பச்சைக்கிளி(Rose-ringed Parakeet)
வீட்டின் அருகே எட்டு கிளிகள் கொண்ட ஒரு கிளி கூட்டம் வசிக்கிறது. காலையும் மாலையும் பாடிக்கொண்டே, சேர்ந்து பறந்து செல்லும். ஆண் பறவைக்கு கழுத்தில் கருப்பு நிற வளையம் இருக்கிறது. அதைத் தவிர ஆண், பெண் பறவைகளுக்கு பெரிய வேறுபாடு இல்லை. பின்புறம் உள்ள தூங்கு மூஞ்சி(Samanea saman) மரத்தில் அமர்ந்து, அவரைக்காய் போன்ற விதைப்பையை பிரித்து, அதன் விதைகளை உண்ணும்.

பக்கத்து பெரிய கட்டடத்தின் மாடியில், மாநாடு நடத்தும். கொய்யா மரத்தில் வந்து அமர்ந்தால், அதற்கும் விருந்து தான். நம் கண்களுக்கும் விருந்து தான். அழகிய பச்சை நிறம். கொஞ்சும் இனிய பேச்சு. அமரப் போகும்போது, வால் சிறகுகளை விரிப்பது தனி அழகு. நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்க ஆசை.

படித்தறிந்தது
- மத்திய ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட இப்பறவை, தற்போது உலகம் எங்கும் பரவி இருக்கிறது. வளர்ப்பு பிராணிகளின் திட்டமிட்ட இனப்பெருக்கத்தால், நீலம், மஞ்சள், வெள்ளை ஆகிய வண்ணங்களிலும் உள்ளன.

- 25 முதல் 30 வருடங்களும், சில சமயம் 50 வருடங்களும் வரை வாழும்.
- மாவீரன் அலெக்சாண்டர் 327 BC யில் வளர்ப்பு பிராணியாக கிளிகளை கிரேக்கத்திற்கு கொண்டு வந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. ஒரு கிளி இனத்திற்கு (Alexandrine Parakeet) அவர் பெயரும் இடப்பட்டிருக்கிறது.