தூவித்தோழர்கள்-19

ஊர்த் தேன்சிட்டு (Purple-rumped Sunbird)

வீட்டின் எதிரில் ஆடாதொடை புத‌ர் செடி உள்ளது. தினமும் காலையில், அதன் பூக்களில் தேன் குடிக்க ஒரு ஜோடி ஊர்த் தேன்சிட்டு வரும். அதன் ஒலிக்கும், உருவத்திற்கும் சம்பந்தமே இல்லை. அத்தனை குட்டிப் பறவை, சத்தமாக பாடிக் கொண்டே இருக்கும். ஏன் இவ்வளவு சக்தியை வீண் செய்கிறாய் என்று மனதிற்குள் கேட்டுக்கொள்வேன். அதன் பாடலுக்கு காரணமோ பயனோ இருக்கலாம் அல்லது பாடுவது அதற்கு மகிழ்ச்சியை தரலாம்; நான் யார் முடிவு செய்ய‌?

தண்ணீர் தொட்டியில் இருந்து சொட்டிக் கொண்டிருந்த நீரை, குழாயின் ஓட்டையில் அமர்ந்து அருந்திய அழகான காட்சி, மனதில் பதிந்து விட்டது. ஆடாதொடை செடி அருகில், பள்ளியிலிருந்து வரும் தேவ் காக காத்திருந்தபோது, பறந்து வந்த ஓர் ஆண் பறவை என் அருகில் அமர்ந்தது. மெல்லிய நீண்ட கரு அலகு, எலுமிச்சை மஞ்சள் நிற மார்பு, வெள்ளை வயிறு, பளபளக்கும் கரும்பச்சை நிற முன்தலை, அடர்பழுப்பு நிற தலை,மார்பு மற்றும் முதுகு, ஊதா கழுத்து,கருப்பு நுனி இறகுகள் என்று பல நிறங்களை கொண்டுள்ளது. அதன் வேகம் மற்றும் சிறிய அளவு காரணமாக மேற்புறம் அடர்பழுப்புபாகவும், அடிப்புறம் மஞ்சளுமாக தெரிகிறது. பெண் பறவை மேற்புறம் இடலைப்பச்சையாகவும்(Olive Green), அடிப்புறம் வெள்ளையாகவும் இருக்கிறது. தொலைநோக்கியில் பார்ப்பது ஒரு வகை அனுபவம். கண்களால் கைக்கெட்டும் தொலைவில் பார்த்தது மறக்க முடியாத அனுபவம்.

© Supratim Mukherjee

படித்தறிந்தது

  • தொங்கும் பை போன்ற கூட்டை, புல், ஒட்டடை, இலைகளை வைத்து, மரக்கிளை நுனிகளில், ஆறு நாட்களில் கட்டி முடிகிறது. இரண்டு அல்லது மூன்று முட்டைகளை , 16 நாட்கள் வரை பெண் பறவை அடை காக்கிறது.
© Kristof Zyskowski
  • ஊர்த் தேன்சிட்டு, நீளமான மலர்களின் அடிப்பகுதியில், அதன் கூர்மையான அலகினால் குத்தி துளையிட்டு, மலரமுதை உறிஞ்சி விடுகிறது. மகரந்த சேர்க்கைக்கு உதவாமல் மலரமுதை பருகுவதால், இது மலரமுது திருட்டு(Nectar Theft) என்று அழைக்கப்படுகிறது.
  •  Leptocoma என்ற கிரேக்க பேரினப் பெயரில் ‘lepto‘ என்பது மிருதுவான என்பதையும், ‘coma’ என்பது முடியையும் குறிக்கிறது. zeylonica என்ற இனப்பெயர், Ceylon – இலங்கையை குறிக்கிறது. இப்பறவை இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷில் மட்டுமே காணப்படுகிறது. Leptocoma zeylonica  – மிருதுவான முடியை உடைய இலங்கையில் காணப்படும் பறவை.

One thought on “தூவித்தோழர்கள்-19”

Comments are closed.