புள்ளெலாம் நான்

மதுரை பயண அனுபவக்குறிப்பு – காந்திகிராமம், கொடிக்குளம் கண்மாய் –  14 & 15.02.2026

இன்னிசை மாதரிசையுளேன் நான்,
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

நான் – சுப்ரமண்ய பாரதி

மதுரைக்கு, துணைவியின் தோழியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக கடந்த 13.02.26, வெள்ளிக்கிழமை இரவு வந்தடைந்தோம். இந்நிகழ்வைப் பயன்படுத்திக் கொண்டு மீனாட்சியம்மனை தரிசிப்பதும், எங்களிருவரின் பெற்றோரையும் முதல் முறையாக விமானத்தில் பறக்கும் அனுபவத்தை அளிப்பதும் எங்கள் திட்டத்தின் முக்கிய பகுதி. அழகரும், முருகரும் அடுத்தகட்டதில் இருந்தார்கள். இருவீரபத்ரர்களும், ஊர்ந்துவ தாண்டவர், பத்ரகாளி, எதிர் தூணிலிருக்கும் மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அசைவ உணவும் என் ரகசிய திட்டத்திலிருந்தன. அவற்றை கிடைக்கும் இடைவெளிகளில் பிசிறில்லாமல் உள்ளே நுழைத்துவிட வேண்டும், அவ்வளவுதான்.
சரி, இதிலெங்கே பறவைப் பார்த்தலுக்கான இடம்?

திட்டம் என்பது இடங்களை புள்ளிகளாகவும், காலத்தை அதைச் சுற்றிச் செல்லும் கோடுகளாகவும் வைத்து எதிர்காலத்தில் கற்பனையாக வரையப்படும் கோலம். திட்டம் தொடங்கியதும் நாம் உணரும் ஒன்றுண்டு, நிகழ்காலத்தில் காலமும், இடமும் நம்மைமீறிய சக்திகளால் எடுத்துக்கொள்ளப்பட்டு நாம் சற்றும் எதிர்பாராத திசைகளிலெல்லாம் அக்கோலம் விரிந்து செல்வதை! இப்பயணம் மட்டும் என்ன விதிவிலக்கா?

மதுரையில் ரயில் விட்டிறங்கியதும், தங்கப்போகும் அடுக்குமாடி குடியிருப்புக்கான வழியை வரைபடத்தில் தேடியபோது, அருகே ஓர் நீர்நிலை இருப்பதைப் பார்த்தேன். முதல் புள்ளி வைக்கப்பட்டாகிவிட்டது.

அடுத்தநாள் காலை எழுந்ததும் எதிரே இருந்த கொடிக்குளம் கண்மாய்க்குச் சென்றேன். நுழைகையிலேயே மடையான்கள் (Indian pond heron) தாங்கள் மறைந்திருந்த புதரைவிட்டு சிறகடித்து வரவேற்றபடி கிளம்பின. நீலவால் ஈ பிடிப்பான் (Blue tailed bee eater) ஒன்று என் வருகைக்காக காத்திருந்தது போல், கருவேலத்தின் உச்சிக் கிளையில் அமர்ந்திருந்தது. நான் அதை தொந்தரவு செய்யக்கூடாதென மற்றொறு கருவேலத்தின் பின்னால் மறைந்து நின்று படம்பிடித்தேன். என்னைக் கவனித்தும் அதன் உடலில் சற்றும் சலனமில்லை. இவ்வளவு நெருக்கத்தில் இப்பறவையைப் பார்த்தது இதுதான் முதல் முறை.

நீலவால் ஈ பிடிப்பான் (Blue tailed bee eater)

கண்மாய் பற்பல நீர்பறவைகளுடன் உயிர்ப்புடன் இருந்தது. சாம்பல் நாரை (Grey heron), சிறிய நீர்காகங்கள் (Little cormorant), நெடுங்கால் உள்ளான்கள் (Black winged stilt), புள்ளி மூக்கு வாத்துகள் (Indian spot billed duck) என பட்டியல் நீண்டபடியிருந்தது. தூரத்தில் ஓர் மணற்திட்டில் நின்றிருந்த செந்நாரை (Purple heron) நான் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே கிளம்பி, வானில் ஒரு பெரிய வட்டமடித்தபடி என்னக்கு மிக அருகே வந்து ஒரு அற்புதமான படத்தை எடுக்க வாய்ப்பளித்துவிட்டு, மீண்டும் தொடங்கிய இடத்திலேயே சென்றிறங்கியது.

