தூவித்தோழர்கள்-5

காகம் (House Crow)

வீட்டின் அருகே,மக்கும் குப்பைகளை போட ஒரு குழி இருந்தது. முட்டை மஞ்சள் கருவை, அதில் போடுவது வழக்கம். அதைத் தெரிந்து கொண்ட காகங்கள், என் கணவர் மஞ்சள் கருவை போட போகும்போது, காத்திருந்து அதை சாப்பிட்டன. அதை பார்த்த பின், நேரடியாக‌ காகத்திற்கு போட ஆரம்பித்தோம். சரியாக‌ ஏழரை மணிக்கு, காகங்கள் காத்திருக்க ஆரம்பிக்கும். சுமார் ஐந்து வருடங்களாக, இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மற்ற காகங்கள் அனைத்தும் மின்சார கம்பியில் அமர்ந்திருக்கும் போது, ஒரு காகம் மட்டும் சுவற்றில் அமர்ந்திருக்கும். அதை கவனித்த பின் தான் தெரிந்தது, அதற்கு ஒரு கால் தான் இருக்கிறது என்று. முட்டையை போட்ட உடன், தைரியமாக வந்து, பெரிய துண்டை கவ்வி கொண்டு, பறந்து விடும். இப்போது அது மின்சார கம்பியில் நிற்க பழகிவிட்டது. ஒரு காலை வைத்து பிடித்துக் கொண்டு, உடம்பை வைத்து சமநிலை படுத்தி அமர்கிறது. முயற்சி செய்தால் எதுவும் சாத்தியமே என்பதற்கான உதாரணமாக இருக்கிறது, நாங்கள் ‘Survivor’ என்று பெயரிட்ட இந்த காகம்.

Survivor உடன் மற்றொரு காகம்

படித்தறிந்தது

  • “சம்ஸ்கிருதத்தில் கா என்றால் ஏன். ஒரு பறவை இந்த நிலம் முழுக்க ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஏன் ஏன் என்று கூவிக்கொண்டே இருக்கிறது.” – ஜெயமோகனின் காக்காய்ப்பொன் கதை
  • ‘In the Company of Crows and Ravens’ புத்தகத்தில், காகங்களுக்கு வட்டார வழக்கு (dialects) உண்டு என்று கூறப்பட்டுள்ளது. ஒரு காகம் அதன் கூட்டத்தை மாற்றினால், அது அதன் சத்தத்தை புதிய குழுவிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும்.
  • காகம் அதிக மூளை‍- உடல் விகிதம் (Brain-body Ratio) கொண்ட பறவைகளில் ஒன்று. கருவிகளை பயன்படுத்துவது, பிரச்சனைகளை தீர்ப்பது, மனித முகங்களை ஞாபகம் வைத்திருப்பது (ஜெயமோகனின் நிழல்காகம் கதை) என்று மிகவும் புத்திசாலியாக விளங்குகிறது.

One thought on “தூவித்தோழர்கள்-5”

Comments are closed.