முன் நின்று


கானமயில் ஓவியம் – Great indian Bustard – By Mr. Jayaraj S –  “Winged non sapiens – A group show of ecological fine artists” – Arthur space, Kalpa Druma – Chennai – 07.Dec. 2025

இந்த ஓவியம் பற்றி பார்வையாளனாகிய என் எண்ணங்களை தொகுத்து எழுத வேண்டும் எனத் தோன்றியது.

காட்சி அரங்கில் ஒவ்வொரு ஓவியமாக பார்த்து, அவற்றின் அழகை, நேர்த்தியை, நுட்பங்களை வியந்தபடி வருகையில் ஒரு தனி சுவரில்,  எட்டு ஓவியங்களில் ஒன்றாக மாட்டப்பட்டிருந்த இந்த ஓவியம் என்னை தன்னிலையழித்து நிறுத்தியது.

கீழ்வருபவை அனைத்தும் இந்த ஓவியத்தைப் பார்த்ததும் நான் அடைந்த அதிர்ச்சியை வார்தைகளால்  நீட்டித்துக் கொள்ளும் முயற்சியே.

முதலாவதாக பறவையின் நிற்கும் நிலை. முன்னோக்கியோ, பக்கவாட்டிலோ அல்ல அதன் பின்புறம் நமக்கு தெரியும்படி வரையப்பட்டுள்ளது. ஒருகாலை சற்று முன்னே, எங்கோ கிளம்பிச் சென்று கொண்டிருப்பது போல. இது ஓர் புறப்பாட்டின் தருணம்.

திரும்பிச் செல்லும் பறவை ஒரு கணம் நின்று தலையைத் திருப்பி நம்மை நோக்குகிறது. அதன் கண்கள் நமக்கு தீர்க்கமான, நிதானமான அதே சமயம் அனைத்தும் அறிந்த ஓர் அலட்சியமான தோரணையை அளிக்கிறது.

மஞ்சள் வெளிவட்டமும், ஒளி பிரதிபலிக்கும் ஈரமிக்க அதன் முழுவட்டக் கண்கள் வரையப்
பட்டிருந்தால் பறவை பதற்றமாக, எதையோ எதிர்நோக்கும் தோரணை வெளிப்பட்டிருக்கும்.

மனிதனுக்கு மிக விருப்பமான வெளிப்பாட்டு உணர்ச்சியிது. உரிமையாளர் பிரியும் போது ஏக்கத்துடன் நோக்கும் நாய்களின் கண்களை நினைவுகூறுங்கள். எதையோ எதிர்நோக்கி அது கிடைக்காத கணம் கண்கள் தளும்பத் துவங்கும் குழந்தையின் முகத்தை நினைவுகூறுங்கள். அது ஓர் இறைஞ்சல், மன்றாட்டு.

அனைத்தையும் அழிவிலிருந்து மீட்க அவதரித்திருக்கும் மானுட தேவர்களான நாம் அழிவின் விளிம்பிலிருக்கும் இந்த கானமயிலிடம் எதிர்பார்ப்பது அந்த மன்றாட்டை. இந்த மன்றாட்டை முன்வைக்கும் எத்தனையோ புகைப்படங்கள், ஓவியங்கள் உங்கள் நினைவுக்கு வரலாம்.
மாறாக இந்த ஓவியம் மன்றாட்டுக்கு எதிரான உணர்ச்சிநிலையைக் கொண்டுள்ளது. என் அழிவு உன் அழிவின் தொடக்கம் என சொல்ல கடைசியாக அந்தப் பறவை திரும்பியது போல. இப்போது பார்வையாளர்களாகிய நமக்கு அந்தப் பதற்றம் தொற்றிக் கொள்கிறது.

