பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு – ஹைதராபாத்

இன்று அதிகாலை…. என ஆரம்பிக்கும் முன் முக்கியாகமாக ஒன்று சொல்ல வேண்டியுள்ளது. பின்னர் கட்டுரை செல்லும் போக்கிலிருந்து அது விலக்கிச் செல்வதாக ஆகிவிடக்கூடும்.
இங்கே ‘ஹிரானி ச்சாய்’ என்று ஒருவகை தேனீர் தருகிறார்கள். அது இஸ்லாமியர்களின் இந்திரலோக அமிர்தம் என நினைக்கிறேன். என்ன ஒரு சுவை..! எண்ணுகையிலேயே எச்சில் ஊறுகிறது.
கட்டுரைக்கு வருவோம். இன்று அதிகாலை, ஹைதராபாதில் இருக்கும் ஹுசைன் ஏரிக்கு பறவைகள் பார்க்கச் சென்றிருந்தேன். இருசக்கர வாடகை வாகனத்தில் அழைத்துச் செல்ல வந்தவர், அங்கே ஏன் செல்கிறீர்கள் என தெலுங்கிலும், இந்தியிலும் கேட்க, இரண்டு மொழியும் எனக்குத் தெரியாததால் ‘பறவைகள் பார்க்க’ என ஆங்கிலத்தில் பதிலளித்தேன். அவர் ஆர்வமுடன் “Pigeons?” என்றார். அந்த நகரம் முழுவதும் அவை நூற்றுக் கணக்கில் அலைந்து கொண்டிருக்கின்றன. நான் சற்று விழித்துவிட்டு “No.., Egret, Heron, Stork” என்றேன். ஒருமுறை திரும்பிப் பார்த்த அவர், இறக்கிவிடும் வரை என் பக்கம் திரும்பவேயில்லை. ஒருவேளை உள்ளூர் மொழியில் எனக்கு பறவைகள் பெயர் தெரிந்திருந்தால், உரையாடலும், நட்பு வட்டமும் மேலும் வளர்ந்திருக்கலாம். சில பறவைகளின் மொழி (ஒலி) (உதாரணமாக குயில், நாகனவாய் போல) உலகெங்கிலும் ஒரே போல் இருப்பது உண்மையில் நல்லூழ்தான்.
‘e Bird’ செயலியின் ‘Hot spot’ என்னை ‘Lake Front Park’ எனும் பூங்காவிற்கு அழைத்துச் சென்றது. 50 ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளே நுழைந்தால், பூங்கா மிகச்சிறப்பாக பராமரிக்கப்பட்டிருந்தது. நுழைந்ததுமே தரையில் திரிந்து கொண்டிருந்த இரு மணிப்புறாக்கள் (Spotted dove) கண்ணில்பட்டன. ஒரு குயில் (Asian koel) பறந்து வந்து கிளைகளின் நடுவே புகுந்து மறைந்தது. தையல் சிட்டு (Tailor bird) குரலை மட்டும் அடையாளம் காட்டி முகத்தைக்காட்டாமல் சென்றது.

நான் நீர்ப் பறவைகளையே நினைத்துக் கொண்டு வந்திருந்ததால், ஏரியின் அருகில் செல்ல விரைந்தேன். பூங்காவின் உள்ளேயே இரும்பு பாலங்களை ஏரியின் விளிம்பு வரை சென்று திரும்பும் வண்ணம் அமைத்திருந்தனர். ஏரியை இருவேறு முனைகளிலிருந்து பார்க்க முடிந்தது. ஆனால் ஏரியை பார்த்த எனக்கு ஏமாற்றம்தான். உதிரியாக சில நாமக் கோழிகள் (Eurasian coot), மூன்று புள்ளி மூக்கன்கள் (Spot billed duck) மற்றும் சில தகைவிளான்களும் (Swallow) உழவாரப்பறவைகளும் (Swift). ஆனால் திகைக்க வைக்கும் அளவுக்கு ஏரி நீர் அசுத்தமாயிருந்தது. போதாத குறைக்கு மிட்டாய் வண்ணம் கொண்ட பெரிய விநாயகர்கள், ஹுசைனில் சங்கமித்துக் கொண்டிருந்தனர். ஏரியின் கரைகள்யாவும் குப்பைமலைகளாய் இருந்தன. குப்பை தீவுகளில் சில உண்ணி கொக்குகள் (Cattle Egret) இரை தேடிக் கொண்டிருந்தன.
