தூவித்தோழர்கள்-23

வெண்மார்புக் கானாங்கோழி (White-breasted Waterhen)

தோட்டத்தில் உள்ள என் லக்ஷ்மி அத்தையின் வீட்டுக்கு சென்ற போது, வாசலில் ஒரு நீர்ப்பறவை மேய்ந்து கொண்டிருந்தது. கையேட்டில் மட்டுமே பார்த்த‌ பறவையை, நேரில் கண்டது மிகவும் சந்தோஷம். (New Lifelist!) அதில் வெண்மார்புக் கானாங்கோழி என்று போட்டிருந்தது. தலையின் பின் பகுதியும், முதுகும் கருஞ்சாம்பல் நிறம். முகமும், மார்பும், வயிறும் வெள்ளை. நீளமான காலும், கால் விரல்களும். வாலின் அடிப்புறம் கருஞ்சிவப்பு. வாலை ஆட்டிக்கொண்டே நடப்பது, நடனம் போல் இருக்கிறது. அதன் அல‌கின் நிறம், அதன் வயதை பொருத்தும், இனப்பெருக்க காலத்தை பொருத்தும் மாறும். இனப்பெருக்க காலத்தில் ஆணின் அலகு கரும்பச்சை நிறத்தில் இருக்கும். பெண் பறவையின் அலகு மங்கிய நிறத்தில் இருப்பது, அளவு சற்று சிறிதாக இருப்பதைத் தவிர வேறுபாடு இல்லை.

©Simon Best

‘இது தினமும் வருமா?’ என்று அத்தையிடன் கேட்டேன். ‘தினம் காலையில் இங்குதான் மேய்ந்து கொண்டிருக்கும். இரவு கிணத்து பக்கத்தில் அடையும். வருடா வருடம் மூணு இல்ல நாலு குஞ்சு வைக்கும். ஆனால் குஞ்சு வளர்ந்து பார்த்ததில்லை. பாம்பு அல்லது வேறு ஏதோ தின்றுவிடும்’ என்று அதன் மொத்த வரலாற்றையும் கூறி விட்டார்கள். கையேட்டில் பார்த்து ஒவ்வொரு பறவையாக ‘செம்போத்து வேலியோரத்தில் இருக்கிறது. தேன் சிட்டு தினமும் பவளமல்லி மரத்திற்கு வரும். கிணத்துக்கு மேலே உள்ள வேப்ப மரத்தில் தூக்கணாங்குருவி வருடா வருடம் கூடுகட்டும்’. வெண்மார்பு மீன்கொத்தியை காட்டி, ‘இது எப்போதும் கரண்ட் கம்பியில் அமர்ந்திருக்கும். தவிட்டுக்குருவி இங்கேயே தான் இருக்கும்’ என்று வரிசையாக சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். நாம் நேரம் ஒதுக்கி பற‌வை பார்த்தல் என்று தனியாக செய்வது, அவர்கள் வாழ்வின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. இயற்கையுடன் இணைந்து வாழும் பேறு பெற்றவர்கள்.

படித்தறிந்தது

  • இந்திய துணை கண்டத்திலும், இந்தோனேசிய தீவுகளிலும் காணப்படுகிறது.
  • பருவமழை காலங்களில் இனப்பெருக்கம் செய்யும். அப்போது தொடர்ச்சியாக இதன் குரலை கேட்க முடியும்.நீர்நிலை ஓரத்தில், தரையில் இலை, குச்சிகளை வைத்து கூடு கட்டி, நான்கு முதல் ஒன்பது முட்டைகள் வரை இடும். 20 நாட்கள் ஆண் பெண் பறவைகள் இரண்டும் அடைகாக்கும். குஞ்சு பிறக்கும் போது, கருவண்ண குருத்திறகுகளுடன்(Natal Down Feathers) பிறக்கிறது. குஞ்சு பிறந்தவுடன் நடக்க ஆரம்பித்து விடும்.
©Asim Mitra
  •  Amaurornis என்ற பேரினப் பெயர், amauros (சாம்பல்) மற்றும் ornis (நீங்க கண்டுப்பிடிங்க. Clue: Ornithology) என்ற இரு கிரேக்க சொற்களால் ஆனது. phoenicurus என்ற இனப்பெயர், phoinix (கருஞ்சிவப்பு வண்ணம்) மற்றும் ouros(வால்) என்ற இரு சொற்களால் ஆனது. உடலின் பெரும் பகுதி இருக்கும் வெள்ளையை ஏனோ அவர்கள் கண்டுகொள்ளவில்லை. Amaurornis phoenicurus – சாம்பல் வண்ண உடலும் கருஞ்சிவப்பு நிற வாலும் கொண்ட‌ பறவை.