பறவைகள் பார்த்தல் அனுபவக் குறிப்பு – அடையாறு கழிமுகம் – சென்னை – 25.01.2026

உங்களுக்கு திருவாளர் தாமஸ் ஹிடோஷி புரூய்க்ஸ்மா (Thomas Hitoshi Pruiksma) அவர்களைத் தெரிந்திருக்கலாம். திருக்குறளையும், அவ்வையாரின் பாடல்களையும் தமிழ்நாடு வந்து தங்கி, தமிழ் கற்று பின் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவர். தமிழ் விக்கியில் அவருக்கு பதிவிருக்கிறது. (சுட்டி கீழே).
விஷ்ணுபுரம் அமெரிக்க வட்டத்தினால் நடத்தப்படும் கா.நா.சு உரையாடல் அரங்கில் இவரிடம் தாவரவியல் பேராசிரியர் லோகமாதேவி ஒரு கேள்வி கேட்டிருப்பார்.
“அமெரிக்க வாழ் ஜப்பானிய வம்சாவளியினரான உங்களுக்கு தமிழ் மரபின் எல்லா கருத்துகளிலும் உடன்பாடிருக்கிறதா” என கேட்டு, அதற்கு
‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை’
எனும் குறளையும் உதாரணத்திற்கு குறிப்பிடுவார். தாமஸை விடுங்கள் நாமே அக்கருத்திற்கு உடன்படப் போவதில்லை. ஆனால் அதற்கு தாமஸ் அளிக்கும் பதில் சுவாரஸ்யமானது. பதில் இரண்டு பகுதிகளைக் கொண்டது முதல் பாதி இக்கட்டுரைக்கு தொடர்பில்லையாதலால் நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் (சுட்டி கீழே) இரண்டாம் பாதியில் அவர் அக்குறளுக்கு என்றைக்குமான ஒரு விளக்கம் இருக்கமுடியுமா என தான் சிந்திப்பதாகவும், அப்படிப் பார்த்தால், கணவன் மனைவியை எல்லாம் விட்டுவிடுங்கள்,ஒருவர் உண்மையான, திடமான நம்பிக்கையுடன், உறுதியுடன், அர்ப்பணிப்புடன் ஒன்றை செய்வாரெனில் அதற்கு எவ்வகையிலோ இந்த விசும்பு எதிர்வினையாற்றும் என்பதை தானும் நம்புவதாக குறிப்பிட்டிருப்பார்.

25.Jan.2026 ஆம் தேதி நண்பர்கள் சிலர் இணைந்து அடையாறு கழிமுகத்தில் பறவைகள் பார்ப்பதாக திட்டம். ஆனால் இரண்டு நாட்களாக மழை பெய்து கொண்டிருந்ததால் நிகழ்வு நடைபெறுவதில் நிச்சயமற்ற தன்மையே இருந்தது. குறிப்பிட்டநாள் அன்று காலை ஐந்து மணிக்கு – வெளியே சிறிது தூறல் மட்டும் இருந்ததால் – சென்று விடுவோம் என முடிவெடுத்து கிளம்பினேன். கிளம்பும் நேரத்தில் பகவனும் (மகன்) வருவதாக சொல்லி இணைந்து கொண்டான். காரில் கிளம்பி சற்று தூரம் வந்திருப்போம் தூறல் வலுத்து மழை பெய்யத் துவங்கியது. செல்லச் செல்ல மழை வலுத்துக் கொண்டே சென்றது. குழுவில் நண்பர்கள் மழையிருப்பதால் வரமுடியவில்லை எனத் தெரிவித்தார்கள். பாதி தூரம் கடந்திருந்தாலும் பரவாயில்லை திரும்பிவிடுவோம் என நான் முடிவெடுத்து, பகவனிடமும் ஒரு சொல் கேட்டுவிடுவோம் என அவன் பக்கம் திரும்பினேன்.
முகுந்த் நாகராஜன் எழுதிய இக்கவிதை பிரபலமான ஒன்று.
குழந்தைகளின் ஜன்னல்கள்
இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்.
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா.
வீடு இங்கேதான் இருக்கிறதாம்.
இதெல்லாம் ஒரு காரணமா?
அவனும் இதெல்லாம் ஒரு காரணமா என்பது போல் பார்த்து பறவைகள் பார்ப்பதற்கே போகலாம் என்று சொன்னான். சரி வந்தது வந்துவிட்டோம், துணைக்கு குடையிருக்கும் தைரியத்துடன் அடையாறு சென்றுவிட்டேன்.

இங்கே முதல் முறை வருகிறேன். நுழைகையிலேயே கருப்பும் வெள்ளையுமாய் காகங்களும் (House Crows), உண்ணிக் கொக்குகளும் (Cattle Egrets) வரவேற்றன. கழிமுகத்தில் ஏராளமான கொக்குகள் (Little, Medium& Great Egrets). சங்குவளை நாரைகள் (Painted storks), கூழைக்கடாக்கள் (Spot billed Pelicans) இரை தேடிக் கொண்டிருந்தன. சிறிய நீர்காகங்கள் (Little cormorant) ஆற்றில் முக்குளித்துக் கொண்டிருக்க, கடற்காக்கைகள் (Pallas & Brown headed gull) கடலை வட்டமிட்டு திரும்பிக் கொண்டிருந்தன. ஆலாக்கள் (Terns) எதிர்காற்றில் இறக்கையை விரித்து நீந்திக் கொண்டிருந்தன.