சோர்ந்திருந்த என்னை, திடீரென பல குரல்கள் பின்னாலிருந்து அழைப்பதைக் கேட்டேன். இப்பொழுதெல்லாம் பறவைகளின் குரலுக்கு செவிமடுப்பதென்பது அனிச்சை செயலாகிவிட்டது. என்னை சுற்றிலும் பூக்கள் நிரம்பிய வனம். இரும்பு பாலங்களின் வழி மரங்களின் உயரத்திற்கு இணையாக நடக்க முடிகிறது. எனவே இன்றைய பயணத்தை நீரிலிருந்து நிலத்திற்கு மாற்றியபடி முன்னேறினேன்.
ஒரு பெண்குயில் (Asian koel – female) என்னைக் கடந்து சென்று ஒரு கிளையின் மடிப்பில் அமர, நான் மெதுவாக பின் தொடர்ந்தேன். அங்கிருந்து ஒன்று, மற்றொன்று என தாவிப் பறந்து இறுதியாக காய்கள் நிரம்பிய ஒரு மரத்தில் சென்றமர்ந்தது. ஒரு மரத்தின் கிளை என்னை மறைத்திருந்ததால் குயில் என்னை கவனிக்காமல் இது காயா, பழமா எனும் பரிசோதனையில் மிகத் தீவிரமாக இருந்தது. குயிலை மிக அணுகிப்பார்த்த அனுபவம் இது. அப்போது தான் கவனித்தேன், அதன் கண்கள் சிவப்பாக இல்லை. குழம்பிய நான், பின்னர் இணைத்தில் தேடி இளைய (Juvenile) குயில்களின் உருவம் பெண் குயில்கள் போலிருந்தாலும் அவற்றின் கண்கள் கருமையாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்.

இங்கே இரண்டு பறவைகளை முதல் முறையாக பார்க்கிறேன். ஒன்று சிறிய மின்சிட்டு (Small minivet) மற்றொன்று திக்கெல்லின் பூங்கொத்தி (Pale billed flowerpecker). இதில் பூங்கொத்தியைப் பார்த்தது அற்புதமான அனுபவம். முதலில் ‘Merlin’ செயலி பூங்கொத்தியை அடையாளம் கண்டு சொல்ல, அந்தக் குறிப்பிட்ட ஒலித் துணுக்கு வந்த திசை நோக்கி தேடினேன். நான் பாலத்தின் மேல் நின்றிருந்தேன். ஒலி கீழிருந்து வருவது போல் தோன்ற, விரைவாக பாலத்தை விட்டிறங்கி கீழே தேடத்துவங்கினேன்.
ஜெ ஒரு கட்டுரையில் அவர் இமயமுடியை கண்ட அனுபவத்தை பகிர்ந்திருப்பார். நெடுந்தூரம் என நடந்து கொண்டிருக்க, எதிர்பாரா ஓர் திருப்பத்தில் பொன்பூசிய அந்த மலைமுடியை கண்ட பிறர் கூச்சலிட, ஏனென்று தெரியாமல் இவரும் அத்திசை திரும்பி அதை தரிசித்தைப் பற்றி.
அதே போன்றதொரு அனுபவம்தான் எனக்கும். வேகமான காற்றில் உலைந்தாடும் மலர்ததும்பிய கிளையொன்று கண்ணில் பட, பிறகிளைகள் அசையாமல் நடுவிலுள்ள ஒன்றை மற்றும் காற்று அசைக்கும் அதிசயத்தை உணர்வைத் தாண்டி புத்தி சென்றடைவதற்குள் பூங்கொத்தியைக் கண்டுவிட்டேன்.

