பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு – புழல் ஏரி, சென்னை – 20.10.2025
ஒரு உரையாடலின் போது கவிஞர் சாம்ராஜ் சொன்னார், “நம் குழந்தைகள் ஆச்சரியமற்றவர்களாகிக் கொண்டிருக்கின்றனர், எதைச் சொல்லியும், காண்பித்தும் அவர்களை ஆச்சரியப்படுத்த முடியவில்லை” என்று. ஏன் குழந்தைகள் ஆச்சரியப்படுவதில்லை?
மேடையில் மாயவித்தைகள் நிகழ்த்தும் ஒருவரை எவ்வகையிலும் அந்த வித்தைகள் ஆச்சரியப்படுத்தப் போவதில்லை. காற்றிலிருந்து புறா வெளிப்பட்டாலும், கண்முன்னே யானை காற்றில் மறைந்தாலும், ஆச்சரியம் பார்வையாளருக்கே. அதை நிகழ்த்துபவருக்கல்ல. ஏனெனில் மாயத்தின் பின்னிருக்கும் தந்திரம் என்னவென்று அவருக்குத் தெரியும். எனில் தம்மை சுற்றி நிகழும் அனைத்தையும், அதைப் பற்றிய தகவல்களையும் இணையத்தின் வழி தெரிந்து கொள்ள முடியும் எனும் நம்பிக்கை, இளைய தலைமுறையை ஆச்சரியமற்றவர்களாக மாற்றுகிறதா?
இன்று தீபாவளி. நன்மை, தீமையை; ஒளி, இருளை வென்றதன் நினைவாக இந்திய விரிநிலம் முழுவதும் கொண்டாடப்படுவது. குளித்து, புத்தாடையுடுத்தி, அசைவம் சுவைத்து, பட்டாசு வெடித்து, குழந்தைகளுடன் களித்து, என சில்லறை வேலைகளை சில மணிநேரத்திற்குள் முடிந்துவிட்டு, தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை இடைவேளைகளின் நடுவே பார்த்து மகிழ்ந்திருக்க வேண்டிய நாள். இன்று பறவைகளைப் பார்க்க செல்வதென்பது பொறுப்பின்மையின் உச்சமாக கருதப்படும் என்பதால், நான் துணியவில்லை. ஆனால், காலத்தின் கணக்குகள் வேறாயிருந்தது.
எனது பதின்பருவததில் பண்டிகைகள் கொண்டு வரும் மகிழ்ச்சி அளப்பரியது. அதிலும் தீபாவளியும், பொங்கலும் மிக முக்கியமானவை. அவ்விரு பண்டிகையின் போது மட்டும் என் தந்தை எங்களுக்கு புத்தாடைகள் வாங்குவார். என்று புத்தாடைகள் வாங்க அழைத்துச் செல்வார் என்பதுதான் புதிர். புதிரவிழ்தல் என்றுமே ஆச்சரியமளிக்கும் நிகழ்வு. அந்நாள் பெரும்பாலும் பண்டிகைக்கு ஓரிரு நாட்கள் முன்னாலிருக்கும். இன்று யோசிக்கையில், பொருளாதாரத்தில் நலிந்திருந்த எங்களுக்கு கூடுதலாக புத்தாடைச் செலவு என்பது அப்பாவுக்கு சமாளிக்க சவாலானதாக இருந்திருக்கும். ஆனால் புத்தாடை எடுக்காத வருடங்கள் என் நினைவில் இல்லை. அப்பா, அவருக்கு ஆடைகள் எடுத்துக் கொண்டதும் என் நினைவில் இல்லை. அது அவர் எங்களுக்கு அளித்த பிரதிபலன்பாரா, எங்களால் மறு ஈடு செய்யவியலாத பரிசு.