செந்நாரை (Purple heron)

ஒரு மணி நேரம் பறந்துவிட்டது. மீனாக்ஷி அம்மனை தரிசித்தாக வேண்டுமென்பதால், பட்டியலை முடித்துக் கொண்டு கிளம்பினேன். கண்மாயிலிருந்து சாலையில் ஏறுவதற்கு முன்புதான் அதை கவனித்தேன். ஒரு கால்வாய்,  கழிவுநீருடன் சாலையின் மறுமுனையிலிருந்து நேரடியாக கண்மாயுடன் இணைக்கப்பட்டிருந்தது. இணையத்தில் கொடிக்குளம் கண்மாயைப் பற்றி தேடிக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியின் முக்கியமான நீராதாரம் எனவும், கோடைக் காலங்களில் இக்கண்மாயிலிருக்கும் கேணியிலிருந்துதான் சுற்று வட்டாரத்திற்கு நீரெடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். எனினும் இது ஒன்றும் புதிதில்லை என்பதாலும், நான் இருக்கும் ஊரில் ஒரு நதியையே மாசுபடுத்தி வைத்திருப்பதாலும் இயல்பாக அதைக் கடந்து சென்றேன். அன்று மாலை கடைக்காக மீண்டும் அக்கால்வாய் வழி சென்றபோது, ஒரு சின்ன கொக்கு (Little Egret) கண்மாயிலிருந்து தூவெண்நிறத் தூவிகளுடன் பறந்து வந்து, தன் பொற்பாதங்களுடன் அந்த சாக்கடையில், சூழ்ந்திருந்த பன்றிகளின் மத்தியில் இறங்கி நின்றது. நான் அக்காட்சியை கடக்க முடியாமல் உறைந்து நின்றேன்.

சின்ன கொக்கு (Little Egret)

சில நாட்களுக்குமுன் என் அன்னைக்காக யுனானி மருந்துகள் வாங்க அண்ணாநகரில் உள்ள அரசினர் இந்திய மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். ஒரு மேசையில் எதிரெதிராய் இரு மருத்துவர்கள் அமரந்திருக்க நான் ஒருவரிடம் சென்று சீட்டைக் காட்டி பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது வாசல் வழியாக ஒருவர் உள்ளே நுழைந்தார். மத்திய வயதைக் கடந்தவர். வாய் வலதுபுறம் வீங்கி இழுபட்டு திறந்திருந்தது. இடதுபுறம் முகம் சற்றே உள்ளொடுங்கியிருந்தது. தாடைக்கு மேலே தையலிட்டு ஆறிய தழும்பிருந்தது. 

உள்ளே வந்தவர் எங்கள் எதிரேயிருந்த மருத்துவரை அணுகினார். வந்தவரை அமரக்கூடச் சொல்லாமல், மருத்துவர் தன் கேள்விகளால் அவரைத் துளைக்கத் துவங்கினார்.

“நான் அப்பவே சொன்னன்ல? நீங்க மொதல்ல வாங்கி வந்த சீட்டு தப்புன்னு. சொல்ல சொல்ல அப்படியே நின்னுட்டிருக்கீங்க? இப்ப தெரியுதா?”
அவர் கையிலிருந்த சீட்டை வாங்கி,

“இதுதான் கரெக்டான சீட்டு, உங்களுக்கு பத்து வாட்டி சொல்லனுமா? காலையிலேயே வந்துர்ரீங்க டென்ஷனாக்குறதுக்கு” 

என கத்திக் கொண்டிருந்தவர், என் மருத்துவரிடமும் தன் தரப்பு நியாயத்தை முன் வைத்து, ஓரக்கண்ணால் நானும் அவர்கள் பக்கம்தானா என உறுதி செய்து கொண்டு, வந்தவர் பக்கம் திரும்பினார். நான் வந்தவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் சிலை போலிருந்தார். இவ்வளவு வசைக்கும் ஒரு எதிர்வினைகூட இல்லை. முகத்தில் உணரச்சியுமில்லை. யாரையோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் போல என நின்றிருந்தார்.

