தூவித்தோழர்கள்-25

நீலவால் பஞ்சுருட்டான்( Blue tailed Bee-eater)

அன்னூர் ஏரியின் அருகே நீலவால் பஞ்சுருட்டானை முதன் முதலில் பார்த்தேன். பறந்து சென்று பூச்சி பிடித்து மறுபடியும் மரத்தில் வந்து அமர்ந்தது. சிறிய பஞ்சுரட்டானை விட பெரிதாக இருக்கிறது. தலை பச்சை நிறம். முதுகும் வாலும் நீல நிறம். நீண்ட கூரிய கரு அழகு. கருப்பு நிற கண் பட்டையை ஒட்டி, மெல்லிய நீலக்கோடு உள்ளது. அல‌கின் கீழே மஞ்சள் நிறம்.கழுத்து செம்பழுப்பு நிறம். வால் சிறகின் நடுவில் உள்ள இரு இறகுகள் மட்டும் மிகவும் நீண்டு இருக்கிறது. ஆங்கிலத்தில் அதன் பெயர் Streamers. ஆண், பெண் பறவைகளுக்கிடையே வேறுபாடு இல்லை.

©Swapnil Thatte

பால் வாங்க வெளியே நின்றபோது, அருகில் இருந்த மின்சார கம்பியில் ஜோடியாக வந்து அமர்ந்தது. வீட்டின் அருகே இவர்களை பார்த்தவுடன் ஒரே சந்தோஷம். துணி காய வைக்க வெளியில் வரும்போது, திடீரென்று வானில் தோன்றி மறையும். நான் உண்மையில் பார்த்தேனா இல்லை மனமயக்கா என்று குழப்பம் அடைவேன். மரத்தில் இருந்து பறந்தால், ஆடும் கிளைகள் சாட்சியாக இருக்கும். வானத்தில் பறந்த பறவைக்கு சுவடு இல்லையே. வீட்டை சுற்றி வந்த போது, ‘நான் இங்கு இருப்பது உண்மைதான்’ என்று உறுதியளித்து தூங்குவாகை மரத்தில் அமர்ந்திருந்தது.

படித்தறிந்தது

  • இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் தீவுகளில் ஆண்டு முழுவதும், வட இந்தியாவில் இனப்பெருக்க காலத்திலும், இனப்பெருக்கமில்லா காலங்களில் தென்னிந்தியாவிலும் காணப்படுகிறது.
©Birds of the World
  • மணலில் பொந்து தோண்டி, 5–7 முட்டைகளை இடுகிறது. அடைகாக்கும் நாட்களை பற்றி உறுதியான‌ தகவல் இல்லை.
©Jayan Thomas
  •  Merops என்ற பேரினப் பெயர், தேனீயை உண்ணும் என்பதை குறிக்கும் கிரேக்க சொல். philippinus என்ற இனப்பெயர், இப்பறவை முதன்முதலில் பிலிப்பைன்ஸ் பகுதியில் பதிவு செய்யப்பட்டதால் வைக்கப்பட்டுள்ளது. Merops philippinus– தேனீயை உண்ணும் பிலிப்பைன்ஸில் முதலில் காணப்பட்ட‌ பறவை.