இன்று ஒரு சிறிய வேலையாக மதியம் சுமார் 2.30 மணியலவில் வெளியே சென்று திரும்புகையில், வீட்டிற்கு சற்று முன்னே ஒரு திருப்பத்தில் புழலேரியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த ஒரு மரத்தில் அமர்ந்திருந்த பறவை கண்களைக் கடந்து கருத்தில்பட்டது. கால்களும், கைகளும் அனிச்சையாய் செயல்பட்டு வாகனத்தை ஓரங்கட்ட, என்ன பறவையென்று மட்டும் பார்த்துவிட்டு சென்றுவிடுவோம் என இறங்கினேன். என் கால்கள் சாலையில்படவும், அந்தப் பறவை பறந்து செல்லவும் சரியாயிருந்தது. கையில் தொலைநோக்கியில்லை, பறந்தவிதத்தையும், உடலமைப்பையும், தோராயமாகத் தெரிந்த நிறத்தையும் வைத்துப் பார்த்தபோது, மழையில் ஊறி சற்றே உப்பிய பெண்குயில் எனத் தெரிந்தது. உண்மையில் அப்பறவை, பரிசை சுற்றி மூடிய வண்ணக் காகிதத்தின் மேல் அலங்காரமாக கட்டப்பட்டிருக்கும், கவனத்தைக் கவரும் ஒளி பொருந்திய நாடா எனப் பின்னர் நினைத்துக் கொண்டேன்.
பார்க்கவந்த பறவை பறந்ததால் வீட்டுக்குத் திரும்பிவிடலாம் என்று நினைக்கையில், அருகே இரண்டு கரிச்சான்கள் (Black Drongo) மழையில் குளித்து மினுமினென்றிந்தன. சற்றே நிதானித்தேன்.

கரையில் நின்றிருந்த சீமை கருவேல மரங்களெங்கும் காகங்கள் (House crow) நிறைந்திருந்தன. ஒன்றை கவனித்தேன், ஒவ்வொரு முறை வெடி வெடித்த போதும் காகங்கள் பதறியடித்து பறந்த பின் மீண்டும் வந்தமர்ந்தன ஆனால் பிற பறவைகள், முக்கியமாக ஏரி நீரிலிருந்தவை எந்தச் சலனமும் காட்டவில்லை! தகைவிளான்கள் பறந்துகொண்டே இருந்ததால், அவை பதட்டத்தில் பறக்கின்றனவா, இயல்பாய் பறகைகின்றனவா எனக் கண்டறிய முடியவில்லை.
மேலே அரிவாள் மூக்கன்களின் (Glossy ibis) சிறுகுழு வடக்கிலிருந்து தெற்காக வானில் ‘சரி’ குறியைப் போன்ற வடிவில் கடந்து சென்றன. சௌந்தர் குருஜி கற்றுத்தரும் யோகப் பயிற்சிகளின் பயனை உணர குறைந்தபட்சம் நீங்கள் தலைக்கு மேல் செல்லும் பறவைகளை பின்னால் வளைந்தபடி செங்குத்தாக படமெடுத்துப் பார்க்க வேண்டும்.

நம்மை ஆச்சரியப்பட வைக்க பல வழிகளுள்ளது. அவற்றில் ஒன்று நாம் வழக்கமாக பார்த்துவந்த, நெடுநாட்கள் கவனித்ததாலேயே நமக்கு முற்றிலும் பழகிய ஒன்றென நினைத்த, இனி இது இப்படியே பெரிய மாற்றமின்றி நீடிக்கும் என நம்பிய ஒன்று சற்றும் எதிர்பாராமல் நாம் நெடுநாட்களாக வேறு எங்கோ தேடியதை தன்னிலிருந்து தருவது.
அப்படித்தான் நான் புழல் ஏரியில் வேதிவால் ஈபிடிப்பானைப் (Indian paradise flycatcher) பார்த்தேன்.

சுடலைக்குயிலைப் (Pied cuckoo) போன்ற கருந்தலை, அடிவயிறு வெள்ளை. முதுகு, இறக்கை முழுதும் ஆரஞ்சு நிறம்.
இந்தப் பறவையை முதன் முறையாக பார்க்கிறேன். படங்களில் நீளமான இதன் வால் காற்றில் பறக்கையில் அலையலையாக பறவையின் பின் செல்வது மறக்கமுடியாத படி நினைவில் பதிந்திருந்தது. இங்கு பார்த்த பறவைக்கு (பெண் பறவை) வால் நீளமில்லை என்றாலும், பார்த்த மாத்திரத்தில் இது வேதிவால் ஈபிடிப்பான் எனத் தெரிந்துவிட்டது.

