சுதந்திரத்தின் எல்லை

பறவைப்பார்த்தல் அனுபவக் குறிப்பு – கீழகொண்டையூர்

சிறு வயதில் ஏழுகடல், ஏழுமலை தாண்டி ஒரு கிளியைத் தேடி எனும் கதையை கேட்கும் போது அனைவருக்கும் தானும் அப்படியொரு சாகசப்பயணம் செய்வோம் என தோன்றாமலிருந்திருக்காது. ஆனால் சிலருக்கே அப்படியான பயணங்கள் வாய்த்திருக்கும். அதிலும் எத்தனை பேருக்கு உண்மையிலேயே அதே போன்றதொரு பறவையைத்தேடி அப்பயணம் சாத்தியமாயிருக்கும் எனத் தெரியவில்லை. இதுவரை பறவைகளைப் பார்த்து பட்டியலிடாத இடங்களுக்கு நான் செல்லும் பயணங்கள் அத்தகையதொரு சாகசத்தை சாத்தியமாக்கியிருக்கின்றன.

இம்முறை கீழக்கொண்டையூர், திருவள்ளூர் மாவட்டம். அம்பத்தூரிலிருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் திருநின்றவூர் சந்திப்பிலிருந்து வலதுபுறம் திரும்பினால் 15 நிமிட தொலைவில் கீழக்கொண்டையூர் துவங்குகிறது.  விடுபட்ட இடத்தின் வரைபடம் என்னை ஒரு பொட்டலுக்கு அழைத்துச் சென்றது. பக்கத்தில் நீர்நிலை ஏதும் இருப்பதற்கான அறிகுறியில்லை. நல்வாய்ப்பாக அங்கே விறகு வெட்டிக்கொண்டிருந்த தாயும் மகனும் எனக்கு உதவினர்.

இங்கே பக்கத்தில் இருக்கும் ஏரிக்கு எப்படிச் செல்வது என நான் கேட்டதற்கு அவர்கள் வலது பக்கம் கை காட்டினர். வலது பக்கம் திரும்பி அவர்கள் காட்டிய திசையில் வழியென எதுவும் தெரியாததால் சந்தேகத்துடன் இப்படித்தான் போகனுமா எனக்கேட்பதற்கு திரும்பினால், அதற்குள் அவர்கள் கிளம்பிவிட்டிருந்தனர்.

இயற்கை, பரிபூரணமாக பச்சைப் போர்வைப் போர்த்தி ஏரியை மறைத்து வைத்திருந்தது. புதற்களுக்குள் நுழைந்து, துழாவி, திரும்பினால் ஏரி தெரிந்தது. நீர் வற்றியிருந்த ஏரி ஆங்காங்கே மணற்திட்டுகளாய் இருந்தது.

கார்வெண் மீன்கொத்திகள் (Pied kingfisher), வரிவாலாட்டிக் குருவிகள் (White browed wagtail) இரைதேடிக் கொண்டிருந்தன. விருட்டென கிளம்பிய மீன் கொத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் நீரினில் பாய்ந்து அதன் திறனுக்கான பரிசுடன் சென்றது.

கார்வெண் மீன்கொத்தி (Pied kingfisher)

ஏரியின் அருகே சென்று பார்க்க சரியான இடம் கிடைக்கவில்லை. சுற்றிலும் முட்புதற்கள். மழைக் காலமாதலால் பெரும்பாலான இடங்களில் கால் வைத்ததும் புதைந்தது. தலைக்கு மேல் பறவைகள் கடந்தபடி இருந்தன. நான்கு திசைகளிலும் முட்டிய பின், சற்றே வளைந்தால் வழிகொடுக்கக்கூடிய சிறிய இடைவெளியைக் கண்டடைந்தேன். பூதங்களால் காக்கபடும் புதையல் போல, ஐந்து திசையும் முட்கள் சூழ, ஏரியை அணுகினேன்.

சூரியக்குளியலிட்டுக் கொண்டிருந்த பாம்புதாரா (Oriental darter) என் வருகையால் சலிப்புற்றுப் பறந்தது. சிறு நீல மீன்கொத்தி (Common kingfisher) கடந்து செல்ல, வெண்மார்பு மீன்கொத்தி (White throated kingfisher) நான் தரிசிக்கவென அமர்ந்தது.

வெண்மார்பு மீன்கொத்தி (White throated kingfisher)

முள்ளரணிலிருந்து வெளியேறிய நான், அடுத்த இடம் நோக்கி நடக்கத்துவங்க, இரு விழிகள் என்னை நோட்டமிடுவதை உணர்ந்தேன். தொலைவில் வாட்டசாட்டமான ஒருவர் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்த இடத்திற்கு அவரைக் கடந்துதான் செல்ல வேண்டும். வேறெங்கோ பார்த்த படி கடந்து செல்ல முயல்கையில் ஒரு குரல்,

“என்ன தம்பி இந்த பக்கம்?”

