நிலவில் துவங்குதல்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு – கொரட்டூர் ஏரி, சென்னை – 06.12.2025


அவ்வப்போது
நிலவிலும் துவங்குவோம்
நிலவுதான்
இருளுக்கும் இடமளிக்கிறது

Me (left) with Govindarajan sir (Right)

06.12.2025, சனிக்கிழமை அன்று காலை, சூரியன் ஏரியில் நீராடி எழுவதை பறவைகளுடன் சேர்த்து பார்த்துவிடுவதென்று நானும் கோவிந்தராஜன் சாரும் அவரவர் வீட்டிலிருந்து கொரட்டூர் ஏரிக்கு கிளம்பினோம்.

இருள் இன்னும் விலகவில்லை. பௌர்ணமி கடந்து ஒரு நாளே ஆவதால், முழுநிலவு தான் தேய்வதை இன்னும் அறியவில்லை. ஏரியில் பறவைகள் ஒலிகளாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டன. ஓர் ஒலி பறந்து சென்றது. மற்றொன்று இடது புறம் கிளம்பி வலது புறம் நீரில் இறங்கியது. ஒரு வெண்மார்பு மீன்கொத்தி விடாமல் பாடிக் கொண்டிருந்தது.

வெளிச்சத்தின் புலன் கண்கள், எனவே ஒலிக்கும், செவிக்கும் இரண்டாமிடம் தான். மாறாக இருளின் புலன் செவி, இங்கு கண்களுக்கு இடமேயில்லை. எனவே வெளிச்சத்தில் கேட்கும் பறவையின் ஒலியல்ல இருளில் கேட்பது. இருளின் ஒலி பறவையேதான். பறவையின் ஒலிகளை மனப்பதிவு செய்துகொள்ள இருள் விலகுவற்கு முன் பறவைகள் பார்க்கச் செல்ல வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.

ஒளி பரவத்துவங்கியதும் ஒலியிலிருந்து பறவைகள் வடிவத்திற்கு வந்தன. தமக்கான நிறங்களை பிரித்து சூடிக்கொண்டன. நாடக அரங்கில் திரைகள் விழுவதுபோல் சூழல் உருவாகிவந்தது. உலகமும் உயிர்களும் மற்றொரு சுற்றுக்கு தயாராயின.

Indian Pond heron (left) Little Egret (Right top) Grey headed swamphen (Right bottom)

ஏராளமான மடையான்கள் (Indian pond heron), சின்ன, நடுவாந்தர கொக்குகள் (Little & Medium Egret) , நீல தாழைக்கோழிகள் (Grey headed swamphens) , செந்நாரைகள் (Purple heron) இன்னும் பல நீர்பறவைகள் உணவுதேடிக் கொண்டிருந்தன.

Indian golden oriole (left) Black Drongo (right)

ஏரியின் கிழக்கே ஒண்டிவீரன் கோவிலுக்கு அருகிலிருந்த சாலையோர மரங்களிலிருந்து பல பறவைகளின் ஒலிகள் கேட்டபடி இருந்தன. முதல் முறையாக மாங்குயிலை (Indian golden oriole) இங்கே பார்க்கிறேன். கரிச்சானும் (Black Drongo), சின்னானும் (Red vented bulbul) யாரிவர்கள் என பார்த்துவிட்டு சென்றன.

Rose ringed parakeet (left) Red wattled lapwing (right)

கோயிலை ஒட்டியபடி இருந்த ஏரிக்கரையின் நடைபாதையில் நடக்கத் துவங்கினோம். ஏரியின் ஓரம் படர்ந்திருந்த நீர்த்தாவரங்களை அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. வழிநெடுகிலும் பல பறவைகளைப் பார்த்தோம். ஆலாக்கள் (Terns), செம்மூக்கு ஆள்காட்டி (Red wattled lapwing), தையல் சிட்டு (Common Tailorbird), பச்சைக் கிளி (Rose ringed parakeet) இன்னும் பல.

