செம்மார்பு குக்குருவான் (Coppersmith barbet)
வெள்ளிமலை பறவை பார்த்தல் வகுப்பில், முதன்முதலில் செம்மார்பு குக்குருவானின் குரலைக் கேட்டேன். கொல்லன், தன் உலை களத்தில் தொடர்ந்து அடித்துக கொண்டே இருப்பது போல், சீரான இடைவெளியில் உள்ள அதன் குரல், சட்டென்று மனதில் பதிந்து விட்டது. ஆசிரியர்கள் பறவை பார்க்க கூட்டிச் சென்ற போதும் தொடர்ந்து, அதன் குரலைக் கேட்டுக் கொண்டே இருந்தேன்.
இசை வகுப்பு இடைவேளையின்போது, நண்பர்களுடன் பறவை பார்க்க சென்றோம். நித்யவன வாசலின் அருகேயிருந்த அத்தி மரத்தில் கூட்டமாக இவற்றைக் கண்டோம். பல வண்ணங்கள் கலந்த சின்னஞ்சிறிய பறவை. உடலின் மேல்புறம் பளீரென்ற பச்சை வண்ணம். நெற்றியில், மார்பில் சிவப்பு நிறம். கால்களும் சிவப்பு. கண்ணை சுற்றிலும், தொண்டையிலும் மஞ்சள். சிறிய வால். பழத்தில் தொங்கியபடி, அது உண்ட அழகிய காட்சியை பதிவு செய்த மதுரை செல்வக்குமார் Sirக்கு நன்றியும், அன்பும்.

படித்தறிந்தது
- செம்மார்பு குக்குருவான் ஆபத்து வரும் நேரத்தில் விநோத ஒலி எழுப்பும். இதனால் பளியர் பழங்குடியினர், இப்பறவையை ‘திட்டுவான் குருவி’ என்கிறார்கள்.
- ஆண், பெண் பறவைகள் சேர்ந்து, மரத்தில் பொந்து தோண்டி, அதற்குள் கூடு அமைக்கின்றன. ஒரு சமயத்தில், இரண்டு முதல் நான்கு முட்டைகள் வரை இடும். இருபறவைகளும் அடைகாக்கின்றன.
- கூட்டின் வாசலை, ஒரு மரப்பட்டையை வைத்து மறைக்கும். அந்த பட்டையை மறுபடியும் பயன்படுத்தும்.