நெடுநாட்களாக தேடிக் கொண்டிருந்த கொண்டலாத்தி (Hoopoe) இங்கே காணக்கிடைத்தது. பச்சைப் பஞ்சுருட்டான் (Asian green bee eater) மழையில் குளித்ததால் பளிச்சென்றிருந்தது. நெடுங்கால் உள்ளான்கள் (Black winged stilt) சத்தமில்லாமல், கொக்குகளின் நடுவில் மறைந்தபடி உணவு தேடிக் கொண்டிருந்தன.

கழிமுகத்தில் பெரிதாக ஆள்நடமாட்டமில்லை. கிளம்பும் நேரம், சைக்கிளிங் நண்பர் குழு ஒன்று வந்தது. அவர்களுடன் அவரவர் ஆர்வங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டு கிளம்பும் நேரம் ஒருவர் ‘ எப்படியோ கடைசியாக பூநாரையை (Flemingo) பார்த்துவிட்டதாக சொல்ல, நான் அவை சங்குவளை நாரை (Painted storks) எனத் தெரிவிக்க அவர்களுக்கு சற்று வருத்தம்தான். நல்லவேளையாக முன்பே நான் அவர்களுடன் சிரித்தமுகத்துடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

திரும்பி வண்டியில் ஏறும் போதுதான் கவனித்தேன். சுமார் ஒன்றரை மணிநேரம் கடந்துவிட்டது. வந்ததிலிருந்து சிறு தூறல் கூட இல்லை. பெசன்ட்நகர் வரும்வரைக்கும் பெய்து கொண்டிருந்த மழை எங்கே?
நமக்கு சிறுவயதிலேயே தேவதைக் கதைகள் அறிமுகமாகிவிடுகின்றன. பெரும்பாலும் நன்னெறிக் கதைகள். நல்லவர்களுக்கான நீதி, நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருக்க ஒரு தேவதைத் தோன்றி நல்லவருக்காக அற்புதங்கள் செய்து நீதியை நிலைநாட்டும். யோசித்துப் பார்க்கையில் குழந்தைகளுக்கு அல்ல அதையெழுதிய பெரியவர்களுக்கே தேவதைகள் தேவைப்பட்டிருக்கும். கோடாரி ஆற்றில் விழுந்த கதையில், அவர் ஆற்றில் இறங்கித் தேட, நீரின் அடியில் அவருக்கு தங்க, வெள்ளி, இரும்பென மூன்று கோடாரிகளும் கிடைத்தன, பேராசை கொண்டவருக்கு கிடைக்கவில்லை என்றால் நம்புவதில் குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பிரச்சனை பெரியவர்களுக்குத்தான். உண்மை, உறுதி, நம்பிக்கையெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் நடைமுறையில் சாத்தியமா என்பதே நம் கேள்வி. நேர்மறை நம்பிக்கைக்கும் நேர்மறை விளைவிற்கும் நடுவே உள்ள நடைமுறை சாத்தியம் எனும் நம் சந்தேகத்தை நிரப்பவே தேவதைகள் தேவையாகிறார்கள். அந்த குறளில் பெண் கணவனைத் தொழட்டும் இல்லை தெய்வத்தைத் தொழட்டும் பிரச்சனை அதுவல்ல. அது எப்படி பெய் என்றால் மழை பெய்யும்?
இரவிலிருந்து விட்டு விட்டு பெய்யும் மழை, அடையாறு பாலம் வரை நிற்காத மழை, இன்னும் ஐந்து நிமிடங்களில் நின்றுவிடும் என்பதற்கும், அடுத்த ஒன்றரை மணிநேரத்திற்கு பெய்யாமலிருக்கும் என்பதற்கும் என்ன நடைமுறை சாத்தியம் இருக்கிறது? அது தெரிந்திருந்தால் நண்பர்களை நானே வரச்சொல்லி அழைத்திருப்பேனே. அதை நிகழ்த்த தேவதைதான் வரவேண்டும். ஒரு மந்திரக்கோலை சுழற்றி மழையை அந்தரத்தில் நிறுத்த வேண்டும். எனக்குத் தோன்றுகிறது, வள்ளுவர் அவர் காலத்தில் இந்தக் குறளை மற்றவர்களுக்கு விளக்க நிச்சயம் ஒரு தேவதைக் கதையைத் தான் கூறியிருப்பார்.

காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். அதெப்படி மழை வராமலிருந்தது. கடற்காற்று மேகங்களை விரட்டிவிட்டதா? மேகங்களில் நீர் தீர்ந்துவிட்டதா? கருமேகங்களை கடற்கரை மேல் பார்த்தோமே, ஒரு கவிழ்ந்த கருமேக மலையை புகைப்படம் கூட எடுத்தோமே. வேறு என்னக் காரணம் இருக்க முடியும்? எனக்குத்தான் தெரியவில்லை. அறிவியலின் அனைத்து விதிகளும் எனக்குத் தெரியுமா என்ன? நான் தேவையில்லாமல் குழப்பிக் கொள்கிறேன். மழை பெய்து முடிந்துவிட்டது. அவ்வளவு தான். இதற்குப் போய் எதற்காக மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறேன். தலையை உதறிய படி காரை அடுத்த திருப்பத்தில் திருப்பினேன்.
மீண்டும் தூறத் துவங்கியது!
eBird பட்டியல்: https://ebird.org/checklist/S296120520
லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்
சென்னை
26.01.2026
தாமஸ் – லோகமாதேவி உரையாடல். 1.05 இருந்து 1.11 வரை. ஆனால் நான் முழு கானொளியையும் பார்க்க பரிந்துரைக்கிறேன்.
https://www.youtube.com/live/bjov5Aqz0jY?si=0Mj5Zld0KV6rK0_8
தமிழ் விக்கி பதிவு
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE