கல்லுக்குருவி (Pied Bushchat)
பொள்ளாச்சி தோட்டத்தின் சின்ன மருதமரத்தில், ஆண் கல்லுக்குருவி அமர்ந்து பாடும். பெரும்பாலும் கருப்பாக உள்ள பறவையின், இறக்கையில் ஒரு வெள்ளைக் கோடு, வாலடியும் வெள்ளை. தேன்சிட்டை விட சற்று பெரிய பறவை. பாடலை கேட்டவுடன் பெண் பறவை வந்து இணைந்து கொள்ளும். தரையில் அங்கும் இங்கும் குதித்துக் குதித்து சென்று இரை தேடும். மதிய நேரங்களில் இவற்றை வேடிக்கை பார்ப்பதே எனது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. பெண் பறவை முழுவதும் சாம்பல் நிறம்.


நித்யவனத்தில் பறவை பார்த்தல் வகுப்பிற்கு வந்த போது, மணலில் அதன் பொந்தை ஆசிரியர் காட்டினார். மின்சார கம்பியில் அமர்ந்திருக்கும். சற்று நேரம் கழித்து ‘சர்ர்ர்’ என்று குதித்துக் கீழே வரும். அது பறக்கிறதா என்று எனக்கு சந்தேகமாக இருக்கும். ஊர் தேன்சிட்டு, வேலி கதிர்க் குருவி, கல்லுக்குருவி என இம்மூன்று குருவிகளும் நீருக்குள் பாய்வது போல, உயரத்திலிருந்து கீழே வருவதை பார்த்திருக்கிறேன். புவியீர்ப்பு விசை இருக்கும் போது, எதற்கு பறக்க வேண்டும்? குதித்தால் போதும் என்று நினைக்குமோ என்னவோ.
படித்தறிந்தது
- குன்னூரில் வசித்த ‘பௌ’ என்ற துறவி, மத்தை வைத்து தயிரை கடைந்து கொண்டிருந்தார். தண்ணீர் தீர்ந்து விட்டதால், ஆற்றிற்கு செல்ல கிளம்பினார். தயிர் பாத்திரத்திலிருந்து மத்தை வெளியே எடுத்து வைப்பது மரபு. அப்படி எடுத்து வைக்காமல் செல்வதை கல்லுக்குருவி தடுத்ததாம். தூரப்போ என்று அவர் கையை உதறிய போது, கையிலிருந்த வெண்ணை, அதன் இறக்கையில் பட்டு வெள்ளை நிறம் வந்ததாம். பறவை சொன்னதை கேளாமல் சென்ற துறவி அவரின் முடிவை சந்தித்து விட்டாராம். இது நீலகிரி தோடர்களின் தொன்மக்கதை. இதிலிருந்து கிடைக்கும் நீதி என்னவென்றால் கல்லு குருவி சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டும்.
- பொந்தில் புல்லை பரப்பி, அதில் மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இட்டு 14 நாட்கள் வரை அடைகாக்கும். அடுத்த பருவத்திற்கு கூட்டை மறுபடியும் பயன்படுத்தும். ஐரோப்பிய குயில் (Common cuckoo) இப் பறவையின் கூட்டில் முட்டையிடும்.
- பேரினப் பெயரான Saxicola என்ற இலத்தீன் சொல்லுக்கு கல்லில் வாழ்பவர் என்று பொருள். தமிழிலும் அதே பொருளில் கல்லுக்குருவி என்று அழைக்கப்படுவது ஆச்சரியமே. சிற்றினப் பெயரான caprata என்ற இத்தாலிய சொல்லுக்கு ஆடு போன்ற என்று பொருள்(Capricorn ராசி ஞாபகம் வருகிறதா?). Saxicola caprata– கல்லில் வாழும் ஆடு போன்ற நிறத்தை உடைய பறவை. (பெண் பறவைகளும், சில துணையினங்களும் ஆடு போன்ற செம்பழுப்பு நிறத்தில் உள்ளன).இப்பறவை கருப்பு, ஆரஞ்சு, கருப்பும் ஆரஞ்சும் கலந்த வண்ணக் கலவை என்று 16 துணையினங்களாக உள்ளது.

தொன்மங்களை வாசிப்பது உற்சாகமானது.
முதலாவதாக தொன்மங்கள் நம் கற்பனையை இட்டு நிரப்ப வேண்டிய இடைவெளிகள் கொண்டவை. இரண்டாவதாக குழந்தைகள் விளையாடும் building blocks போல நம் விருப்பத்திற்கேற்ப கலைத்து அடுக்கிக் கொள்ளலாம், காரணிய நோக்குடன், கண்ணியத்துடன்! இறுதியாக நாம் எவ்வளவு கலைத்து விளையாடிய பின்னும் அந்த தொன்மம் அதே குழந்தமையுடனும், பொலிவுடனும் இருப்பதைக் காணலாம்.
சரி, இந்த தொன்மத்தை நான் இப்படி அடுக்குகிறேன்.
1. தயிர்
2. வெண்ணை
3. மத்து
4. துறவி பௌ
5. கல்லுக்குருவி
தயிரைக் கடைந்து வெண்ணையெடுப்பது மலைக் கிராமங்களின் முக்கிய தொழில்களுள் ஒன்று. அதற்கான கருவி மத்து. எனவே அது மிக முக்கியமானதாகவும், அதனாலேயே புனிதமானதாகவும் இருந்திருக்கும்.
துறவி அலட்சியப்படுத்துவது மத்தையல்ல. மலைக்குடிகளின் புனிதத்தை, நம்பிக்கையை. பௌ எனும் துறவி தன் நம்பிக்கைகளை மக்களிடம் கடத்த அவர்களின் மரபான நம்பிக்கைகளை குறைவுடையதாகவோ, தவறானதாகவோ சித்தரித்திருக்கலாம். கல்லில் நாட்டப்பட்ட மலைகுடிகளின் தெய்வம் அல்லது மூதாதையாக கல்லுக்குருவியை கருதலாம். மூதாதை வடிவான கல்லுக்குருவி மரபை மக்களுக்கு வழிவழியாக கடத்துகிறது. அறியாமல் செல்லும் துறவியை மரபை மீறாதே என எச்சரிக்கிறது. துறவி அதை அலட்சியப்படுத்துகிறார். கையை விசிறி குருவியை விரட்டுகிறார். வெண்ணை குருவியின் மேல் படுகிறது.
ஏன் வெண்ணை? தயிர் பட்டிருக்கலாமே? ஒரு கரிய தயிர் கடையும் பானையை கற்பனை செய்து கொள்ளுங்கள், கடையப்பட்ட வெண்ணை அதன் விளிம்பில் திரளுமல்லவா? அதுதான் கல்லுக்குருவியின் சிறகின் விளிம்பில் திரண்டிருக்கும் வெண்மை. துறவி உதறிச் சென்றது திரண்டிருந்த வெண்ணையை அல்ல, திரண்டு கொண்டிருந்த மெய்மையை. அதுவே அவரின் இறுதிக்கு இட்டுச் செல்கிறது.
அம்மக்களின் இயற்கையை, பறவைகளை பற்றிய அறிவை, அவர்கள் மரபின் மீதான அந்நியரின் பாதிப்பை, அம்மக்களின் எதிர்வினையை ஒருவாறு இத்தொன்மத்தின் வழி யூகிக்கலாம். இன்றிருக்கும் குறைந்தபட்ச சாத்தியமும் அதுவே!
அவர்களுக்கு நன்றி
லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்
சென்னை
10.02.2026