சிறிய பஞ்சுருட்டான் (Asian Green Bee-eater)
காலை வேளைகளில் பொள்ளாச்சி தோட்டத்தில், வேலி ஓரமாக அமர்ந்து பூச்சி பிடிக்கும். இது என்ன பறவை? சிறிதான கிளி போல இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். வகுப்பிற்கு வந்த பிறகுதான் தெரிந்தது, இதன் பெயர் சிறிய பஞ்சுருட்டான் என்று. அமரும் போது, பிறை வடிவில் அதன் பச்சை நிற இறக்கையை விரிப்பது பேரழகு. தேவ் ‘தேனி சாப்பிடும் போது, அதன் கொடுக்கு பஞ்சுருட்டானை பாதிக்காதா?’ என்று கேட்டான். படித்த போது தான் தெரிந்தது, இந்த அழகிய பறவை, பிடித்த தேனியை மரக்கிளைகளில் அடி,அடியென்று அடித்து, துவைத்து, அதன் கொடுக்கை நீக்கிய பின் உண்ணும்.

ஆண், பெண் பறவைகளுக்கிடையே சிறு வேறுபாடுகள் உள்ளன. பெண் பறவை வாலின் நீளம் சிறிது குறைவாகவும், கழுத்து நிறம் மங்கலாகவும் உள்ளது. கோவை வாலாங்குளம் பகுதியில், நான்கு பஞ்சுருட்டான்கள் , நீரில் தன் உடலின் கீழ்ப்பகுதியை நனைத்துக்கொண்டே பறந்ததை பார்த்தேன்.

படித்தறிந்தது
- பச்சைப் பஞ்சுருட்டான் தேனீ, குளவி, தும்பி, எறும்பு ஆகிய பூச்சிகளை உண்ணும். காற்றில் பறந்தபடியே வேட்டையாடும்.
- ஆற்றங்கரை ஓரங்களில், மணலில் பொந்து தோண்டி, 4–8 வெள்ளை முட்டைகளை இடுகிறது. இரு பறவைகளும் முட்டைகளை மாறி மாறி அடை காக்கும். முட்டைகள் பொரிய சுமார் 14 நாட்கள் ஆகும். 20-25 நாட்கள் வரை குஞ்சுகளை கவனிக்கும்.

- Theory of Mind-வேட்டையாடும் விலங்கின் பார்வை, கூட்டை நோக்கும்போது, பறவை கூட்டுக்குள் நுழையாது. அதன் முட்டைகளைக் பாதுகாக்க இவ்வாறு செய்கிறது.