தூவித்தோழர்கள்-7

புள்ளி ஆந்தை (Spotted Owlet)

பொள்ளாச்சி தோட்டத்தின் வெளியே நானும், தேவ்வும் நடந்து கொண்டு இருந்த போது, வெகு அருகில் வேப்ப மரத்தில் புள்ளி ஆந்தை அமர்ந்திருந்தது. நாங்கள் பார்த்தவுடன் தலையை உடம்புக்குள் இழுத்து, ஒளிந்து கொள்ள முயற்சி செய்தது. அடுத்த வேப்ப மரத்திற்கு பறந்து சென்று அமர்ந்தது. அங்கிருந்து நாங்கள் பார்க்கிறோமா என்று எட்டிப் பார்த்தது. நாங்கள் அதை கவனிக்கிறோம் என்று தெரிந்தவுடன், பறந்து சென்று விட்டது. ஆந்தையின் கண்களை நேருக்கு நேர், அருகில் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) இரண்டு மணி நேரம் ஒரே இடத்தில் அமர்திருந்த ஒரு ஜோடியை பார்த்தேன்.


இரவு நேரங்களில், குச்சியின் மீது நிற்பதை கோட்டோவியமாக பார்க்க முடியும். சில சமயம், அதன் அலறலையும் கேட்க முடியும். மாலை நடை சென்ற பொது, இரண்டு புள்ளி ஆந்தைகள், மின்சார கம்பியில் இருந்து கவனித்த‌து. உருமறைப்பில் சிறந்த சிறிய ஆந்தை.

படித்தறிந்தது

  • Athene என்ற பேரினப் பெயர் கிரேக்க தெய்வத்திலிருந்தும், brahma என்ற இனப்பெயர் இந்து கடவுளான பிரம்மாவிலிருந்தும் வைக்கப்பட்டுள்ளது. Athene brahma-இரண்டு தெய்வங்களின் பெயரைக் கொண்ட இப்பறவை, இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது.
© Anirudh KamakerieBird S41368827Macaulay Library ML 7953184
  •  மராத்திய மொழியில், பிங்கல என்றால் ஆந்தை. ஆகவே ஆந்தைகள் வரும் மாலை வேளை, பிங்கல நேரம் என கூறப்படுகிறது.
  • கிமு 500 ஆம் ஆண்டை சேர்ந்த‌ கிரேக்க வெள்ளி நாணயத்தில், ஒரு புறம் ஏதீனா தெய்வமும், மறுபுறம் ஒரு சிறிய ஆந்தையும் உள்ளது. இதே நாணயத்தின் நினைவாக, தற்போதைய கிரேக்க‌ 1 யூரோவிலும் ஆந்தை அச்சிடப்பட்டுள்ளது.