ஆராவமுது


பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பின் அனுபவக்குறிப்பு – திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் – 14-17.01.2026


நேரம் நெருங்கிவிட்டது!
விண்ணளந்தோன் புன்னைகையுடன், தன் ஒப்பனையறைக்குப் புறப்பட்டார். அறியாத தேவர்களும், அசுரர்களும் கடினமான தொடர் செயலால் களைத்திருந்தனர். வாசுகி இதற்கு மேல் முடியாதென்பது போல் துவண்டிருந்தார். மாந்தாரமலையும் இது எப்போது முடியுமென எண்ணியவாறு சலிப்புடன் சுழன்று கொண்டிருந்தது. கீழே பாற்கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் கடலைக் கடையும் வேகம் கூடியபடியே இருந்ததே தவிற குறையவில்லை. ஆம், தேவர்களும், அசுரர்களும் எதிர்பார்த்திருக்கும் பொருள் தங்கள் வாழ்வையே ஈடாக வைத்துப் பெரும் அளவிற்கு மதிப்புள்ளது என அங்கிருந்த அனைவரும் அறிந்திருந்தனர்!

2026ஆம் ஆண்டிற்கான பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு ஜனவரி 14ஆம் நாள் துவங்கி 17ஆம் நாள் முடிந்தது. இது நான் பங்கெடுக்கும் இரண்டாமாவதாண்டு. இம்முறை ஒரு கல்லில் மூன்று மாங்காய்கள் அடிக்கலாம் என்றெண்ணி,
• ஆசிய பறவைகள் கணக்கெடுப்பையும் – AWC (குறைந்தபட்ச தேவை:  நீர்நிலை, 30 நிமிடங்களுக்கு குறையாத பட்டியல்)
• தமிழ்நாட்டில் இதுவரை பறவைகளை பார்த்து பட்டியலிடாத இடங்களை நிரப்புதலையும் – Gap filling (குறைந்தபட்ச தேவை: பட்டியலில் உள்ள சதுர எல்லையிடப்பட்ட இடம், வெவ்வேறு நில அமைப்புகளில் பதிவிட்ட 4 பட்டியல்கள், 15  நிமிடங்களுக்கு குறையாத பட்டியல்)
சேர்த்துக் கொண்டேன்.
இங்கே குறிப்பிடத்தகுந்த ஒன்றுண்டு. கல்லை கையிலெடுக்கும் முன் குறைந்தபட்சம் மூன்று மாங்காய்களும் ஒரே கிளையிலாவது இருக்குமாறு பார்த்துக் கொள்வது உடம்பிற்கு நல்லது.

நாள் ஒன்று:

14ஆம் நாள் புழலேரியிலிருந்து முதல் பட்டியல் துவங்கியது. போகிப்புகை சூரியனை தமிழ்நாட்டிற்குள் மட்டும் வரவிடாமல் வெளியே நிறுத்தியிருந்து. தொலைநோக்கியால் எவ்வளவு துழாவியும் இருபதடிக்கு மேல் பார்க்க முடிவில்லை.

புழல்ஏரி – புகைத் திரைக்குப் பின் – கூழைக்கடா மற்றும் மடையான்கள் (Spot billed pelican & Indian pond herons)

அன்று மாலை அலுவலகத்திலிருந்து சற்று முன்பே கிளம்பி திருவள்ளூர் மாவட்டம், வதட்டூர் கிராமத்திற்குச் சென்றேன். இதுவரை பட்டியல் ஏதும் போடப்படாத இடம் இது. இத்தகைய இடங்களின் முதல் சிக்கல், எங்கிருந்து துவங்குவது என்பதுதான். நான் அதை இயற்கைக்கே விட்டுவிடுவேன். வதட்டூரின் எல்லைக்குள் நுழைந்து மெதுவாக சென்று கொண்டிருக்கையில் ஒரு மாங்குயில் (Indian Golden oriole) குரல் கொடுத்தபடி என்னைக் கடந்து சென்றது. சைகை கிடைத்துவிட்டது, துவங்க வேண்டிய இடம் இதுதான்.

