பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு – அண்ணாநகர், சென்னை
‘உனக்கு சந்தோஷம் தருவது எதுவோ
அதுவே உனக்கு சூரியன்
உதாரணமாக ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்
ஒரு பப்பாளிப்பழம்
ஒரு நண்பனின் முகம்
ஒரு டம்ளர் தண்ணீர்
இன்னும்
காகிதத்தில் பொதியப்படாத கவிதைகள்….’
சூரியமறைவுப்பிரதேசம் – தேவதேவன்.
கடந்த ஒரு வாரம் என் வாழ்வின் சோர்வான நாட்கள். அம்மா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நானும் உடன் தங்க வேண்டியதாயிற்று. தமிழகமே ஐந்து நாள் விடுமுறையில் என்ன செய்வதென்றறியாமல் அலை மோதிக் கொண்டிருக்க, போட்டிருந்த அனைத்து திட்டங்களையும் ஒத்திவைத்துவிட்டு அம்மாவுடன் இருந்தேன். ஒரே ஆறுதல், ஷாஜி-யின் ‘இசைக் கட்டுரைகள்’. அப்புத்தகத்தின் வழி எட்டுக்கு எட்டு அறையிலிருந்து உலகமெங்கும் உலவிக் கொண்டிருந்தேன்.
இன்று காலை எழுந்தவுடன் சற்று நடந்துவிட்டு வந்தாலென்ன என்று தோன்ற, சற்றே தேறிய அம்மாவிடம் சொல்லிவிட்டு மருத்துவனையிலிருந்து வெளியேறி நடக்கத்துவங்கினேன். சற்று முன் உதித்த சூரியன் உயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடங்களின் கண்ணாடிகளில் செம்பொன்முலாம் பூசிக் கொண்டிருந்தான். சற்றே நடந்து ஒரு சந்திப்பில் திரும்பும் போது காகங்கள் கூட்டமாய் ஒரு கடையினருகே தரையில் ஏதோ கொத்திக் கொண்டிருப்பதை கண்டேன். சென்னையில் சாதாரணமாய் கணக்கிடைக்கும் காட்சிதானிது. யாரோ ஒருவர் காராசேவை கனிவுடன் காகங்களுக்காக இறைத்துச் சென்றிருந்தார்.
இயல்பாக பார்த்தபடி கடந்து செல்கையில் என் அகம் எதையோ கவனித்துவிட்டிருந்தது. நின்றேன்.
ஒரு காகம் தனித்துத் தெரிந்தது. நிறமா? அளவா? அலகா?
சுற்றி நின்ற பத்துப் பதினைந்து காகங்களுக்கும் இதற்கும் பெரிதாக ஒன்றும் வேறுபாடு தெரியவில்லை. காகங்கள் அதன்பாட்டுக்கு நடந்தபடி ‘சேவை’ கொத்திக் கொண்டிருக்க இது மட்டும் தவிட்டுக் குருவியைப் போல் தத்தியது!
இணையம், பறவைகள் தங்கள் கால்களைக் கொண்டு நகர்தலை கீழ்காணும் வகைகளாகப் பிரிக்கிறது.
1. நடத்தல் (Walking) – காகம், மைனா, புறா
2. தத்துதல் / தாவுதல் (Hopping)- சிட்டுக் குருவி, தவிட்டுக் குருவி
3. (நீரில்) அலைதல் (Wading) – கொக்குகள், நாரைகள்
4. புடையசைவாட்டநடை (Waddle) – வாத்து, அன்னம்
5. ஓடுதல் (Running) – நெருப்புக் கோழி
6. மரமேறுதல் (Climbing) – மரங்கொத்தி
பறவைகளின் வாழிடம், உணவு போன்றவை அதன் உடலமைப்பையும், அதற்கேற்ப பறவைகளின் நகரும் முறையையும் தீர்மானிக்கின்றன எனில், நகர்தலின் இயல்பு மாறுதலை தீர்மானிக்கும் காரணிகள் எவை? என மண்டையை உடைத்துக் கொள்வதற்கு இடம் தராமல் அந்த காகம் சற்றே கூட்டத்திலிருந்து விலகி முன்னே வந்து தனக்கிருந்த ஒரே ஒரு காலைக் காட்டி பின் கூட்டத்தினுள் கலந்தது!

நான் முறையாக பறவைப் பார்த்தலில் ஈடுபடத்துவங்கியதிலிருந்து காகங்கள் எனக்களித்த ஆச்சரியங்கள் பல.
மாமல்லபுரத்தில், பனைமரங்கள் செறிந்த ஓர் பகுதியில் இனந்தெரியாத பறவைப்போல் குரலெழுப்பி என்னையும், Merlin செயலியையும் தலை சுற்றவைத்தது ஒரு காகம்.
அம்பத்தூரில், ஒரு தென்னைமரத்தில் அதன் பட்டையிலிருந்து உரிந்த இழையை அலகால் கவ்வியபடி ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது மற்றொரு காகம்.

புழலேரியில் நீரின் நடுவே, மேலே நீட்டியபடி இருக்கும் காய்ந்த செடிகளிலும், உயர் மின்னழுத்த கோபுரங்களிலும், இறகு காய்ந்து கொண்டிருக்கும் நீர்காகங்களுடன், ஒரு நீர்காகத்திற்கு மூன்று அல்லது நான்கு வீதம் இந்த காகங்களும் அமர்ந்திருப்பதை பார்த்திருக்கிறேன். இவை இங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றன எனக் கேள்வியெழும்.

