தூவித்தோழர்கள்-15

தவிட்டுக்குருவி (Yellow-billed Babbler)

வீட்டை விட்டு வெளியில் வந்தாலே, தவிட்டுக்குருவிக்கூட்டத்தை பார்க்காமல் இருக்க முடியாது. நாள் முழுவதும் அதன் குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். பல சமயம் இரு கூட்டங்களை சேர்ந்த பறவைகளும் சேர்ந்து கூச்சலிடும். மற்ற சமயங்களில் ஓரிரு பறவையின் மெல்லிய, தொடர்ச்சியான ஒலி கேட்கும். தன் சிறகுகளை கோதி கொள்வதையும், கூட்டத்தின் மற்ற பறவைகளுக்கு தன் அலகால் கோதிவிடுவதையும் பார்க்க முடியும். வளர்ந்த குஞ்சுக்கும் ஊட்டி விடும்.

ஆண் பெண் பறவைகளுக்கிடையே வேறுபாடு இல்லை. சாம்பல் வண்ண உடல் கொண்ட பறவை. வெளிர் நீல கருவிழி. தரையில் இரைதேடும். சில சமயம், சின்னான், சாம்பல் கரிக் குருவி (Ashy Prinia), கரிச்சான் குருவிகளுடன் சேர்ந்து இரை தேடும்.
ஒரு நாள் மதியம், வெளியில் சந்தைக்கடை போல் ஒரே கூச்சல்.சென்று பார்த்தால், கூட்டத்தின் அனைத்து பறவைகளும் சேர்ந்து வால்காக்கையை துரத்தி விட்டு கொண்டிருந்தன‌.
பொள்ளாச்சி தோட்டத்தில் வீட்டுக்குள்ளேயே குதித்து, குதித்து வரும். தரையில் சிந்தி இருக்கும் உணவை சாப்பிடும். வாசல் வழியே உள்ளே நுழைந்து, அடுப்படி வரை வந்து, திறந்திருக்கும் ஜன்னல் வழியாக வெளியே சென்று விடும்.

படித்தறிந்தது

  • தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில் மட்டுமே காணப்படுகிறது.
  • ஆண், பெண், கூட்டத்தின் மற்ற பறவைகள் சேர்ந்து, சிறு குச்சி, சல்லி வேர், பச்சைப்புல், பழைய காகிதம் ஆகியவற்றை வைத்து கூடுகட்டும். மூன்று முதல் நான்கு முட்டைகள் வரை இடும். அக்காக்குயில், சுடலைக்குயில் இரண்டும் இதன் கூட்டில் முட்டையிடும்.
  • Argya என்ற பேரினப் பெயர் வாக்குவாதம், சத்தம் போடுதல் என்பதை குறிக்கும் லத்தின் சொல்லான arguere என்பதிலிருந்து ( Argument ஞாபகம் வருகிறதா?) வைக்கப்பட்டுள்ளது. affinis என்ற இனப்பெயருக்கு தொடர்புடைய, நட்பு என்று அர்த்தம். Argya affinis– சத்தமாக வாக்குவாதம் செய்து கொண்டே, நம் அருகில் நட்புடன் வாழும் பறவை.

One thought on “தூவித்தோழர்கள்-15”

Comments are closed.