கொண்டலாத்தி (Common Hoopoe)
கோவை குமரகுரு பொறியியல் கல்லூரியில் Backyard Ultra என்ற மராத்தான் போட்டி நடைபெற்றது. மராத்தான் என்பது 42.2 கிலோமீட்டர் ஓடுவது. Ultra என்பது அதைவிட அதிகமாக 80, 100, 200 கிலோமீட்டர் ஓடுவது. மனிதன் நினைத்ததை சாதிக்க எல்லையே இல்லை. என் கணவரின் நண்பர் அதில் கலந்து கொண்டதால், அவரை சந்திக்க நாங்கள் சென்றோம். பேசிக் கொண்டிருக்கும் போது ‘உப் உப் உப்’ என்ற ஒலி கேட்டது. நானும், தேவும் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு, குரல் வந்த திசையை நோக்கி சென்றோம். தரையில் மேய்ந்து கொண்டிருந்த கொண்டலாத்தியை பார்த்தோம். தலையும் உடலும் இளம் ஆரஞ்சு நிறம் . இறகுகளில் வரிக்குதிரை போல கருப்பு வெள்ளை பட்டைகள். பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொண்டையை விரித்த பின் பறந்தது. கொண்டையின் பெரும்பகுதி இளம் ஆரஞ்சு . நுனி கருப்பு. நீண்ட கூர்மையான கரு அலகு. பெண் பறவைகள் அளவில் சற்று சிறியதாகவும், நிறம் மங்கியதாகவும் இருக்கிறது.

பொள்ளாச்சி தோட்ட புளிய மரத்தில் கொண்டலாத்தி நெடுங்காலமாக வசித்து வருகிறது. என் அன்னை அதை மரங்கொத்தி என்று நினைத்துக் கொண்டார்கள். வகுப்பிற்கு சென்று வந்தபின், அது மரங்கொத்தி அல்ல; கொண்டலாத்தி என்று பெருமையாக சொல்லிக் கொண்டோம். கொண்டலாத்தியின் நீண்ட அலகு, அது மண்ணைக் கிளறி புழு பூச்சிகளை பிடித்து உண்பதற்காக. அது தரையில் இரை தேடும். மரங்கொத்தி மரத்திலேயே இருக்கும். இவை இரண்டும் வெவ்வேறு குடும்பத்தை (Family ) சேர்ந்தவை.
படித்தறிந்தது
- கற்காலக் கட்ட ஓவியங்களில் காணப்படும் சூரிய பறவை (Bird-Sun) இப்பறவையாக இருக்கலாம். உமை (Umay. எனக்கும் ஒரே ஆச்சரியம் தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்) என்ற துருக்கிய பெண் தெய்வம் குழந்தைகளின் பாதுகாவலராக உள்ளார். இப்பறவைக்கும், தெய்வத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. பைபிள் மற்றும் குர்ஆனில் இப்பறவை சாலமன் ராஜாவிடமிருந்து ஷீபாவின் ராணிக்கு தூது சென்றதாக சொல்லப்படுகிறது. ஆசிய ஆப்பிரிக்க தொன்மங்களில் நன்மையை கொடுக்கும் பறவையாகவும், ஐரோப்பிய கலாச்சாரத்தில் தீமையை கொடுக்கும் பறவையாகவும் நம்பப்படுகிறது. கற்காலம் தொடங்கி இப்பறவை மீதான ஈடுபாடு இருந்திருக்கிறது. இதன் தொன்மத்தை தனிக் கட்டுரையாக எழுதலாம். ஆர்வமுள்ளவர்கள் மேலும் படிக்க.

- ஏற்கனவே இருக்கும் பொந்தை, ஆண் பெண் பறவைகள் சேர்ந்து சுத்தம் செய்து, அதில் சாராசரியாக 10 முட்டைகள் வரை இடுகின்றன. பெண் பறவை மட்டுமே 18 நாட்கள் வரை அடைகாக்கிறது. பெண் பறவையின் சுரப்பியினால் கூடு மிகவும் துர்வாடை அடிக்கும். கெட்ட நாற்றம், வேட்டையாடிகளை அருகில் வர விடாமல் செய்கிறது. கிருமிகளும் குறைந்து குஞ்சுகள் ஆரோக்கியமாக வளருகின்றன.
- இப் பறவையின் தனித்துவமான ‘உப் உப் உப்’ ஒலியிலிருந்து இதன் பேரின பெயர், சிற்றின பெயர், ஆங்கில பெயர் வைக்கப்பட்டிருக்கிறன(இயல்பொலிச் சொற்கள்). பிரெஞ்சு வார்த்தையான huppée கொண்டையை குறிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. Upupidae குடும்பத்தின் வாழும் இனங்கள் இப்பறவையும், மடகாஸ்கர் Hoopoeவும். 1500களில் ஹெலெனா தீவுகளில் வசித்த பறக்க இயலாத Hoopoe மனித குடியேற்றத்தால் அழிந்து விட்டது. Upupa epops – உப் உப் என்று ஒலியெழுப்பும் பறவை.