இயற்கை மாங்குயிலை அனுப்பியது ஒரு சிறப்பான வரவேற்பு. அது மங்களத்தின் குறியீடுமட்டுமல்ல, விரிதலின், சுடர்தலின், பயமகற்றுதலின் குறியீடு. ஆதிமனிதன் பொன்மஞ்சள் நிறத் தீயை கண்டடைந்ததும் அவன் முதலில் அடைந்த உணர்ச்சி, இதுவரை மூடியிருந்த இருளும், அதன் பயமும் தன்னை விட்டகன்றந்தன் மகிழ்ச்சியாகத்தான் இருக்க முடியும். பொன்மேலான மானுடரின் பித்து தீயிலிருந்து வந்திருக்கலாம். நாம் பார்க்கும் சூரியன் சிவப்பிலிருந்து வெளிர் மஞ்சளுக்கு செல்லும் நிறவேறுபாடுகளாய் இருக்கையில், நம் நினைவுகளில் பொன்மஞ்சள் நிறத்தை சூரியனுக்கு அளித்தது யார்? ஏனெனில் மஞ்சள் விடியலின் குறியீடு. நம் முக்கனிகளும் மஞ்சள் நிறமானவை, அது இனிமையின் குறியீடு. அன்னை, என்னை பறக்கும் சுடர் காட்டி தன்னுள் வரவேற்றாள்.

வாழைத் தோப்பு, அழகிய சிறு நீர்த்தேக்கம் என சென்று கொண்டிருந்த நான் நேரம் கரைந்து கொண்டிருந்ததை உணரவில்லை. இங்கிருக்கும் வதட்டூர் ஏரியை ஆசிய பறவைகள் கணக்கெடுப்புக்காக குறித்து வைத்திருந்தது நினைவுக்கு வர உடனே அங்கு கிளம்பினேன்.
புதிய இடங்களில் பறவைகள் அவதானிக்கச் செல்கையில் வரும் அடுத்த இடர், பறவைகள் பார்க்க சிறந்த இடம் எது என்பதை நாம் தான் கண்டடைய வேண்டும் என்பதே. வதட்டூர் ஏரிக்கு செல்லும் வழியிலேயே ஏராளமான அரிவாள் மூக்கன்கள் (Glossy ibis) கூட்டம் கூட்டமாக ஏரியிருந்த திசை நோக்கி சென்று கொண்டிருந்தன. ஒருவழியாக ஏரியை கண்டுபிடித்து, வண்டியிலிருந்து இறங்கி ஏரிக்கரைக்குச் செல்ல முற்பட்டால், ஏரியின் முன் விரிந்திருந்த புல்பரப்பெங்கும் நீர் நிறைந்திருந்தது. எப்படிக் கடப்பது எனத் தெரியாமல் தயங்கிக் கொண்டிருந்த என்னைக் கரையேற்றிவிட உள்ளூர் தம்பி தீனா வந்தான்.

வதட்டூர் தம்பி தீனா

ஏரியில் ஆச்சரியம் காத்திருந்தது.  நுற்றுக்கணக்கான அரிவாள் மூக்கன்கள் கூடடைந்து கொண்டிருக்க, ஏற்கனவே அங்கிருந்த பறவைகள் ஒத்திசைந்த விண்நடனத்தை (Murmuration) நிகழ்த்திக் கொண்டிருந்தன. கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். சொல்லில் விவரிக்க முடியாத அதன் அழகைக் காண நீங்கள் நேரில்தான் சென்றாக வேண்டும்.

சூரியன் மறைந்து நெடுநேரமாகிவிட்டதால் வேறு வழியில்லாமல் திரும்பினேன். என் வருதத்தைப் பார்த்ததோ என்னவோ ஒரு புள்ளி ஆந்தை (Spotted owlet) தன் பொந்திலிருந்து வெளியே வந்து மின்கம்பத்தில் அமர்ந்து, ‘பார்த்துக்கலாம்’ என ஆறுதல்படுத்திவிட்டு பொந்துக்கு திரும்பியது.

புள்ளி ஆந்தை (Spotted owlet)

நாள் இரண்டு:


15ஆம் தேதி பொங்கலாதலால் வாலை சுருட்டிக் கொண்டு வீட்டிலிருக்க வேண்டியதாயிற்று. இருப்பினும் மாலை கிடைத்த ஒரு சிறு இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு அம்பத்தூர் ஏரியில் ஆசிய நீர்பறவைகள் கணக்கெடுப்புக்காக ஒரு பட்டியலிட்டு வந்தேன்.