இரண்டாவதாக பறவையின் பின்னனி. வலப்பக்கம் பசுமையில் படர்ந்தேரும் கருமை, ஒரு தொற்றுநோய் போல பசுமையை ஊடறுத்து விரைவாக பரவிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே மூன்றில் இரண்டு பங்கு இடத்தை ஆக்கரமித்தாயிற்று, இன்னும் சிறிது பச்சையே உள்ளது. இது ஓர் அபாயகரமான நிலையை உணர்த்துகிறது. ஆனால் அதன் உச்சம் கருமையின் முடிவில் உள்ள ‘♪’ இசைத் துணுக்கில் உள்ளது .

Quarter note என அழைக்கப்படும் இந்த குறியை ஓர் இசையின் துவக்கம் எனப் புரிந்து கொண்டால், கருமையின் ஆக்கிரமிப்பு உண்மையில் அதன் இறுதியை எட்டவில்லை, இப்போதுதான் துவங்குகிறது. அதுவும் இசையைப் போல நுண்மையாக, ஈடுபாட்டுடன், மகிழ்ச்சியாக. இந்த படிமம் அளிக்கும் பயங்கரம் உண்மையில் அச்சமூட்டுவது.

கீழே விதவிதமான ஆடம்பர வீடுகள், பெரும் மதில்களுக்குள்ளே மரங்களிருக்க வெளியே மதிலைக்கடக்க திராணியற்று திரும்பிச் செல்லும் கால் நடைகள், நடைபாதைகளின் ஓரம் நாம் ரசித்து மகிழ்வற்கு கொஞ்சம் மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் செடிகள், இடது புறத்தின் ஓரம் பாதி கிழிக்கப்ட்ட பெருமலைகள். இவற்றைப் பகைப்புலமாய்க் கொண்டு சிவப்பு வண்ணத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்ட ‘Real estate’  – ‘Individual house’ – ‘For sale’ போன்ற வாசகங்களை பார்க்கையில் அதளிக்கும் அர்த்தம் இன்னும் தீவிரமானது.

மேற்சொன்ன அனைத்திற்கும் நடுவே நிற்கும் பறவையை மீண்டும் ஒரு முறை பாருங்கள், அதன் நிமிர்வு நமக்களிக்கும் பதற்றத்தை மீண்டும் உணர்வோம்.

இறுதியாக காலம். கானமயிலின் தலைக்கு கீழே, பெரிய எழுத்துகளில் உள்ள ‘TIME’ எனும் வார்த்தை சுட்டுவதென்ன? இது யாருக்கான சுட்டல்? கானமயிலுக்கானதா? அல்லது பார்வையாலர்களாகிய நமக்கானதா?

எனக்கிந்த குறள் நியாபகம் வருகிறது.

‘என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.’

என் ‘ஐ’ முன்னின்றவர். ஆசிரியர் ஜெயமோகன் அந்த ஐ – தலைவனை – காலம் என ஒரு உரையில் குறிப்பிடுவார்.

ஆம். ஓவியதின் முன்நிற்கையில் நாம் பறவையின் முன் நிற்கவில்லை. காலத்தின் முன் நிற்கிறோம். பறவை காலத்தின் சாட்சியாக அதன் பக்கத்தில் நிற்கிறது. கானமயிலின் பார்வையின் திடம் காலத்திலிருந்தே அதற்கு வருகிறது. ஒருவகையில் நாம் செய்வதனைத்திற்குமான எதிர்வினை காலத்திடமிருந்தே வருகிறது. எவ்வளவு விரைவாக அல்லது தாமதமாக என்பதே நாம் எழுப்பிக் கொள்ள வேண்டிய கேள்வி.

கருமை படர்ந்தேருவது பசுமையிலல்ல, நம் காலத்தில். குறைந்து வருவது பசுமையின் பரப்பல்ல, காலத்தின் அளவு.

அதன் காலடியில் வீட்டின் ஓடு பற்களாக மாற, கருநிறத்தில் சிரித்துக் கொண்டிருப்பது என்ன? உருமாறிவந்த காலனின் காரான் வாகனமா? கானமயில் அதன் மீது ஏறுவதற்கு முந்தைய கணமா நாம் காண்பது?

ஓவியர் ஜெயராஜ் அவர்களுக்கு நன்றி.


லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்
சென்னை
10.12.2025