“ஒன்னும் இல்ல சார், பறவைகள் பார்க்க வந்தேன்”

“என்னது?!”

“பறவை.. பறவை சார்”

“ஓ, அதெல்லாம் கூட பாப்பாங்களா!”

உரையாடலுக்கு நடுவே ஒரு அசைவு கவனத்தைக் கவர, சட்டென தொலைநோக்கியை எடுத்து அந்த அசைவை நோக்கித் திருப்பினேன். ஒரு பனங்காடை (Indian Roller)  பறந்து சென்று ஒரு காய்ந்த செடியின் தடித்த கிளையின் மேல் அமர்ந்தது. பனங்காடையை பறக்கும் பொழுது பார்ப்பதென்பது கண்களுக்கு நாம் அளிக்கும் கொடை.

“என்ன தம்பி பாக்குறீங்க?”

“பனங்காடை சார்” என்ற பின் “பாருங்க” என தொலைநோக்கியை அவரிடம் நீட்ட, அவர் அதை எதிர்பார்க்கவில்லை.

இதை பெரும்பாலான இடங்களில் கவனித்திருக்கிறேன். குழந்தைகள் எவ்வித தயக்கமும் இல்லாமல் என்னிடம் தொலைநோக்கியை கேட்டு வாங்கி பார்த்திருக்கிறார்கள். நேர்மாறாக பெரியவர்களின் நானாக அதை அளித்தும் தயக்கத்துடன் தவிர்க்கவே பார்க்கிறார்கள்.

ஏன்? எது அவர்களைத் தடுக்கிறது. முன்பின் தெரியாதவர்களிடம் பழகக்கூடாது, கொடுப்பதை வாங்கக் கூடாது எனச் சொல்லிச் சொல்லி தானும் அதை நம்பத் துவங்கிவிட்டார்களா? ஒருவர் கொடுத்து நாம் வாங்குவதால் எதிலோ தாழ்கிறோம் என நினைக்கிறார்களா?
ஒன்றை புதிதாக அறிந்து கொள்வதென்பது, நமக்கு அது தெரியாது என ஒளிவின்றி உடன்படுவதிலிருந்து துவங்குகிறது என்பார்கள். உடன்படுவதற்கும், அல்லாததற்குமான இடைவெளிதான் குழந்தைகளிடம் ஆர்வமாகவும், பெரியவர்களிடம் தயக்கமாகவும் வெளிப்படுகிறதா?

முதலில் தயங்கியவர், பின் தொலைநோக்கியை வாங்கி நான் காட்டிய திசை நோக்கித் திரும்பினார். தொலைநோக்கியை கையாள அவருக்கு சற்று நேரமானது. காத்திருந்தேன்.

திடீரென அவர் அமர்ந்திருந்த இருசக்கர வாகனத்திலிருந்து துள்ளி இறங்கினார். பனங்காடையை அவர் பார்த்துவிட்டதை முகபாவனைகள் காட்டின. ஆனால் அதைக் குரலில் காட்டாமல்,

‘ஓ.. இவ்வளவு கிட்ட தெரியுமா?” என்றார் செயற்கையாக வரவழைத்துக் கொண்ட இயல்புடன்,

“அது என்ன ப்ளூ கலர்ல இருக்கு? நான் கொஞ்சம் பெரிய சைஸ் குருவின்னுல நெனச்சிட்டிருந்தேன்!”

ஆனால் அவரே அறியாமல் அவர் தொனி மாறியது. என்னைப் பற்றி, வீட்டைப் பற்றி விசாரிக்கத் தொடங்கி கடைசியில் ‘உன் தூரத்து உறவினன் நான்’ என சொல்லிவிடுவாரோ என்ற அளவுக்கு நெருக்கம் காட்டினார். முன்னர் சலிப்புற்றுக் கிளம்பிய பாம்புதாரா சற்றுத் தொலைவில் வந்தமர, அதை பார்த்த பின் பிரியா விடை பெற்று அங்கிருந்து கிளம்பினேன்.

பாம்புதாரா (Oriental darter)

வாகனத்தை சற்றே தள்ளி நிறுத்தியிருந்தேன். அங்கே செல்ல ஒரு குடியிருப்பு பகுதியைக் கடக்க வேண்டும். சென்று கொண்டிருக்கையில் இரண்டு புள்ளிச்சில்லை-கள் (Scally-brested munia) ஒரு புதரில் அமர்ந்திருக்க, அடுத்த பட்டியலை அங்கேயே துவங்கினேன்.

