தூவித்தோழர்கள்-26

செண்பகம் (Greater Coucal)

பறவை பார்த்தல் வகுப்புக்கு வருவதற்கு முன், பெயர் தெரிந்த மிகச் சில பறவைகளில் ஒன்று செம்போத்து. மாநகராட்சியிலிருந்து குப்பையை தரம் பிரித்து வாங்குவதற்கு முன், மக்கும் குப்பைகளை வீட்டின் எதிரே ஒரு குழி தோண்டி அதில் போடுவோம். பகல் நேரங்களில் தவிட்டுக்குருவி, காகம், செம்போத்து ஆகிய பறவைகள் குப்பைக் குழியில் இருந்து உணவையோ இல்லை அருகில் இருக்கும் பூச்சியையோ பிடித்து உண்ணும். வாசல் படியில் அமர்ந்து, அதைப் பார்த்துக் கொண்டே தேவ் சாப்பிடுவான். காகத்தை போன்ற கருப்பு நிறம். சிறகுகள் செம்பழுப்பு நிறம். சிவப்பு நிற கண்கள்.

செம்போத்து ஒன்று அல‌கில் புல்லை கவ்வி கொண்டு வேப்பமரத்திற்கு சென்றது. நாலைந்து நாட்கள் அந்த இடத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் குஞ்சு பொரித்த மாதிரி தெரியவில்லை. இடம் சரியில்லை என்று வேறு இடத்திற்கு சென்று விட்டது என்று நினைக்கிறேன்.
மாலை வேளைகளில் இரு செம்போத்து பறவைகளின் ‘குப் குப்’ உரையாடல் கேட்கும்.

படித்தறிந்தது

  • இந்திய துணை கண்டத்திலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், இந்தோனேசியாவிலும் இப்பறவை காணப்படுகிறது. இடம் பெயராத பறவைகளில் ஒன்று.

©
Birds of the World
  • ஒரே இணையுடன் வாழும். மழைக்காலத்தில் குச்சி, இலை, புல்லை வைத்து கூடு கட்டி, இரண்டு முதல் நான்கு முட்டைகள் வரை இடும். ஆண் பெண் பறவைகள் சேர்ந்து குஞ்சுகளை வளர்க்கும்.
  •  இதன் பேரின பெயர் Centropus– கூர்மையான(kentron) பாதம்(pous) என்ற இரு சொற்களால் ஆனது. sinensis என்ற‌ சிற்றின பெயருக்கு சீனாவில் இருந்து வந்தது என்று பொருள்.(Hibiscus rosa sinensis ஞாபகம் வருகிறதா?) Centropus sinensis– கூர்மையான பின் கால் விரலை உடைய, சீனாவில் முதலில் காணப்பட்ட பறவை. இதன் சிற்றினத்தில் ஆறு துணையினங்கள்(subspecies) உள்ளன. அதில் இந்தோனேசிய தீவுகளில் ஒன்றான கஞ்சிய தீவில் இருக்கும் துணையினம் வெள்ளை மற்றும் பழுப்பு நிறத்தில் உள்ளது.
©Birds of the World– C. s. kangeangensis

One thought on “தூவித்தோழர்கள்-26”

Comments are closed.