பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு – நாக்பூர், சந்திரபூர் – 2, 3 & 4th Feb’26

இம்முறை மகாராஷ்டிரத்திற்கு வேலை நிமித்தமாக ஓர் நெடும்பயணம். வானிலிருந்து, மண்ணுக்கு – ஒன்றிலிருந்து, மற்றொன்றுக்கு என வாகனங்களை மாற்றியபடி சென்று கொண்டே இருக்க வேண்டிய பயணம். தூங்குவதற்காக மட்டும் நிலத்தில் கால் வைத்தேன். விழித்தவுடன் மீண்டும் பயணம்! எனவே ஓய்வு நேரங்களில் நான் திட்டமிடும் பறவைப் பார்த்தலுக்கு வாய்ப்பில்லை. ஆனால் ஆடிய கால்களாயிற்றே! அதற்கான வழிகளை அதுவே கண்டடைந்தது.
எனவே நண்பர்களே, இம்முறை சற்றும் திட்டமிடப்படாமல் நடந்தேறிய பறவைப் பார்த்தல் அனுபவத்திற்குள் நுழைய தயாராகுங்கள்.
நுழைவாயில் ஒட்டப்பட்டிருக்கும் அறிவிப்பு:
பாசமலர் படத்தில், ‘வாராய் என் தோழி வாராயோ’ எனும் பாடல் ஒன்றுண்டு. மணமக்கள் சொந்தங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்துகளுடன், லைக்குகளும் வேண்டி, குத்தாட்டத்தில் இறங்குவதற்கு முந்தைய காலகட்டத்தில், மணமேடைகளில் தவறாமல் ஒலிக்கும் பாடல் இது. இப்பாடலில் ‘மலராத பெண்மை மலரும்’ எனத் தொடங்கும் மூன்றாவது சரணத்தில், நடிகை சாவித்திரி அவர்கள் ஒரு 20 வினாடிகள் வெட்கப்பட்டிருப்பார்கள். அதை நண்பர்கள் ஒருமுறை ஒலியுடனோ அல்லது ஒலியின்றியோ பார்த்துவிட்டு உள்ளே செல்ல வேண்டுகிறேன். சுட்டி கீழே.
வாராய் என் தோழி – @3.26 min
https://youtu.be/LYU-SrNkhRw?si=_2TIanBnifHBIbpu
சென்னையிலிருந்து நாக்பூர் சென்றிறங்கியதும், அடுத்த ஊருக்கான பேருந்துக்கு சற்று நேரம் இடைவெளியிருந்தது. eBird செயலிவழியே அருகில் கோரிவாடா ஏரி (Gorewada Lake) இருப்பதை அறிந்து கொண்டு, ஒரு ஆட்டோவில் ஏறி அங்கு விரைந்தேன். ஏரியின் வாசலில் அமர்ந்திருந்த காவலர் ஏரி மூடப்பட்டிருப்பதையும் மீண்டும் மாலை திறக்கப்படும் என்பதையும் அறிவித்தார். நான் நெடுந்தொலைவிலிருந்து வந்திருக்கிறேன், இன்னும் ஒரு மணிநேரத்தில் அடுத்த ஊருக்கான பேருந்து இருக்கிறது என்பதை நான் ஆங்கிலத்தில் தெரிவிக்க, அவர் இந்த மதிய வெயிலில் உள்ளே சென்று என்ன செய்யப் போகிறான் எனத் தெரியாமல் இந்தியில் குழம்புவதாய் நினைத்துக் கொண்டு, பையிலிருந்து தொலைநோக்கியை எடுத்துக் காண்பித்ததும் அவர் முகம் ஒளிகொண்டது. நல்ல ஆங்கிலத்தில் “Entry fee Rs.100” என்றார். வேறு வழியில்லை, நேரமும் இல்லை. நூறு ரூபாய் என் கைப்பேசியிலிருந்து அவர் கைப்பேசிக்குச் சென்றது.
உள்ளே நுழைந்ததும் கண்டுகொண்டேன், சாலையில் இன்னும் சற்று முன்னே சென்றிருந்தால் வேலியிடப்படாத அந்த ஏரிக்கு உள்ளே நுழைய வேறு பல வழிகள் இருக்கின்றன என்று. அந்த ஒளி வட்டம் எங்கிருந்து வந்தது என அப்பொழுதுதான் புரிந்தது. தலைக்கு மேலே ஒரு கள்ளிப்புறா (Laughing dove) என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. எவ்வளவு முயன்றும் அது சிரிக்கிறாதா என அதன் முகக்குறிப்பிலிருந்து அறிய முடியவில்லை.