பூங்காவிலிருந்து தங்கும் விடுதிக்கு திரும்பும் வழிநெடுகிலும் ‘மலரினும் மெல்லிய’ எனும் வார்த்தை உள்ளே ஓடிக்கொண்டிருந்தது. எங்கே படித்தேன் அல்லது கேட்டேன் இதை? ஏதேனும் பாடல் வரியா, கவிதையா, கதையின் தலைப்பா? ஆழத்திலிருந்து துள்ளி தலைகாட்டியிருக்கிறது இந்த வரி.
கூகுள் வழக்கம் போல ஒரு திரைப்படத்தைக் காட்டியது. தமிழர்களுக்கென்று தனி நிரல் எழுதப்பட்டுள்ளது போல, எதைக் கேட்டாலும் திரைப்படத்திலிருந்து விடையளிக்கத் துவங்கு என! சற்று கீழே அதற்கான விடை கிடைத்து.
மலர்களில் தேனருந்தும் உயிர்களில் வண்ணத்துப் பூச்சியையும், தட்டானையும், தேனீக்களையும், வண்டுகளையும் அனைவருக்கும் தெரியும். பறவைப் பார்த்தல் துவங்கியபின் நான் தேன்சிட்டுகளை ஆர்வத்துடன் கவனிக்கிறேன். ஆனால் இன்று இந்த பூங்கொத்தி மலர்களின் மேலேயே நடந்தபடி தேனெடுப்பதைப் பார்ப்பதற்காக, என்றோ படித்து கிட்டத்தட்ட மறந்துபோன இந்தக் குறள் காத்திருந்திருக்கிறது!
‘மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்’
இணையம் சென்று பாருங்கள், சிறிதும் பெரிதுமாக, அபத்தமும் அறிவார்ந்ததுமாக எவ்வளவு விளக்கங்கள் இந்தக் குறளக்கு! இதோ, நான் நேரிலேயே கண்டுவிட்டேன்.
எது மலரினும் மெல்லிது? காமத்திற்கு அகராதி ஆசை, அன்பு, இறை என்றும் பொருள் தருகிறது. இருபது, முப்பதடி விநாயகர்களை கனரக வாகனங்களிலேற்றி, ‘ரானு மும்பைக்கி ரானு’ போன்ற பக்திப் பாடல்களை காதைப் பிளக்கும் ஓசையுடன் ஊர்வலம் நெடுக அலரவிட்டு, ராட்சத பாரந்தூக்கிளால் ஏரிக்குள் வீசி ஆனந்தமடையும் பக்தகோடிகளே, உங்கள் தென்புலத்தோன் சொல்கிறார் ‘இறை, மலரினும் மெல்லிது’!.
எண்ணிணால், நாம் நுகரும் அனைத்தும் மலரினும் மெல்லிது தானே? சுவாசிக்கும் காற்றிலிருந்து, நீரிலிருந்து இங்கு அருந்திய ஹிரானி தேனீர் வரை. நாம் எவ்வளவு பத்திரமாக இவற்றின் மூலத்தை சிதையாமல் பார்த்து கொள்ள, செவ்வி தலைப்பட வேண்டியுள்ளது!
அந்தப் பறவை நடந்து சென்ற பூக்கள் எவ்வளவு மகிழ்ந்திருக்கும்? தன்னை அழிக்காமல் தேனை மட்டும் அருந்திய பறவைக்காக எவ்வளவு ஆவலுடன் மீண்டும் தேனூறிக் காத்திருக்கும்? வறனுறல் அறியாச் சோலை என்பதும் அதுதானே? வற்றாதது, வற்றாமல் பார்த்துக் கொள்ளப்படுவது, என்றும் இருப்பதாலேயே, அமுதென்றானது..!
எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை இதே போன்றதொரு பறவை தேனருந்துவதைப் பார்த்தே வள்ளுவர் இவ்வுமையை வந்தடைந்திருகலாம். எனில் காலத்தின் முன்னும் பின்னுமாக நானும், வள்ளுவரும் நிற்க நடுவே இப்பறவை சூழலைப் பற்றிய பிரக்ஞையற்று மலரின் அமுதில் திளைத்திருக்க, நாங்கள் இருவரும் தலையசைத்துக் கொள்கிறோம்.
ஆம், மலரினும் மெல்லிது..
eBird Checklist: https://ebird.org/checklist/S271211284
லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்,
ஹைதராபாத்,
03/09/2025