Left to Right: இராக்கொக்கு (Black crowned night heron), சிவப்பு மூக்கு ஆள்காட்டி (Red wattled lapwing), மடையான் (Indian pond heron), இளைய இராக்கொக்கு (Black crowned night heron – Juvenile)

நாள் மூன்று:


16ஆம் தேதி காலை 4.30 மணிக்கு ராணிப்பேட்டைக்கு புறப்பட்டேன். ஆசிய பறவைகள் கணக்கெடுப்பில் விடுபட்ட சில மாவட்டங்களில் ராணிப்பேட்டையும் குறிப்பிடப்பட்டிருந்ததால், இரவோடிரவாக திட்டத்தை சென்னையிலிருந்து தக்கோலம் பேரூராட்சிக்கு மாற்றினேன். வதட்டூர் ஏரியில் பட்டதுபோல் நேரமின்மையில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக முதலில் புது கேசவனூர் அணைக்குச் சென்றேன். ஏரிக்கு இட்டுச் சென்று கொண்டிருந்த நிலவரைபடம் மையச்சாலையிலிருந்து சட்டென வலதுபுறம் ஒடிந்து ஒரு மண்சாலையில் இறக்கியது. சந்தேகத்துடன் வாகனத்தை இயக்கி, மாட்டிற்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்த ஒரு அக்காவிடம் வழியை உறுதி செய்து கொண்டு முன்னேறினேன். அணை, கொசஸ்தலை ஆற்றை பாதியாய் பிரித்து ஒரு பகுதியை கூவம் ஆற்றில் இணைத்துக் கொண்டிருந்தது. முதல் நாள் ஆறுதல் கூறிய புள்ளி ஆந்தை இன்று ‘வருக’ என்றவாறு பறந்தகன்றது. இவ்வாறு ஆசிய நீர்பறவைகள் கணக்கெடுப்பின் நான்காவது பட்டியலும், பொங்கல் கணக்கெடுப்பின் ஏழாவது பட்டியலும் துவங்கியது.

இனிமேல் நான் புத்தகங்களில் விண்ணுலகம் எனும் வார்த்தையைப் படித்தால் என் ஆழ்மனம் பனிபடர்ந்த இந்த ஆற்றை அதன் நடுவிலிருந்து பார்த்த காட்சியையும், சிறிதாய் திறக்கப்பட்ட மதகின் வழி விரைந்து சென்ற நீரின் ஓசை, எங்கும் நிறைந்திருந்த பல்வேறு பறவைகளின் ஓசையுடன் இணைந்த இசையையும்தான் கற்பனையில் கொண்டுவரும் என நினைக்கிறேன்.

புது கேசவனூர் ஏரியில் சிறிய நீர்காகங்கள் (Little cormorant)

நுழைந்ததுமே மூன்று வெண்புருவ வாலாட்டிகள் (White browed wagtail) கரையில் உணவுதேடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். நத்தை கொத்தி நாரைகள் (Asian openbill), பெரிய நீர்காகங்கள் (Great cormorant), ஆற்று ஆலா (Rever Tern), கருங்குருகு (Black bittern) என பல பறவைகளைப் பார்க்க முடிந்தது. ஆற்றிலிருந்து கரையேறி வாகனத்தின் அருகில் சென்றபோது ஓர் குயிலிணை கண்ணோடு கண் நோக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். கார்முகில் மேனியனும், மண் (நிற)மகளும்! அண்ணலும் அவளும்!!

குயில் (ஆணும், பெண்ணும்) – Asian koel

நேரத்தைக் கருத்தில் கொண்டு அடுத்த இடத்திற்கு விரைந்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏரியிலிருந்து மண்சாலையை அடைந்த போது கிராம பெண்கள் அனைவரும் வீதியிலிருகக் கண்டேன். ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை இடைவெளியில்லாமல் வண்ணக் கோலங்கள் விரிந்திருந்தன. என்னைப் பார்த்த அனைவர் கண்களிலும் மிரட்சி. ஒரு தங்கை, “பாத்து, கலைக்காம போங்க” என்றாள். நான் நடந்து சென்றிருந்தால் கூட விளிம்பில் கால் பட்டுவிடும் அளவுக்கு தெருவின் குறுக்கே இருமுனைகளையும் தொட்டு கோலங்கள் விரிந்திருந்தன. வேறுவழியில்லை. காரின் ஜன்னல் கண்ணாடியை இறக்கி அனைவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டே தெருவைக் கடந்தேன். நரகத்தில் கோலத்தை அழித்தற்கென தனியே தண்டனைகள் உண்டா எனத் தெரியவில்லை.