ஏரியில் செந்தலை வாத்துகள் (Red-crested Pochard) கூட்டமாக நீந்திக் கொண்டிருந்தன. தொலைவில் சிறிய நீர்காகங்களும் (Little cormorant) சில நடுவாந்திர கொக்குகளும் (Medium Egret) நின்றிருந்தன. மூக்கிலிருந்து தலை வரை மையை இழுத்துவிட்டது போல் இருந்த குள்ளத்தாராக்களைப் (Cotton pygmy goose) பார்த்தேன். கொளுத்திய வெயிலில் நேரம் உருகிக் கொண்டிருந்தது. ஏரியை சூழ்ந்திருந்த பூங்காவின் வழி வெளியேறி நடக்கத்துவங்க, அங்கேதான் இக்கட்டுரையின் முதன்மைப் பாத்திரத்தைப் சந்தித்தேன்.

பூங்காவில் நின்றிருந்த பெரும் மாமரம் சலனமற்றிருந்தது. பறவைபார்த்தல் வழியாக கற்றுக் கொண்டவைகளில் முக்கியமானது, அசாதாரண அமைதியுடன் இருப்பவை தம்முள் பொக்கிஷங்களை பொதிந்து வைத்திருப்பவை என்பது. அந்நிலையில் நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். அமைதியுடன் கண்களையும், காதுகளையும் திறந்தபடி சலனமற்று அச்சூழலுடன் பொருந்திவிடுவது. பரிசு நிச்சயம். என்ன? எப்போது? என்பதுதான் விடை காண வேண்டிய வினா. ஒருபுறம் நேரம் ஓடிக்கொண்டிருப்பது இதயத்துடிப்புடன் இணைந்து கேட்க, சற்று நேரம், சற்று நேரம் என என்னையே சமாதானப் படுத்தியபடி நின்றிருந்தேன்.
ஒரு கிளையில் அசைவு தெரிந்தது. வேகமாய் கீழே சென்று கொண்டிருக்கும் சருகு. நேரெதிர் திசையில் மற்றொரு அசைவு, காற்று கிளையை சிலுப்பிச் சென்றது. மேலுமொன்று, உச்சிக் கிளையின் நிழலசைவு. இன்னுமொன்று வெள்ளை விளிம்பிட்ட அடர்சாம்பல்நிற சிறிய விசிறி, பின்னாலொரு சத்தம்…. நில்! மரத்தில் விசிறியா என சுள்ளென உறைத்த பின்னர்தான் அங்கிருந்த ‘வெண்தோண்டை விசிறிவால் ஈப்பிடிப்பானை’ (Spot breasted fantail) பார்த்தேன்.

