தூவித்தோழர்கள்-17

பனங்காடை (Indian Roller)

எனக்கு பறவை பார்த்தலில் ஆர்வம் வந்ததற்கான காரணம் பனங்காடை தான். கருப்பு நிற அல‌கு, தலை, சிறகு, வால் ஆகியவற்றில் பல வகையான நீலம், கழுத்து மற்றும் மார்பில் வெள்ளை நிற தீற்றல்களுடன் சாம்பல் நிறம் கொண்ட பறவை. பறக்கும் போது, தெரிந்த பலவகையான நீல வண்ணங்களில் மனம் மயங்கினேன். தென்னை மர பொந்தில், அமர்ந்திருந்ததை ஒரு முறை பார்த்தேன். வெள்ளிமலை பறவை பார்த்தல் வகுப்பிற்கு வந்த போது, அதன் தனித்துவமான, பறந்து கொண்டே சுற்றுவதை (Rolling) எல்லோரும் பார்த்தோம்.

சாலையில் நடந்து சென்ற போது, தூரத்தில் மின்சார கம்பியில் ஒரு பறவை அமர்ந்திருந்தது. அதன் அளவைப் பார்த்து, பனங்காடையாக இருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அது வாலை மெதுவாக இடவலமாக ஆட்டியது. அதனால் அதை பனங்காடை என்று உறுதி செய்தேன். தொடர்ந்து பறவை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒவ்வொரு பறவைக்கும் உள்ள‌ தனித்துவமான விஷயங்களை கவனிக்க முடிகிறது. ஏற்கனவே வாசித்திருந்தாலும், அது செய்வதை பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது.

பொள்ளாச்சி தோட்டத்தின் அருகே 5 ஜோடிகள் வரை, ஒரே சமயத்தில் பார்த்திருக்கிறேன். ஒரு முறை, மின்சார கம்பியில் ஒரு ஜோடி பனங்காடைகள் அமர்ந்திருந்தன. ஆண்,பெண் பறவைகளுக்குள் வேறுபாடு இல்லை. பெண் பறவைக்கு, ஆண் பறவை பூச்சியை பிடித்துக் கொண்டு வந்து கொடுத்தது. பெண் பறவை செல்லும் இடமெல்லாம், ஆண் பறவையும் தொடர்ந்து சென்றது. அதன் அன்பை பார்த்து, அடுத்த பிறவியில் பெண் பனங்காடையாக பிறக்க முடிவு செய்துவிட்டேன்.

படித்தறிந்தது

  • ஒரே இணையுடன் வாழும். ஆண் பெண் பறவைகள் சேர்ந்து மர பொந்துக்குள் புல், இறகுகள், தாள்கள் ஆகியவற்றைக் கொண்டு கூட்டின் உட்பகுதியை அமைக்கின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும்.
  • கர்நாடகா, ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் மாநிலப் பறவையாக உள்ளது. நீல நிறம் காரணமாக வடமொழியில், இதற்கு நீலகண்ட் என்று பெயர். சிவனுடன் தொடர்புடையதாக இருப்பதால்,இதை புனிதமாக கருதுகின்றனர்.பண்டிகைகளின் போது இவற்றைப் பார்ப்பது நல்ல சகுனம் என்பதால், இவை பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுகின்றன.
  • Coracias என்ற பேரினப் பெயர், காகத்தைப் போன்ற என்பதை குறிக்கும் கிரேக்க சொல்லான Korakias என்பதிலிருந்தும் , benghalensis என்ற இனப்பெயர், இப்பறவை முதன்முதலில் வங்காளப் பகுதியில் பதிவு செய்யப்பட்டதாலும் வைக்கப்பட்டுள்ளது. Coracias benghalensis – காகத்தைப் போன்ற வங்காளத்தில் பதிவு செய்யப் பட்ட பறவை.