வேதிவால் குருவி (Indian paradise flycatcher)
பறவை பார்த்தல் வகுப்பில் இந்த குருவியை பற்றி தெரிந்து கொண்டேன். அப்போதிலிருந்து நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும் பறவை பட்டியலில் இது இருக்கிறது. வெள்ளிமலையில் குரு நித்யா அரங்கு அருகில் இருக்கும் நொச்சி மரத்தில் இப்பறவையை முதன்முதலில் பார்த்தேன். சின்னான் அளவுள்ள குருவி. செம்பழுப்பு நிற மேலுடல். வெள்ளை நிற மார்பும், வயிறும். கருப்பு நிற கொண்டையுடன் தலை. ஆண் பறவை நீண்ட வாலுடன் இருக்கும். இளம் ஆண் பறவைக்கும், பெண் பறவைக்கும் வால் குட்டையாக இருக்கும். சில ஆண் பறவைகள் உடலும், வாலும் வெள்ளை நிறத்தில் இருக்கும். செம்பழுப்பு நிற ஆண் குருவிகளுக்கு உருமறைப்பு(Camouflage) எளிதாக உள்ளது. வெள்ளை நிற ஆண் குருவிகளுக்கு இணை கிடைப்பது எளிதாக உள்ளது. இரு வகைகளும் தற்போது வரை நீடிப்பது, இரண்டிலும் உள்ள நன்மையை காட்டுகிறது.

©Prasan Shrestha

அனுவாவி முருகன் கோவில் படியின் அருகில் ஒரு ஆலமரத்தடியில் நின்றேன். அதன் கிளையிலேயே இப்பறவை வந்து அமர்ந்தது. பூச்சி பிடித்து வந்து மறுபடியும் கிளையில் அமர்ந்து உண்டது. பார்க்க நினைத்த பறவையை, நன்றாக பார்க்க முடிந்ததில் மிகவும் சந்தோஷம். இதன் அழகிய நடனத்தை இங்கு பாருங்கள்.

படித்தறிந்தது
- இப்பறவை மத்தியப் பிரதேசத்தின் மாநிலப்பறவையாகும்.
- ஒரே இணையுடன் வாழும். ஆண் பெண் பறவைகள் சேர்ந்து மரக்கிளையில் சிலந்தி வலையால் புல்லை இணைத்து கூட்டை அமைக்கின்றன. இரண்டு முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். 14 நாட்கள் வரை அடைகாக்கும். பாதுகாப்பிற்காக இது கரிச்சானின் கூடு அருகில் அதன் கூட்டை அமைக்கும்.

- Terpsiphone என்ற பேரினப் பெயர், terpo (மகிழ்ச்சி) மற்றும் phonos (சத்தம்)என்ற இரு கிரேக்க சொற்களால் ஆனது. paradisi என்ற லத்தின் இனப்பெயர், சொர்க்கத்தை சேர்ந்ததை போல் உள்ளது என்கிறது. Terpsiphone paradisi – மகிழ்ச்சியளிக்கும் குரலும் தெய்வீகத் தோற்றமும் கொண்ட பறவை.