நேரத்தின் முள் குத்த, காத்திருந்த ஆட்டோவில் ஓடி ஏறி, ஐந்து நிமிடங்கள் பிந்தியிருந்தால் தவறவிட்டிருக்க வேண்டிய பேருந்தை பிடித்து சந்திரபூர் செல்லத் துவங்கினேன். அறியாத நிலங்களுக்கு பயணம் செய்வதென்பது மண்ணை மட்டுமல்ல மனிதர்களையும் அறியும் வாய்ப்பளிப்பது. அப்படியொரு நண்பர் இந்தப் பயணத்தில் அறிமுகமானார். ரகுபால், தெலுங்கானாக்காரர். குடும்பச்சூழல் காரணமாக மகாராஷ்டிரம் வந்து மராத்தியும், இந்தியும் கற்று கட்டிடங்களின் உட்புற வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். பேருந்தின் இடைநிறுத்தத்தில் தேநீரில் தொடங்கி, ஊர் சேர்ந்ததும் அவரே ஈருருளியில் அழைத்துபோய் அங்கே இஸ்லாமியர்கள் அதிகமிருக்கும் பகுதியில், உள்ளூர்காரர்களன்றி பிறர் கண்டறிந்துவிட முடியாத சிறிய உணவகமொன்றில், நான் இதுவரை சாப்பிட்டவற்றில் சிறந்த அசைவ உணவை வாங்கிக்கொடுத்து பின் எனக்காக ஏற்பாடு செய்திருந்த தங்கும்விடுதியில் கொண்டு சேர்த்து, “என்னவென்றாலும் அழையுங்கள், 30 நிமிடத்தில் நான் இங்கே இருப்பேன்” என்றார். இவை அனைத்திற்கும், பேருந்தில் 3 மணி நேரம் அவர் பேச்சுக்கு காது கொடுத்து மட்டுமே நான் செய்தது.
அடுத்த ஊருக்கு செல்ல நள்ளிரவைத் தாண்டிவிடும் என்பதால் அன்றிரவு சந்திரபூரிலேயே தங்குவதற்காக நான் மேற்சொன்ன விடுதி ஏற்பாடானது. அதிகாலையில் விடுதிக்கு அருகே பறவைகள் பார்க்கப் போவது பற்றி அவரிடம் சொன்னேன். சிரித்துக் கொண்டே கடந்த ஜூன் மாதம், அந்த தங்கும்விடுதிக்கு சற்று தொலைவில் புலி வந்து போன கானொளியொன்றை காட்டினார். கனிமங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதால், புலிகளும், கரடிகளும் ஊருக்குள் வருவது அதிகரித்துவிட்டது என்றும், காலை 7 மணிக்கு முன்னே விடுதியைவிட்டு வெளியே வரவேண்டாம் என்றார். இருந்த ஒரு வாய்ப்பும் இப்படியாக நழுவியது.
அடுத்த நாள் காலை விடுதியிலிருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலையிலேயே ஒரு பட்டியலைத் துவங்கி பறவைகளைப் பார்த்துக் கொண்டு சென்றேன். ஒரு மேம்பாலத்தில் ஏறியிறங்கும் சமயம் கீழேயிருந்த மரத்தில் மீண்டும் விசிறிவால் ஈப்பிடிப்பானைப் பார்த்தேன். கடந்த முறை பறவையைப் படமெடுக்காமல் விட்டது ஞாபகம் வர, நான் கைப்பேசியை எடுக்கவும், பறவை மரத்தின் பின்னால் சென்று மறையவும் சரியாயிருந்தது. ஆசிரியர் ஏ.வி.மணிகண்டன் சொல்வார் “நல்ல புகைப்படக் கலைஞன் ஒரு கௌபாய் போல, கருவியை எடுப்பதும், குறிவைப்பதும், சுடுவதும் மின்னல் வெட்டென நிகழ வேண்டும்” என்று.

இதற்கு மேல் மீண்டும் பயணம், இரவுவரை வேலை, அடுத்தநாள் அதிகாலை கிளம்பி 8 மணிநேர பயணத்திற்கு பின் சென்னைக்கான விமானம் என திட்டமிருந்தது. ஆனால் அதிசயங்களுக்கு திட்டமென ஒன்றிருப்பதே தெரியது! சில தவிர்க்கவியலா காரணங்களுக்காக அன்றிரவே நாக்பூர் திரும்ப வேண்டியதாயிற்று. சற்று தூக்கத்தை மட்டும் தியாகம் செய்தால், அடுத்தநாள் காலை சோனகான் ஏரிக்கு (Sonagaon lake) செல்லலாம்.
இந்த பயணத்தில் ஏரிகள் எனக்கு ஏமாற்றத்தையே தந்தன. முதலில் கோரிவாடா ஏரிக்கு தவறான நேரத்தில், தவறான பார்க்குமிடத்திற்கு சென்றிருந்தேன். இங்கே சோனகான் ஏரியோ முழுதாக மதிலிடப்பட்டு, சிறிது நீர்த்தாவரங்கள் கூட இல்லாமல் முழுதாக சுத்தம் செய்யப்பட்டு கிடந்தது. அதனால்தானோ எனத்தெரியவில்லை பெரிதாக இங்கே பறவைகளில்லை. ஒரு சின்ன கொக்கு (Little Egret) பறந்த படியே இரை தேடிக்கொண்டிருந்தது. ஏரியில் விளிம்புவரை நல்ல ஆழம் இருக்கக்கூடும். சில நாட்டு உழவாரன்கள் (Little swift) ஏரியின் மேல் பறந்து கொண்டிருக்க நான்கு உள்ளான்கள் (Common sandpiper) ஏரியை கடந்து பறந்தன. பட்டியலை விரைவாக முடித்துக் கொண்டு அருகிலிருந்த நாக்பூர் நகரத்தில் மிச்சம் வைக்கப்பட்ட சிறு துண்டு காட்டிற்குள் நடக்கத் துவங்கினேன்.
ஸ்ரீ கிருஷ்ண மந்திர் என்ற பெயரால் அடையாளப்படுத்தப்படும் இப்பூங்கா, உண்மையில் பல வருடங்களுக்கு முன் இங்கு சூழ்ந்திருந்த வனத்தின் மிச்சம் வைக்கப்பட்ட ஒரு துண்டாய் இருக்க வேண்டும். முழுதும் நகரத்தால் வேலியிடப்பட்ட, புலியில்லாத காடென்பது இம்மக்களின் கனவாய் இருந்திருக்க வேண்டும். பூங்காவை ஊடறுத்துச் செல்லும் நடைபாதையை விட்டிறங்கி காட்டினுள்ளே சென்றேன். குரல்கள் மட்டுமாய் இருந்த பறவைகள் ஒவ்வொன்றாய் தலைகாட்டத் துவங்கின. ஒரு செம்போத்து இணையைப் (Greater coucal) பார்த்தேன். காட்டுச் சிலம்பன்கள் (Jungle babblers) என்னை முறைத்தபடி தம் குழுவுடன் கூச்சலிட்டுக் கொண்டிருந்தன. காட்டினுள்ளே தொடந்து முன்னேறிச் சென்று கொண்டிருந்தபோது மூன்றாவது முறையாக மீண்டும் விசிறிவால் ஈப்பிடிப்பான் காட்சியளித்தது. முன்னும் பின்னும் திரும்பியபடி, மயிலாட்டம் போல தன் வாலை சுருக்கியும், விரித்தும் தாவிக்கொண்டே இருந்தது. மறைந்தும், வெளிப்பட்டும் என்னுடன் ஆடிக் கொண்டிருந்து அப்பறவை. அயலோனைக் கண்டு வெட்கப்படுகிறதோ?


