தங்க மாங்குயில் (Indian Golden Oriole)
வீட்டினுள் வேலை செய்தபோது, இதுவரை கேட்டிராத புதிய ’கா கா குக்கூ’ என்ற குரல் கேட்டது. Merlinல் Sound Id போட்ட போது தங்க மாங்குயில் என்று காட்டியது. உடனே வெளியில் சென்றேன். வீட்டின் பின்புறத்தில் உள்ள தூங்கு வாகை மரத்தில், ஒரு ஜோடி தங்க மாங்குயில்கள் அமர்ந்து கூவிக் கொண்டிருந்தன.

தங்க மாங்குயில்– பெயருக்கு ஏற்ற மாதிரி பொன் மஞ்சள் நிற உடல், கண்ணைச் சுற்றியும் இறகிலும் கருப்பு, கண்கள் சிவப்பு, அலகு இளஞ்சிவப்பு நிறம் கொண்ட அழகிய பறவை. பெண் பறவை பச்சை கலந்த இளமஞ்சள் நிறத்தில் உள்ளது. முன்புபொரு முறை, பொள்ளாச்சி தோட்டத்தில், பார்த்த நொடியில் பறந்துவிட்டது. இன்று வெகு நேரம் மரத்தில் அமர்ந்து கூவிக் கொண்டிருந்ததால், ரசிக்க முடிந்தது.

படித்தறிந்தது
- கிளைகளின் நுனியில் ஆழமான கிண்ணம் போல புல்லை வைத்து பெண் பறவை கூடு கட்டுகிறது. ஆண் பறவை பொருட்களை சேகரித்துக் கொண்டு வருகிறது. இரண்டு முதல் நான்கு முட்டைகள் வரை இடும். இரண்டு வாரம் அடைகாக்கும். குஞ்சுகளை ஒரு மாதம் வரை கவனிக்கும்.

- Oriolus என்ற பேரினப் பெயர் தங்க நிறம் என்பதை குறிக்கும் லத்தின் சொல்லான aureolus என்பதிலிருந்து வைக்கப்பட்டுள்ளது. (பள்ளியில் Aurum(Au)-Gold என்று படித்தது ஞாபகம் வருகிறதா?)
- Eurasian golden oriole ம் (Oriolus oriolus), இதுவும் ஒரே இனமாக கருதப்பட்டிருந்தது. வாழும் இடம் வேறு வேறாக இருப்பதாலும், கண்ணைச் சுற்றி இருக்கும் கருப்பு நிற வளையம் கண்ணின் பின்னும் நீண்டு உள்ளதாலும், தற்போது இது தனி இனமாக கருதப்படுகிறது.