மருத்துவர் ” உடம்புக்கு என்ன?” என்றார்

பதிலில்லை.

“உடம்புக்கு என்ன பிரச்சனை?” என சைகையுடன் கேட்டார்.

“எனக்கு கொஞ்ச நாளா இரண்டு காதும் கேக்கமாட்டேங்குது. பல்வலி. வாய் ரொம்ப வீக்கமாயிறுச்சு, நான் கொல்லிமலையில வேல பார்த்தனா, அங்க குளுருல காதடைச்சுகிச்சு. இங்க வந்தா சரியாயிடும்னு சொன்னாங்க, அதனால” எனத் தொடர்ந்தார்.

எனக்கு என்னவோ போல் இருந்தது.

மருத்துவர் எங்களிருவரையும் பார்த்துவிட்டு ” எப்பத்துல இருந்து காது கேட்கல என்றார்?

வந்தவர், ஏதோ கேட்கிறார்கள் எனப் புரிந்து கொண்டு “கொல்லிமலைல ரொம்ப குளிர்…” என மீண்டும் துவங்கினார். அவரின் உள்ளே நுழைய எந்த வாசலும் இல்லாதது போல் தோன்றியது.

மருத்துவர், என்ன செய்வது எனத் தெரியாமல் என் மருத்துவரைப் பார்க்க, அவர் சைகை காட்டினார். சில மருந்துகள் அவர் சீட்டில் எழுதப்பட்டு அவர் கையில் திணிக்கப்பட்டது. அவர் அதே மாறா உணர்ச்சியுடன் மருந்தகம் நோக்கித் திரும்பினார்.

எனக்கு ஏனெனத் தெரியாமல் தொண்டையடைத்து. எந்த நம்பிக்கையில் போகிறார்? அவருக்கு அளிக்கப்பட்ட மருந்துகள், அந்த இடத்திலிருந்து தற்காலிகமாக அவரை வெளியேற்றத்தான் என அவருக்குத் தெரியுமா? தெரிந்தாலும் அவரால் என்ன செய்ய முடியும்? ஏன் இங்கே தனியாக வந்தார்? குறைந்தபட்சம் மருத்துவருக்கும் அவருக்கும் ஏதோ ஒரு தொடர்பு ஊடகம் இருந்திருந்தால் கூட சரியான மருந்துகளோ அல்லது அதற்கான மருத்துவம் இங்கே இல்லை என்ற தகவலோ, ஏதோ ஒரு பதில் அவருக்கு கிடைத்திருக்குமல்லவா?

இங்கே, இந்தக் கொக்கு அவரிருந்த அதே நிலையில் நின்றிருக்கிறது. சில காலத்திற்கு முன் இங்கே மீன் கிடைத்தது என அதன் மரபான அறிவில் பதிந்திருக்குமோ? இப்போது இது பன்றிகளுக்கான இடம் என யார் அதனிடம் சொல்வது? பல்வேறு கழிவுகளும், ரசாயனங்களும் கலந்துவரும் இந்நீரில் நிற்கும் இக்கொக்கின் பாதங்கள் அரிக்கிறதா என எப்படி நாம் கேட்டுத் தெரிந்து கொள்வது? இன்னும் ஒரு பத்துவருடம் காத்திருந்து அதன் பொற்பாதங்கள் கருமை கொண்டதும்தான் நாம் கண்டறிவோமா?

குப்பைகள் எரிவதால் எழும் கரும்புகை

‘வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்’ என்றான் பாரதி. இங்கே இக்கழிவில் நிற்கும் இப்புள்ளும் நானல்லவா? கண்மாயில் கால் வைக்க சாத்தியமான இடங்களிலெல்லாம் மலக்குவியல்ககள். நீரிலும், நிலத்திலும் மானுடக் குப்பைகள். தெற்கே ஒருபுறம் குப்பைகளைக் கொட்டி எரித்துக் கொண்டிருக்கும் இந்த ‘புன்னிலை மாந்தரும்’ நானல்லவா? நான் தங்கியிருக்கும் வீட்டிலிருந்தும் ஒரு குழாய் இச்சாக்கடையில் கலந்திருக்கும், எனில் ‘அருந்துன்பப் புணர்ப்பும்’ நான்தானே? மாலை மங்கி இருட்டியது. சோர்வுடன் திரும்பினேன்.