தொலைநோக்கியை தோளில் மாட்டியபடி வீடுகளுக்கு இடையே இருந்த வெற்று நிலங்களில், மரங்களையும், புதர்களையும் நோக்கி சென்று கொண்டிருந்த என்னை ஊரே வித்யாசமாக பார்த்திருக்க்கூடும்.

மீண்டும், “என்னப்பா பாக்குற?” எனும் குரல்..

திரும்பினால் நடைப்பயிற்சிக்கு சென்று கொண்டிருந்த இருபாட்டிகள் நின்று கொண்டிருந்தார்கள்.

“இல்ல, பறவைகள் பார்த்திட்டிருக்கேன்”

“ஓ.. பாருங்க, பாருங்க.. இங்க நிறைய லவ்பேர்ட்ஸ்-லாம் கூட இருக்கு, நாங்களும் பாப்போம்” என அவர்கள் ஒருவரையோருவர் பார்த்துக் கொண்டு கண்களில் சிரிப்புடன் கடந்து சென்றனர்.

பறவைகளை சுதந்திரம் எனும் கருததுக்கான உவமையாய் கூறுவார்கள். சுதந்திரம் என்பதை எளிமையாக ‘கட்டுப்படுத்தப்படாமை’ எனப் புரிந்து கொள்ளலாம். ஆனால் பெரும்பாலும் நாம் அதை புறக்கட்டுப்பாடு எனப் புரிந்து கொள்கிறோம். அகத்தே நாம் எவ்வளவு சுதந்திரமானவர்கள்?

அறியாத இடங்களுக்குச் செல்வதிலும், தெரியாத மனிதர்களிடம் பழகுவதிலும் நமக்கு ஏற்படும் பதற்றத்திற்கான காரணம் என்ன? அகத்தே நமக்கொரு எல்லையுல்லது. அதை கடக்கவேண்டிய சூழல் அமையாமல் பார்த்துக் கொள்வதில் நாம் மிக கவனமாக இருக்கிறோம். என்றேனும் நம்மை மீறி அத்தகைய சூழல் அமையுமேயானால்?
பறவைகள் பார்க்கச் செல்வதில் இயல்பாக அச்சூழல் அமைவது மட்டுமல்லாமல், அச்சூழலை எளிதாக கடப்பதற்கான கருவியாகவும் அவை இருக்கின்றன.

கதைகளில் ஏன் அந்தப் பறவை  ஏழுகடல், ஏழுமலை தாண்டி இருக்கிறது?

நான் இப்படி புரிந்து கொள்கிறேன். மலை உயரமென்றால், கடல் ஆழம். மலை காணக்கூடிய பருவடிவமென்றால், கடல் அடிகாணவிலயாத கருவடிவம். மலை அசைவற்றதென்றால், கடல் அலையடிப்பது. மலை புறமென்றால், கடல் அகம். அப்பறவையை அடைய நாம் கடக்கவேண்டியது மலைகளையும், கடல்களையுமல்ல, புற எல்லைகளையும், அக எல்லைகளையும்!

இங்கே புதைந்த என் காலடிச்சுவடு மனிதன் இவ்விடத்தில் இதுவரை சென்ற எல்லையிலிருந்து ஓரடி முன்சென்றிருக்கலாம். ஒருவேளை அச்சுவடு இறுகி, நாளை இங்கே வரப்போகும் ஒரு பறவை ஆர்வலருக்கு அவர் தயக்கமில்லாமல் முன்செல்ல ஒரு அடையாளமாய் கூட மாறலாம்.

பறவைகள் பார்த்தலை முடித்துக் கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். ஊர் முடிந்து நெடுஞ்சாலையை அடையும் முன் மீண்டும் அவ்விரு பாட்டிகளையும் பார்த்தேன். இம்முறை நன்கு பழகிய நண்பர்களாகிவிட்டிருந்தொம். அவர்கள் “அட, நம்ம தம்பி” என சிரிக்க, என் உறவுகளின் எல்லையும் விரிவடைவதை எண்ணியபடி மகிழ்வுடன் கையசைத்துவிட்டுக் கிளம்பினேன்.

eBird Checklist:
https://ebird.org/checklist/S266365148
https://ebird.org/checklist/S266366701
https://ebird.org/checklist/S266369521
https://ebird.org/checklist/S266371184

லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்,
கிழக்கொண்டையூர், திருவள்ளூர் மாவட்டம்,
10. 08. 2025