பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு – அகமதாபாத்

இன்று காலை சபர்மதி ஆற்றின் கரையோரம் பறவைகள் பார்க்க துவங்கியதும் முதலில் கண்டது ஒரு தகைவிளானை (Swallow). சிறகுகளின் வடிவம், சட்டென ஒடிந்து திரும்பும் லாவகம், வெள்ளை அடிவயிறு… நிற்க. வாலிலென்ன இரு கம்பிகளா? என தொலைநோக்கியை சரிசெய்வற்குள் பாலத்தின் அடியே சென்று மறைந்தது.
ஏமாற்றத்துடன் சற்று நேரம் காத்திருந்தேன். ஒரு புள்ளி மூக்கு வாத்து (Spot billed duck), சில ஆலாக்கள் (terns) கடந்து சென்றன. நகர மனமில்லாமல் அங்கேயே நின்றிருந்தேன். நேரம் கரைந்து கொண்டிருந்தது. நான் இன்னும் துவங்கவே இல்லை. கால்களால் மனதை உந்தி முன்னகர்ந்தேன்.
நாற்பது, நாற்பத்தைந்து நிமிடங்கள் கடந்திருக்கும். ஆற்றையொட்டிய பூங்காவெங்கும் பறவைகள் நிறைந்திருந்தன. சிவப்புமூக்கு ஆள் காட்டியையும் (Red wattled lapwing), கள்ளிப்புறாவையும் (Laughing dove) மிக அருகே பார்த்தேன். இங்கே சிட்டுக் குருவிகளுக்கு (House sparrow) ஓமப்பொடி போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


சைபீரியன் கல்குருவி-யை (Siberian stonechat) முதன்முறையாக பார்க்கிறேன்.

நினைத்து வந்ததை விட அதிக நேரம் கடந்துவிட்டது. உடன் வந்தவர் விடுதியிலிருந்து அழைத்து ‘இன்னும் எழுந்திரிக்கலயா? சீக்கிரம்’ என அவசரப்படுத்தினார். நான் தங்கும் விடுதியிலிருந்து 4 கிமீ தொலைவில் இருக்கிறேன். சரி முடித்துக் கொள்வோம் எனத் திரும்ப, வானிலிருந்து ஒரு நீல இலை சரிந்திறங்கியது.

தற்செயல் என்பதுதான் என்ன? காரணம் – விளைவு எனும் தொடர் நிகழ்வில் நம்மால் தர்க்கப் பூர்வமாக விளக்கமுடியாமல் ஒரு நிகழ்வு விடுபடுமேயானால் மேலும் மூளையைக் குழப்பிக்கொள்ளமல் அதைத் தற்செயல் எனும் வார்த்தையால் மூடி மறைத்துக் கொள்கிறோம். ஒருவேளை அந்த விடுபட்ட நிகழ்வை தர்க்கத்திற்கு பதில் உணர்வைக் கொண்டு இணைக்க முடியுமெனில்?
இதோ.. என்னை வரவேற்ற அந்தப் பறவை வழியனுப்ப வந்திருக்கிறது. அணையும் அந்தியென ஆழ்ந்த செம்பழுப்புத் தலை, தும்பையை ஒத்த மார்பும், வயிறும். கருமையின் விளிம்பில் நின்றுவிட்ட நீலச் சிறகுகள். தொலைநோக்கி வழியே முழுதும் தரிசித்தாயிற்று. கம்பிவால் தகைவிளான்-தான் (Wire tailed Swallow).

அப்பறவை நதியின் உள்ளே ஒரு கைப்பிடி முனையில் நின்றிருக்க, நான் தொலைவில் சற்று உயரே பூங்காவின் எல்லையில் நின்றிருந்தேன். கைப்பேசியின் படக்கருவி தன் எல்லையை உணர்த்தியது. பறவையின் அருகே செல்ல பல படிகள் இறங்கி, நடுவே உள்ளத் தடுப்பைத் தாண்டிச் செல்ல வேண்டும். ஏற்கனவே அங்கே இளம் ஜோடிகள் கைக் கோர்த்தபடி நதியின் ஒருமுனையிலிருந்து பறவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். எப்படியும் எனக்குமுன் பறவையை அவர்கள் நெருங்கிவிடுவர். அனைத்து அவ-கணக்குகளையும் புறந்தள்ளி பறவையை நோக்கி விரைந்தேன்.
படிகள் தாண்டி, தடுப்பைக் கடந்து, ஒரு ஜோடியை இரண்டாய்ப் பிளந்து, தரையில் ஒரு கால் மடக்கி மண்டியிட்டேன். ஒருவேளை, ஜோடியின் ஒரு பாதி, நான் பையிலிருந்து என்ன எடுக்கப் போகிறேனோ என கலவரமடைந்திருக்கலாம். கைப்பேசியை எடுத்து பறவையை படம் எடுத்ததைப் பார்த்த மற்றொறு பாதி ஏமாற்றமடைந்திருக்கலாம்.
ஆனால், நானும் அந்தப் பறவையும் இவ்வுலத்தில் இல்லை. இதுவரை தகைவிளானை அவ்வளவு நெருங்கி நான் பார்த்ததில்லை. அப்பறவையும் இவ்வளவு நெருக்கத்தில் இன்னொரு மனிதனை கண்ணோடு கண்நோக்கியிருக்குமா எனத்தெரியவில்லை. திருவள்ளுவர் இந்நிலையில் வாய்ச் சொற்கள் பயனிழக்கின்றன என்கிறார். சொற்கள் எனும் சொல் அக்குறளை மனிதனுக்கு மட்டும் என சுருக்கிவிடுகிறது. உண்மையில் அனைத்துயிர்களுக்கும் இது பொருந்தும் தானே.

அறியாத நிலத்தில், தெரியாத மொழியில், முன் பின் அறிமுகமற்ற இருவர், உணர்வுகளை எவ்வித ஊடகத்தாலும் மற்றவருக்கு கடத்திவிட முடியாத கையறுநிலையில், கண்கள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்ட கணத்தில், பெருநிறைவொன்று மின்னலென உள்ளிறங்க, எங்கள் மூளையை மேலும் குழப்பிக் கொள்ளாமல் அந்த தற்செயலை வாழ்த்தி, நாங்கள் இருவரும் மானசீகமாக கைகுலுக்கி, ஆரத்தழுவி, விடைபெற்றுப் பறந்தோம்.
eBird Checklist: https://ebird.org/checklist/S268573964
லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்
அகமதாபாத் (Riverfront park)
குஜராத்
21.08.2025