இது பதிவிற்காக வேறு இடத்தில் எடுக்கப்பட்டது. அங்கே எடுத்திருந்தால் வெட்டுதான்..

நாள் நான்கு:


2015 ஆம் ஆண்டு. பயணம் எனும் சொல் சாகசம் எனும் சொல்லின் மொழிபெயர்ப்பு என நம்பிக் கொண்டிருந்த பருவம். நானும் நண்பனும் ஈருருளியில் பல்வர்கால குடைவரைகளைக் காணக் கிளம்பினோம். மாமண்டூர் போல சில இடங்களைக் குறித்துக் கொண்டு, அதை நோக்கிச் செல்லும் வழியில் எது கவனத்தை ஈர்த்தாலும் அங்கே செல்வதென்பது எங்கள் பயண விதிகளில் ஒன்று. அவ்வாறுதான் அன்று வந்தவாசியில் ஒரு மொட்டைமலைமேல் இருந்த கோயிலைப் பார்த்தோம். வண்டியை மலையடிவாரத்தில் நிறுத்தி ஏறத்துவங்கினோம். உச்சி வேளை, கையிலிருந்த நீர் தீர்ந்துவிட்டது. மேலே செல்லுந்தோரும், ஆங்காங்கே இருந்த சில புதர் செடிகளும் மறைந்து  தக்கிக்கும் பாறைகள் மட்டும் நின்றிருந்தன. தாகத்துடன் பசியும் சேர்ந்து கொண்டது. திரும்பிவிடலாம் என்றால் ஆணவம் மறுத்தது. பாதிக்கு மேல் ஏறியாயிற்று இன்னும் கொஞ்சம் தானே என மனம் சொல்லியது. கிட்டத்தட்ட அரைமயக்க நிலையில் ஒரு வளைவில் திரும்பிய போது, இதயம் துடிப்பதை நிறுத்த அப்படியே உறைந்து நின்றோம். சுமார் ஐந்து அல்லது ஆறடி உயரத்தில், வளர்ந்த வாழைமர கனத்தில் ஒரு பாம்பு படமெடுத்து நின்றிருந்தது. தலை ஐந்தாய் பிரிந்திருந்ததை உணர சில கணங்களானது. அப்பொழுதும் சித்தம் அதை சிமெண்ட் பாம்பென ஏற்றுக் கொள்ளவில்லை. எங்கிருந்தோ என ஆற்றல்வந்திறங்க, நாங்கள் சென்று நின்ற இடம் மலையின் உச்சி. அன்றடைந்த அந்த உச்சத்தை இன்று வரை நாங்கள் பார்க்கும் போதெல்லாம் பரவசத்துடன் நினைவுகூர்கிறோம். ‘ஒருமுறை போர்க்களம் புகுந்தவன், மீண்டும் மீண்டுமென அங்கே போக விழைவான்’ என்பார் ஜெ. ஒவ்வொறு முறையும் நான் புதுப்புது இடங்களாக தேடிச் செல்வதற்கு இவ்வனுபவமும் ஒரு காரணமாய் இருக்கக்கூடும்.

போளிவாக்கம் ஏரி

இதுவும் இதுவரை பறவைகள் கணக்கெடுப்பு நடக்காத பகுதி. விஷ்ணுபுரம் பறவைகள் வட்டத்தில் ஒப்புக்கொண்டது போல் காஞ்சிபுரம் மாவட்டம், கண்டமங்கலம் கிராமத்திற்கு அதிகாலை கிளம்பி 6 மணி அளவில் குறித்திருந்த இடத்தை அடைந்தேன். முதலில் பார்த்த இடம் ஓர் மாந்தோப்பு. அனைத்து தோப்புகளும், மதில்களுக்குள் கிடந்தன. அனைத்துக் கதவுகளும் தவறாமல் பூட்டப்பட்டிருந்தன. பின் அங்கிருந்து ஐந்து கி.மி தொலைவிலிருந்த, இதுவரை கூகுள் வரைபடத்தில் பெயரிடப்படாத ‘போளிவாக்கம்’ ஏரிக்குச் சென்றேன்.

