கௌதாரி (Gray Francolin)
தினமும் காலையில் இதன் ‘கீகிக்கிக் கீகிக்கிக் கீகிக்கிக்’ கேட்டுத்தான் எழுவேன். இந்த பறவைகளும், அதன் குரல்களும் என்னைச் சுற்றி எப்போதுமே இருந்திருக்கின்றன. ஆனால் நான் அதனை கவனித்ததே இல்லை. காகம், மயில் தவிர வேறு பறவைகள் எதையுமே பார்த்ததில்லை.வகுப்பிற்கு வந்த பின், குறைந்தபட்சம் 15 பறவை இனங்களை தினமும் பார்க்கிறேன். இங்கேயே ஒரே ஒரு முறை பார்த்த பறவை இனங்களும் உண்டு. வீட்டினுள் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், ஒரு காது வெளியில் இருக்கும். என்னிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம்தான், எனக்கு மிகுந்த ஆச்சரியம் தருகிறது. ஆர்வத்தை ஏற்படுத்திய ஆசிரியர்களுக்கு நன்றி.

பொள்ளாச்சி தோட்டத்தில் ஒரு கௌதாரி குடும்பத்தை பார்த்தேன். பெற்றோர் முன் செல்ல, பின்னாலேயே நான்கு குஞ்சுகள் ஓடிக்கொண்டிருந்தன. கோழி அளவுள்ள பழுப்பு நிறப் பறவை. ஆண் பறவை உருவத்தில் சற்று பெரிதாகவும், காலில் முள்ளும்(spur) உள்ளது. ஆண்,பெண் பறவைகளுக்குள் நிறத்தில் பெரிய வேறுபாடு இல்லை. குரலைக் கேட்கிற அளவு, பார்க்க முடியவில்லை. காலையில் தோட்டத்தை விட்டு வெளியே செல்வதையும், மாலை திரும்புவதையும் பார்க்க முடியும். நடந்தும், ஓடியும் செல்லும். பறந்து செல்வதை இதுவரை பார்த்தில்லை.

படித்தறிந்தது
- இயற்கையாக இவை ஈரானில் இருந்து இந்தியா, பங்களாதேஷ் வரை காணப்படுகின்றன. 1954 இருந்து 1975 வரை அமெரிக்காவின் ஆறு மாகாணங்களில் இப்பறவை, வேட்டையாடப்படுவதற்காக புல்வெளியில் விடப்பட்டது. ஆனால் அவை அங்கு பல்கி பெருகவில்லை. அதன் காரணம் குறைந்த வெப்பநிலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஹவாயில் மட்டும் உயிர் பிழைத்து, அவை இப்போது வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
- தரையில் குழி பறித்து, அதில் புல், இலை, இறகுகளை பரப்பி, நான்கு முதல் பத்து முட்டைகள் வரை இடும். 19 நாட்கள் வரை பெண் கௌதாரி அடை காக்கும். குஞ்சு பிறக்கும் போதே, உடலில் மென் இறகுகள் இருக்கும். உடனே நடக்கவும் ஆரம்பிக்கும்.

- Ortygornis என்ற பேரினப் பெயர், ortux (quail-காடை) மற்றும் ornis (பறவை), என்ற இரு கிரேக்க சொற்களின் சேர்க்கை. pondicerianus என்ற இனப்பெயர், இப்பறவை முதன்முதலில் (1789) புதுச்சேரி பகுதியில் பதிவு செய்யப்பட்டதால் வைக்கப்பட்டுள்ளது. Ortygornis pondicerianus – காடையைப் போன்ற புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட பறவை.
One thought on “தூவித்தோழர்கள்-20”
Comments are closed.