இரண்டு மணி நேரம் கடந்துவிட்டது. மனமின்றி திரும்பி நடக்கத் துவங்கினோம். செல்லும் போதே கண்ட ஒரு ஜோடி வெள்ளை மார்பு மைனா (?) Indian pied starling எங்கள் கூடவே வந்து கொண்டிருந்தன. கீழே உள்ள படம் கடைசியாக நாங்கள் ஏரியிலிருந்து வெளியேறும் போது எடுத்தது.
மேலே வானத்தை எதை எதிர்நோக்கி பார்த்துக் கொண்டிருக்கின்றன இரண்டும்?
இவ்வுலக உயிர்களனைத்திற்கும் வேண்டுதல்கள் அனைத்தும் விண்ணோக்கித்தான் போலும்.

Indian pied starling

ஏரியைவிட்டு வெளியேறி சாலையில் நடந்து கொண்டிருக்கையில், தங்கள் எதிர்காலத்தை பொதியாய் சுமந்தபடி குழந்தைகள் பின்னால் அமர்ந்திருக்க பெற்றோர் தங்கள் வாகனத்தை பள்ளியை நோக்கி விரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களின் வலப்பக்கம் திறந்திருந்த இயற்கையை ஒருவரும்  ஒருகணம் கூட திரும்பிப் பார்க்கவில்லை. ஏன்? எது இயற்கையை அவர்களிடமிருந்து மறைக்கிறது?

நான் இப்படி நினைக்கிறேன். அவர்கள் சென்று கொண்டிருப்பது ஒளியை நோக்கி. அறிவையும், ஞானத்தையும் ஒளியுடன் இணைத்தே பார்க்க நம்மரபு நமக்கு பழக்கியுள்ளது. அறிவொளி இயக்கம் உடனடியாக உங்கள் நினைவுக்கு வரலாம். அந்த அதீத ஒளியே அதைத்தவிர மற்ற எதையும் பார்க்கமுடியாத படி நம் கண்களை மறைக்கிறது. இயற்கையை பற்றிய அறிதலும் ஓர் ஒளியென்று நாம் முன்வைத்தாலும் கூட, வேலையை உறுதி செய்யும் கல்வியை சூரியன் என நம்பிக் கொண்டிருக்கும் மக்களுக்கு, பகலில் தெரியும் நிலவு போல வெளிறிய, கவர்ச்சியற்ற ஒளியுடன் தேவைக்கு உதவாத ஒன்றெனவே இயற்கையை பற்றிய அறிதல் தோன்றக்கூடும்.

நான் இயற்கையை அறிதலை பகலுக்கான சூரியன் என்றல்ல, இருளுக்கான நிலவென்றே சொல்வேன். அது பகலொளிபோல் ஒரு புலனை மட்டும் விழிப்புறச்செய்து, அதீதத்தால் மற்றதை மறைக்கும் கதிரொளியல்ல. மாறாக இருளிலும் துணைவரும், கண்ணுக்கு இணையாவே, செவிக்கும், நாசிக்கும் வாய்ப்பளிக்கும், கண்ணை உறுத்தாத கனிவுடன், வண்ணபேதங்களற்று அனைத்தையும் சமமாய் காணச் செய்யும் நிலவொளி என்றே சொல்வேன்.

Spot billed pelican

இது அன்றெடுத்த கடைசிபடம். ஒருவகையில் நாம் என்னும் லட்சியப்படம் என்றும் சொல்லாம்.

மூன்று கூழைக்கடாக்கள் (Spot billed pelican) ஒரு குடும்பம் போல் அமர்ந்திருக்க, நடுவிலிருக்கும் பறவை அது அமர்ந்திருக்கும் நிலையில் குழந்தை போலவும், மற்ற இரண்டும் தாயும் தந்தையும் போல தோற்றமளிக்கிறது. தன் குழந்தை தன் முன் விரிந்திருக்கும் இயற்கையைப் பார்த்து மெய்மறந்து அமர்ந்திருக்க, அதைப் பெருமையுடன் பார்த்தபடி உடனிருக்கும் பெற்றோர்!

நாம் கான வேண்டிய கனவையும் சேர்த்தே நமக்களிக்கும் இயற்கையை வியந்தபடி அங்கிருந்து கிளம்பினோம்.

eBird checklist: https://ebird.org/checklist/S287440864

லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்
சென்னை
13.12.2025