ஒருநாள், இலக்கில்லாமல் நீரின் மேல் தொலைநோக்கி வழி துழாவுகையில், ஒரு காகம் நீரை காலால் கிழித்தபடி பறந்துவந்து மின் கோபுரத்தின் அடியில் அமர்ந்தது. அருகிலிருந்த இராக்கொக்கு (Black crowned night heron) அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க தான் கொத்தி வந்த மீனை காலால் பிடித்தபடி உண்டு கொண்டிருந்தது.

காகங்கள் தரும் ஆச்சரியங்கள் அளவற்றவை. அதற்கு அறிஞர்கள் காகங்களின் மூளையில் உள்ள சிறப்புப் பகுதியைக் (நிடோபோடாலியம்) குறிப்பிட்டு அதன் அறிவுத்திறனுக்கு சான்றுரைக்கின்றனர். அனைத்துண்ணி, சமூகமாக வாழும், கருவிகளை கையாளும், ஒலிகளை நகலெடுக்கும், புது சாத்தியங்களை முயன்று பார்க்கும், இன்னும் எத்தனை?
எண்ணுகையில், இவையனைத்தும் மனிதற்களான நம்மியில்புகளும்தான்.
பறவைகளுக்கான தமிழ் பெயர்கள் பற்றி ஒருமுறை தியோடர் பாஸ்கரன் அவர்கள் குறிப்பிடுகையில், ‘தொலைநோக்கி கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முந்தைய காலங்களில், மனிதர்கள் தங்களின் பார்வைக்கெட்டும் தூரத்தில் இருந்த பறவைகளை அவதானித்து அவற்றிற்கு பெயர்களிட்டனர். தொலைநோக்கி வழியே மட்டும் அறியக்கூடிய நுண்ணிய வேறுபாடுகள் கொண்ட பறவையினங்களுக்கு பெயரிடப்பட்டிருக்க சாத்தியமில்லை’ என்றார்.
பறவைகளுக்கும், மனிதனுக்குமான பௌதீகமான தூரம் பறவைகளை அவதானித்தலையும், அறிதலையும் பாதிக்கும் எனக் கொண்டால், மனிதனின் அதிகபட்ச அறிதலுக்கு சாத்தியமான பறவைகளில் ஒன்றென நிச்சயமாக காகங்களைக் கூறலாம்.
குழந்தைகளுக்கு சொல்லும், கூழாங்கற்களை கொண்டு ஜாடியை நிரப்பி நீரெடுக்கும் காகத்தின் கதை முதல், மூதாதையரின் மறுவடிவம் வரை நம் பண்பாட்டில் காகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடத்திற்கு அதன் அணுக்கம் கூட ஓர் காரணமாய் இருக்கக்கூடும் என ஊகிக்கலாம்.
இவையெல்லாம் இருக்கட்டும். இத்தகைய தகவல்களையும், அனுமானங்களையும் கொண்டு நான் எதை நிறுவிக்கொள்ள முயல்கிறேன்? ஒற்றைக் கால் கொண்ட காகம், இவ்வுலகில் இன்னும் பிழைத்திருப்பதன் சாத்தியங்களை பட்டியலிடுகிறேனா? இவ்வளவு திறன் கொண்ட காகங்கள் ஒரு சிறு அங்க குறைபாட்டை சமாளிக்க முடியாமல் போய்விடுமா என எனக்கே சமாதானம் சொல்லிக் கொள்கிறேனா?
தெரியவில்லை. சோர்வுடன் நடந்து கொண்டிருந்த என்னை அக்காகக் கூட்டத்தின் முன் நிற்க வைத்தது, இப்போது பட்டியலிட்டுக் கொண்டிருக்கும் தர்க்க புத்தியல்ல. தர்க்கமும், நேரமும் நேர்விகிதத்தில் வளர்பவை. அறிவியலும், தத்துவமும் தம்மை விளக்கிக் கொள்ள அதிக நேரத்தைக் கோருவது. ஆனால் அவற்றின் ஆதாரக் கருத்துகள் உதிப்பது மின்னற்பொழுதில்!
அக்காகத்தை நான் ஒரு மின்வெட்டு போலவே உணர்ந்தேன். எதிர்மின்னூட்டம் கொண்ட ஒன்று நேர்மின்னூட்டம் கொண்ட மற்றொன்றை அசுரகதியில் அடைவது போல, அக்காகம் என் கருத்தை அடைந்தது.
அதன் பின் என்னுள் வெளிப்படையாகவே மாற்றத்தைக் காணமுடிந்தது. நெடுநாள் கழித்து e-bird செயலியை திறந்து ஒரு பட்டியலிட்டேன். முடிக்காமல் விட்டிருந்த சில வேலைகளை ஊக்கத்துடன் முடித்தேன். இதோ இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
என் கண்களுக்கு இணையாகவே, கைப்பேசியின் படக்கருவியில் காட்சிகளை பதிந்து கொள்ளும் நான், அந்த காகத்தைப் படமெடுக்கவில்லை. அந்த எண்ணமே அப்பொழுது வரவில்லை. ஏனென்று ஆச்சரியத்துடன் இப்பொழுது எண்ணிக் கொள்கிறேன். ஒரு வேளை அந்த காகத்தைப் படமெடுத்திருந்தால், ஏற்கனவே இருக்கும் நூற்றுக் கணக்கான பறவைகளின் படங்களுடன் அதுவும் ஒன்றாக கலந்து கரைந்துவிடுவதை என் மனம் விரும்பாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் இப்பொழுது எனக்கே எனக்காக, மனதில் இருள் கவியும் போதெல்லாம் ஒற்றைக்காலில் உதிக்கும் சூரியனாக அக்காகம் கறுநிற ஒளியுடன் பிராசித்துக் கொண்டிருப்பதை அகத்தே உணர்கிறேன்.
eBird Checklist: https://ebird.org/checklist/S277735919
லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்,
அண்ணாநகர், சென்னை,
07/10/2025