அக்காகுயில் (Common hawk cuckoo)

உள்ளே நுழைகையில் ஒரு அக்காகுயில் (Common hawk cuckoo) ஒவ்வொறு முறையும் தன் குரலை தாழ் சுருதியில் துவங்கி உச்ச ஸ்தாயிக்கு ஏற்றி முடித்து மீண்டும் தாழ் சுருதியில் எனத் தொடர்ந்து கூவிக் கொண்டிருந்தது. ஏரியிலும், கரையிலிருந்த மரங்களிலும் ஏராளமான பறவைகள்.  ஊர்த்தேன் சிட்டுகள் (Purple ramped sunbird), நாமக்கோழிகள் (Eurasian coot), நீலவால் ஈ பிடிப்பான்கள் (Blue tailed bee eater) கருஞ்சாம்பல் கரிச்சான் (Ashy Drongo) எனப் பல.

கருஞ்சாம்பல் கரிச்சான் (Ashy Drongo)

ரம்யமான சூழல், பனி போர்த்தியிருந்த ஏரியின் ஓரம் அல்லி மலர்ந்திருந்தது. நேரமாவதை உணராமல் சுற்றிக்  கொண்டிருந்துவிட்டு, போதும் திரும்பலாம் என முடிவெடுத்த போதும் மனம் இன்னும் ஏதோ ஒன்று மிச்சமிருப்பதாய் சொல்லிக்கொண்டிருந்தது. சட்டென ஏரியிருந்த திசையிலிருந்து இரண்டு பறவைகள் எதிரிலிருந்த மரத்தில் வந்தமர்ந்தன. பார்க்கும் முன்பே அறிந்திருந்தேன் போல, வந்தமர்ந்தவை மாங்குயில்கள் என. நிறைவும் மங்களமே, அன்னையே!

மாங்குயில் (Indian Golden oriole)

நான்கு நாட்களாய் சென்று கொண்டிருந்த பயணம் முடிவுக்கு வந்தது. வீட்டை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கையில் எனக்கு எதிர்திசையில் ஒரு பறவைக்கூட்டம் கடந்து செல்ல, அனிச்சையாய் தலை பின்னே திரும்பியது.

நம்மாழ்வார் திருக்குடந்தை நெடுமாலை, ஆராவமுதே! என்கிறார்.

ஆரா அமுதம்!
எவ்வளவு அருந்தினாலும் திகட்டாத அமுது,
திகட்டாததால் உண்டு தீராதது,
தீராததால் என்றுமிருப்பது.
நித்தியமானது, அதை அருந்துபவர்களை நித்தியமாக்குவது.

இதோ, முட்டையில் தேங்கிய சிறுகடல் முயங்கி உருவாகி, விண்ணெழுந்த இப்பறவைகள் செல்லும் திசையெங்கும் விரிந்திருக்கின்றன நான் செல்ல வேண்டிய நிலங்கள், நுழைய வேண்டிய காடுகள், ஏறவேண்டிய மலைகள், கால் நனைந்து, சேற்றில் புதைய வேண்டிய நீர்நிலைகள், சந்திக்க வேண்டிய மனிதர்கள், இன்னும், இன்னும்…

இவற்றின் வழி நீட்டித்துக் கொள்கிறேன் என் நினைவுகளை, எல்லையை, இளமையை, கனவுகளை, காலத்தை…!

பெருமூச்சுடன் சாலையை நோக்கித் திரும்புகையில் என் நாவில் ஒரு சொல் நின்றிருந்தது,

ஆராவமுது.

ஆம். அவ்வாறே ஆகுக.

அந்தியில் கூடடையும் அரிவாள் மூக்கன்கள் (Glossy ibis)

eBird பட்டியல் – https://ebird.org/tripreport/466043

லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்
சென்னை
22.01.2026