மஞ்சள் மூக்கு ஆள்காட்டி (Yellow-wattled Lapwing)
வெள்ளிமலையில் பறவை பார்த்தல் நடை செல்லும்போது, புத்தருக்கு எதிரில்,வயலுக்கு மேலே உள்ள இடத்தில் ஆள்காட்டியை முதன் முதலில் பார்த்தேன். நித்யவனத்தின் வலது பக்கம் நடந்து சென்றால் குக்குருவான்கள் இருக்கும் ஆலமரம் தாண்டி உள்ள வயலில் ஒரு ஆள்காட்டி வசிக்கிறது. அதன் உரத்த குரல் அடிக்கடி கேட்கும். நீண்ட மஞ்சள் கால்களை கொண்ட புறா அளவுள்ள பறவை. முன் தலையும் வாலும் கருப்பு. உடல் சாம்பல் நிறம். வயிறு பகுதி வெள்ளையாக உள்ளது. அலகுக்கும் கண்ணுக்கும் இடையில் முக்கோண வடிவ மஞ்சள் தோல் (Wattle) இருக்கிறது. இது இறகோ எலும்போ கிடையாது. இனப்பெருக்க காலத்தில் இது பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

என் அத்தையின் தோட்டத்து அருகில் ஒருமுறை நான்கு ஆட்காட்டி பறவைகளை பார்த்தேன். அசைவே இல்லாமல் சிலை போல் நின்று கொண்டிருந்தன. சிறிது நேரம் கழித்து ஆள் வந்தவுடன் கூவிக்கொண்டு பறந்து விட்டன.
படித்தறிந்தது
- கூழாங்கற்களை வைத்து அணை கட்டிய தரையில், நான்கு முட்டைகள் இடும். ஆண்,பெண் பறவைகள் இரண்டும் சேர்ந்து 30 நாட்கள் வரை அடை காத்து குஞ்சு பொரிக்கும். குஞ்சு மென்மையான இறகுகளுடன், உடனே நடக்கக் கூடியதாகவும் இருக்கும். பெரிய பறவைகள் ஆபத்து என்று சத்தம் கொடுத்தால், குஞ்சுகள் அசைவில்லாமல் தரையோடு தரையாக அமர்ந்து தங்களைக் காத்து கொள்கின்றன.

- ஜோடியாகவும் சிறு கூட்டமாகவும் காணப்படும். அதன் கூட்டுக்கு ஆபத்து வரும் சமயங்களில், ஆண் பறவை அடிபட்டது போல் நடித்து வேட்டையாடிகளை திசை திருப்பும். சத்தமாக கூச்சலிட்டு நேரடி தாக்குதலிலும் ஈடுபடுவதுண்டு.
- இந்திய துணை கண்டத்தில் மட்டுமே காணப்படும் பறவை. பேரினப் பெயரான Vanellus என்ற இலத்தீன் சொல்லுக்கு தானியம் புடைக்கும் முறம் (vannus) என்று பொருள். முறத்தால் புடைப்பது போல இது பறக்கிறது . இப்பறவை முதன்முதலில் கேரள மலபார் பகுதியில் பதிவு செய்யப்பட்டதால் malabaricus என்ற சிற்றினப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. Vanellus malabaricus – முறத்தால் புடைப்பது போல பறக்கும் கேரள மலபாரில் முதலில் காணப்பட்ட பறவை.