உண்மையில் வெட்கம் என்பது,
தன்னை அல்லது தன் எண்ணத்தை மற்றோருவர் அறிந்துவிட்டதன் மகிழ்ச்சி, மறைத்ததைக் கண்டுவிட்டதன் சோகம், கண்டறிந்தவர் மேல் பெருகும் வெறுப்பு, மறுக்க வேண்டுமென எழும் சீற்றம், பிறருக்கும் தெரிந்துவிடுமோ எனும் பயம், இத்தருணத்தை சீக்கிரம் கடந்துவிட வேண்டும் எனும் தவிப்பு, மீண்டும் வெளிப்பாட்டின் மகிழ்ச்சியென
என பலவகை உணர்ச்சிகள் ஒரே சமயம் வெளிப்பட முயல எந்த உணர்ச்சிக்கு முதலிடம் தருவது எனத்தெரியாமல் மூளைக் குழம்பி, உடலின் மீதான தன் கட்டுப்பாடுகளை முழுதும் இழக்கும் தருணமே.
எண்ணிப் பாருங்கள். ஒவ்வொறு தனிப்பட்ட உணர்வுநிலையையும் நாம் இயற்கையோடு அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறோம். பூ மலர்தலை இயற்கையின் மகிழ்ச்சியாக, வெள்ளமும், புயலும் இயற்கைச் சீற்றமாக, இலையுதிர்தலும், வாடுதலும் அதன் சோகமாக… ஆனால் இயற்கை வெட்கப்படுமா?
மூன்று நாட்களாக வெவ்வேறு இடங்களில் இப்பறவையின் வழி என்னைத் தொடரும் இயற்கை, நான் பார்க்கையில் தயங்கி மறைந்து, பார்க்காத போது குரல் கொடுத்து அழைத்து, வால்விரித்து ஆடி, கூச்சம் கொண்டு தாவி மறைந்து, மீண்டும் தலைகாட்டி, வலதுபுறம் சென்றதை இடதுபுறம் தேடிக் கொண்டிருக்கும் என்னை கண்டித்து அழைத்து, மீண்டும் ஆடி, போதும் போதும் பார்த்தது என கோபித்து பறந்து சென்றது.
பறவைப் பார்த்தலின் போது நேரமும் சிறகுகொள்ளும் விந்தை சற்றுப் புதிரானதே. அழைத்திருந்த Rapido ஓட்டுனர் பூங்காவினுள்ளேயே வந்தார். ஏறியமர்ந்து காட்டையே பார்த்தபடி சென்று கொண்டிருந்தேன். மீண்டும் பறவைகள் குரலாக மாறி என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தன.
வெளியேரும் முன் மரங்களின் இடைவெளி வழி பார்த்தது என்ன? இயற்கையின் நாணிச் சிவந்த முகமா?

eBird பட்டியல்: https://ebird.org/tripreport/472338
லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்
சென்னை
08.02.2026