் இருந்திருக்குமோ? என்னைப் பொருத்தவரை நாம் ‘உச்சி கொட்டும்’ ஒலி இப்பறவையின் ஒலிக்கு மிக நெருங்கி வருகிறது.
பார்க்க: https://youtu.be/lgxir5_3K5o?si=NDdyVigJV_NeNuiR

சுமார் 20 நிமிட தலைச்சுற்றலுக்குப்பின் என்மேல் கருணை கொண்டு இரு பறவைகள் புதரிலிருந்து வெளியேறி ஒரு பாறை மேல் அமர்ந்து எனக்கு தரிசனமளித்த பின், சட்டென புதரினுள் மறைந்தது. ஒரு தெளிவான புகைப்டத்திற்கு கூட அனுமதி கிடைக்கவில்லை. கிடைத்து இவ்வளவுதான்.

விசிறிவால் கதிர்குருவி (Zitting cisticola)

ஒரு சூழல், ஏறத்தாழ ஒன்று போன்ற ஐந்து வெவ்வேறு பறவையினங்கள். ஏன் இத்தனை?
இதற்கு அறிவியலில் பதில் இருக்கலாம். தோற்றத்தை அதன் வாழிடம் தீர்மானிக்கிறது என, அலகை அதன் உணவு தீர்மனிக்கிறது என, இன்னும் எத்தனையோ இருக்கலாம். அவை ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அவ்வளவுதானா?

எனக்கு இது இயற்கையின் அழைப்பு. முடிவிலாத சாத்தியங்களின் அணிவகுப்பு. அது அளிக்கும் தூய, பிறிதொன்றிலாத மகிழ்ச்சியும், நிறைவும். நாளை ஓர் அறியாத அன்னிய இடத்தில் உருவாகும் இயல்பான பதற்றத்தை ஒரு கருங்கொட்டின் உச்சுக்கொட்டல் இல்லாமலாக்கிவிடலாம். வெட்டவெளியில் பொதுவாக ஒலித்தாலும், அதன் அழைப்பு எனக்கு மட்டும், நான் இருக்கிறேன் எனக் கேட்கும்.

மிக அந்தரங்கமாக…

eBird Checklist:
https://ebird.org/checklist/S257368929
https://ebird.org/checklist/S260476808
https://ebird.org/checklist/S260477210
https://ebird.org/checklist/S260477395

லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்
சென்னை
19.07.2025