தூவித்தோழர்கள்-21

வேலி கதிர்க்குருவி (Blyth’s Reed Warbler)

ஜனவரியில் ஒரு நாள் காலை ‘கிர்‘ என்ற சத்தம் கேட்டது. பறவையா பூச்சியா என்ற சந்தேகத்தில் மெர்லினை கேட்டேன். ‘Hearing a Bird’ என்று கூறியதால், அது பறவை தான். கம்யூனிஸ்ட் பச்சை (Chromolaena odorata) புதரில் இருந்து, அதன் குரல் கேட்கும். ஒரு வாரமாக பார்க்க முயற்சி செய்தேன். ஒருமுறை ஒரு நொடி வெளியே வந்து, மறுபடியும் புதருக்குள் சென்று விட்டது. என்ன பறவை என்று கண்டுபிடிக்க முடியாததால், நம் குழுவில் கேட்டேன். கார்த்திக் சார், அதன் கிர் சத்தத்தை வைத்து, அது வேலி கதிர்க்குருவி என்று கூறினார்.

(Chromolaena odorata-1950-களிலிருந்து கேரளா மற்றும் இந்தியா முழுவதும் மிக வேகமாகப் பரவும் ஒரு ஆக்கிரமிப்பு களைச் செடி ஆகும். இது சியாம் களை (Siam weed) என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளிமலை செல்லும் பாதையெங்கும் பரவி இருக்கிறது.)

மழை தூறிய ஒரு நாள், சுற்றுச்சுவர் அருகே நின்றிருந்தேன். சுவ‌ற்றுக்கு மறுபுறம் உள்ள கம்யூனிஸ்ட் பச்சை புதரின் உள்ளிருந்து, வேகமாக பறந்து வந்து ஒரு செடியில் அமர்ந்தது. தையல் சிட்டு அளவு. சாம்பல் வண்ண உடல். மார்பும்,வயிறும் வெளிர் நிறம். கண் அருகில் மெல்லிய கோடு. நீண்ட, ஒல்லி அலகு. நன்றாக பார்க்க முடிந்தது. ஆண், பெண் பறவைகளுக்கிடையே வேறுபாடு இல்லை.இப் பறவையை தெளிவாக புகைப்படம் எடுத்தவர்களுக்கு நன்றியும், பாராட்டும். பெரும்பாலும் புதருக்குள் தான் இருக்கிறது. வெளியே வரும் சமயத்திலும், ஒரு நொடி கூட ஒரு இடத்தில் நில்லாமல், கிளைக்கு கிளை தாவிக் கொண்டே இருக்கிறது. பகல் முழுவதும் என்னுடன் பேசிக்கொண்டே இருக்கும் இக்குருவி, எங்கு சென்றாலும் அதன் நினைவு என்னுள்ளே எஞ்சி இருக்கும்.

செவ்வல‌கு பூஞ்சிட்டும் வேலி கதிர்க்குருவியும்


கதிர் குருவியின் ‘டிக் டிக்’ சத்தத்தை, மெர்லின் செயலி பூஞ்சிட்டு என்று தவறாக காட்டுகிறது. ‘டிக் டிக்’ என்று பூஞ்சிட்டு சீரான இடைவெளியிலும், கதிர் குருவி சீரற்ற இடைவெளியிலும் ஒலியெழுப்பும். சிறிது நேரத்திற்குள் ‘கிர்’ சத்தமும் கேட்கும். பெரும்பாலும் புதருக்குளிருந்து இதன் குரல் கேட்கும்.

படித்தறிந்தது

  • இது வலசை வரும் பறவை. ஐரோப்பிய ரஷ்யா மற்றும் ரஷ்யாவில் இருந்து வருகிறது. இனப்பெருக்கமில்லா காலத்தில் இந்தியாவில் இருக்கிறது. இனப்பெருக்கத்திற்கு மார்ச் மாதத்தில் மீண்டும் வடக்கே சென்று விடுகிறது.
©Birds of the World
  • தன் வால் இறகுகளை முழுவதுமாக உதித்து விட்டு வளர்க்கிறது(Rapid Moult). குருவி இனத்தில் இது ஒரு தனித்துவமான அம்சம். வால் இறகுகள் இல்லாத காலத்தில் இப்பறவையால் பறக்க முடியாது. வலசை செல்ல தயாராவதற்காக இவ்வாறு செய்யலாம் என்று கருதப்படுகிறது.
  •  முதன்முதலில் 1849ல், ஆங்கில விலங்கியலர் எட்வர்ட் பிளைத்தால் ( Edward Blyth) வேலி கதிர்க்குருவி விவரிக்கப்பட்டது. அவர் கொல்கத்தாவில் உள்ள இந்திய ஆசியச் சமூகத்தின் விலங்கியல் அருங்காட்சியகத்தில் பொறுப்பாளராகப் பணியாற்றினார். அவரின் நினைவாக Blyth’s Reed Warbler என்று அழைக்கப்படுகிறது. மொத்தம் 12 பறவை இனங்களுக்கும், 3 ஊர்வன இனங்களுக்கும் இவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

One thought on “தூவித்தோழர்கள்-21”

Comments are closed.