தூவித்தோழர்கள்-18

கரும்பருந்து (Black Kite)

அதிகாலை நேரம் தவிர மற்ற நேரங்களில், கரும்பருந்துகள் கூட்டமாக வானில் வட்டமிட்டு கொண்டிருப்பதை பார்க்க முடியும். உடல் முழுவதும் பழுப்பு நிறம், அலகின் மேல் பகுதி, கால்களும் மஞ்சள், வளைந்த கூரிய‌ அலகின் பெரும் பகுதி கருப்பு நிறத்திலும் இருக்கும். வால் ‘V’ வடிவில் இருக்கும். மதிய நேரத்தில் இரு கரும்பருந்துகள், எதிரெதிரே வட்டமாக பறந்து கொண்டிருந்ததை ஒரு முறை பார்த்தோம்.

ஒரு நாள் காலைநடை சென்றபோது, சாலையின் மறுபுறம் பருந்து பறந்து கொண்டிருந்தது. வெளிச்சம் குறைவாக இருந்ததால், கரும்பருந்தா செம்பருந்தா என்று தெரியவில்லை. யோசித்துக் கொண்டே சென்றுவிட்டேன். திரும்பி வரும்போது, அதே இடத்தில் தலைக்கு மேல் அசைவு தெரிந்தது. நிமிர்ந்து பார்த்தால், மிக அருகில் கரும்ப‌ருந்து தாழ்வாகப் பறந்து, தரையில் இறங்கியது. அந்த நாளின் மிக மகிழ்ச்சியான தருணம் அது.

படித்தறிந்தது

  • ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காணப்படுகிறது. இதன் துணை இனங்கள்(subspecies) மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன- கரும்பருந்து இனம்(Black Kite group (migrans, govinda, affinis)), கருப்பு காது பருந்து இனம் (Black-eared Kite group (lineatus and formosanus)), மஞ்சள் அலகு பருந்து இனம் (Yellow-billed Kite group (aegyptius and parasitus)).
  • உயர்ந்த மரங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றில் குச்சிகளைக் கொண்டு கூடு கட்டும். இரண்டு அல்லது மூன்று முட்டைகள் இடும். 26 முதல் 38 நாட்கள் வரை அடைகாக்கும். பெண் பறவை பெரும்பாலும் அடைகாக்க, ஆண் பறவை இரை தேடிக் கொண்டு வரும்.
©Link
  •  Milvus என்ற பேரினப் பெயர் பருந்தை குறிக்கும் லத்தீன் சொல் , migrans என்ற இனப்பெயர், வடக்கே உள்ள இதன் இனங்கள் வலசை செல்வதை குறிக்கிறது. ஜிப்ரால்டர் நீரிணை(Strait of Gibraltar) அட்லாண்டிக் பெருங்கடலையும் மத்திய தரைக்கடலையும் இணைக்கிறது. இதன் வழியாக, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கரும்பருந்துகள் குளிர் காலத்திற்காக ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு வலசை வருகின்றன. Milvus migrans- வலசை செல்லும் பருந்து.