தூவித்தோழர்கள்-6

வால் காக்கை (Rufous treepie)

வால் காக்கையை பற்றி வெள்ளிமலை வகுப்பிற்கு வந்த பின் தான் தெரிந்துகொண்டேன். வீட்டின் அருகே பறவை பார்த்துக் கொண்டிருந்தபோது, தென்னை மரத்தில் அமர்ந்திருந்து. இத்தனை வருடமாக, அது இங்கே தான் இருந்திருக்கும், ஆனால் ஒரு முறை கூட அதை கவனித்ததே இல்லை. காலை நேரங்களில், வீட்டின் எதிரில் உள்ள பலா மரத்தினுள்ளே இருந்து வருவதை பார்க்கலாம்.

காக‌த்தைப் போன்ற முகம், பிரவுன், வெள்ளை, கருப்பு கலந்த இறக்கைகள். நீண்ட வாலின் நுனியில் கருப்பு. தொண்டைக் கட்டிய காகத்தைப் போன்ற குரல். அவசரம் இல்லாமல், நிதானமாக பறக்கும் இதன் அழகு, எனக்கு மிகவும் பிடிக்கும். மின்சார கம்பியில் அமர்ந்து கரைந்து கொண்டிருக்கும். தூங்கு வாகை மரத்தில் அமர்ந்து, நான்கு பறவைகள் ஒரே நேரத்தில் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததன. ஆண், பெண் பறவைகளுக்குள் வேறுபாடு இல்லை. வீட்டின் அருகிலேயே இருக்கும் அழகிய பறவை.

படித்தறிந்தது

  • கர்வால் இமயமலையில், வெவ்வேறு உயரங்களுக்கு இடையில் வலசை செல்லும்.
  • இதன் வேறு பெயர்கள்:அரிகாடை, முக்குறுணி
  •  மிளா மானும், வால் காக்கையும் பரஸ்பரம் உதவிக் கொள்கின்றன‌. மானின் உடலில் இருந்து காக்கை ஒட்டுண்ணிகளை தின்னும். இதன் உடலில் சில நுண்ணுயிரிகளும், இறகுகளில் ஒரு வகை உண்ணியும் வாழ்கின்றன.