அப்பா உடல்நலக்குறைவால் மறைந்ததால், பொருளாதார தேவைகளுக்காக என் பதின்பருவத்தின் இறுதியிலேயே வேலைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. பின்னனியிசையை மாற்ற வேண்டிய அளவுக்கு வாழ்க்கை சோகமானதாக எல்லாம் இல்லை. ஆனால் என் வாழ்வில் பண்டிகைகளில் வரும் புதிரை, புதிரவிழும் ஆச்சரியத்தை, அதளிக்கும் அளவிடமுடியாத மகிழ்ச்சியை இழந்தேன். பணம் இருந்தது. ஆடைகளை என்று வாங்கலாம் என்பதும் என்கையிலிருந்தது. பிரதிபலன் பாராமல் அளிக்கும் தந்தையில்லை. தந்தையின் இடத்தை யாரால் நிரப்பமுடியும்?
நான் அக்டோபர் 2024 லிருந்து புழல் ஏரியில் தொடர்ச்சியாக பறவைகளை அவதானித்து வருகிறேன். வெயிலிலும், மழையிலும், அதிகாலையிலும், மதியத்திலும், மாலையிலும் அங்கே இருந்திருக்கிறேன். ஒருபோதும் வேதிவால் ஈபிடிப்பானை இங்கு பார்பேனென எதிர்பார்க்கவில்லை.
எதிர்பாரததைத் தருவதுதானே சிறந்த பரிசாக இருக்க முடியும்?
ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருகிறது.
‘பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்’
சொல்லிலேயே இறைவனுக்கும், இயற்கைக்கும் பெரிய தொலைவில்லை. நான் இறைவனை, இயற்கையென்றே புரிந்து கொள்கிறேன். அனைத்துயிர்களுக்கும் அளிக்கக்கூடிய, பிரதிபலன் பாராத, நாம் விழைந்தாலும் எதையும் திருப்பி அளிக்க முடியாத ஒன்றிருக்குமானால், அது இயற்கைதான்.
கவிஞர் சாம்ராஜின் கூற்றிற்கு வருவோம். இன்றைய, தகவல்கள் நுரையென பொங்கிப் பெருகும் தகவல் தொழில்நுட்ப யுகத்தில், பிரிதொன்றிலாமல் நம்மை ஆச்சரியப்படுத்தும் ஆற்றலிருக்கக்கூடிய ஒன்றாக நான் இயற்கைகைப் பார்க்கிறேன்.
தீப ஒளித்திருநாளான இன்று நிகரற்ற அழகுடன் ஒரு பறவையை தன் கையில் பரிசாக வைத்துக் கொண்டு அதைப் பெற்றுக் கொள்வோருக்காக இயற்கை காத்திருந்தது. இந்த சாலையை கடந்து சென்ற சில நூறு மனிதர்களில், நான் அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்டேன்.
இதே போல் ஒவ்வொரு இடத்திலும் பிரதிபலன்பாரா பரிசுடன் காத்திருக்கும் இயற்கையை, ஒளி பெய்யும் இம்மதியத்திலும் மறைத்திருக்கும் அந்த மகத்தான இருளை வெல்லும் ஒளி எது? பெரும்பாலானவர்கள் அது செல்போன் திரையின் ஒளியென நம்பிக் கொண்டிருக்கிறோம். ஒளி தரும் எல்லா விளக்கும் விளக்கல்ல! வள்ளுவர் குறிப்பிடும் எந்நிலையிலும் பொய்க்காத விளக்கை – அது அறிவாகவோ, பயிற்சியாகவோ, முயற்சியாகவோ இருக்கலாம் – துணை கொள்ளத் தயாராக இருக்கிறோமா என்பதே இத்திருநாளில் நாம் எழுப்பிக் கொள்ள வேண்டிய கேள்வி.
பி.கு: மேலே குறிப்பிட்ட பாடல் இடம் பெற்றப் படத்தின் பெயர் ‘பார்த்தால் பசிதீரும்’. மீண்டுமொரு ‘தற்செயல்’.
லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்,
புழல் ஏரி, சென்னை,
20/10/2025