கோலத்தின் அடுத்த புள்ளியை நண்பர் சரண்யாவும், விஜயபாரதி சாரும் வைத்தார்கள். காந்திகிராம ஊழியரகத்தில் GBBC நடக்கவுள்ளதாகவும், மதுரை நண்பர்கள் வருக என விஜய் சார் அழைத்திருந்தார். சரண்யா அவர்கள், தானும் அங்கேதான் இருப்பதாகவும், அவசியம் மூதன்னை கிருஷ்ணம்மாள் ஜெகநாதனை பார்க்க வருமாறு சொல்லியிருந்தார். சனிக்கிழமை விஜய் சார் அழைத்து அதையே சொன்னார்.

ஞாயிறு (15.02.2026) காலை, காந்திகிராமம் கிளம்புவது என முடிவானது. நானும், ஜெய்ஸ்ரீ-யும், மகனையும், மகளையும் அள்ளியெடுத்துக் கொண்டு விடிகாலை மதுரையிலிருந்து கிளம்பினோம். அன்று எங்களுக்கு 7 ஆவது திருமணநாள். காந்திகிராம ஊழியரகம் நெருங்க நெருங்க என உள்ளே பதற்றமாக இருந்தது. ஒரு வரலாற்று நாயகியை நேரில் சந்திக்கப் போகிறோம் என்பதாலோ, அல்லது என்ன பேசப்போகிறோம் எனத் தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்ததாலோ, எதனால் எனத் தெரியவில்லை. ஊழியரகத்தில் நாராயனன் சாரை நீண்டநாட்கள் கழித்துப் பார்த்தேன். மதுபாலா அவர்களை அவர் மதனி ஷீலா அவர்களுடன் முதல் முறையாகப் பார்த்தது மகிழ்ச்சியாயிருந்தது. விஜய் சார் வந்து எங்களை அன்னையிடம் அழைத்துச் சென்றார்.

கிருஷ்ணம்மாள் ஜெகநாதனும், கவிமொழி நங்கையும்

அன்னை நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்தார்கள். எங்களைப் பார்த்து ஆதூரமாய் சிரித்து சில சொற்கள் சொன்னார். எங்கள் மகள், கவிமொழி நங்கை அன்னையின் 100-வது அகவை துவக்க நாளன்று பிறந்தவள். அவள், அன்னையின் அருகே சென்றதும் அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள். அங்கே அன்னையின் சொற்களாக நின்றிருந்த அவர் மகன் பூமிகுமார் “முன்னும் பின்னும் காலத் தொடர்ச்சியற்ற இரு உயிர்கள் இயல்பாக ஒருவரையொருவர் அறிந்து கொள்கின்றன” என்றார். அவரே எங்களை அழைத்துச் சென்று, ஊழியரகத்தைச் சுற்றி Permaculture எனும் முறையில் அவர் உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையான, மாற்று வேளாண்மை தோட்டத்தை காண்பித்தார். அவர் சொன்னார், “மனிதன் ஒன்றை அழித்துவிட்டுதான், மற்றொன்றை உருவாக்கத் தொடங்குகிறான்” என. இயற்கையில் மனிதர்களுடன் சேர்த்து அனைத்திற்கும் இடம் தரும் முறையிது.

அன்னையை, சூரியன் ஜொலிக்கவைத்துக் கொண்டிருந்தான். அன்னையின் அருகே அமர்ந்து அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தோம். அல்ல, நான் கண்கள் மட்டுமாக மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுள் சொற்களின்றி வெறுமையாய் இருந்தது. எப்போதும் சொற்பிரவாகத்தில் முட்டி மோதி முயங்கிக் கொண்டிருக்கும் என் உள்ளம் இது போன்ற சில அபூர்வமான தருணங்களில் மட்டுமே அமைதி கொள்கிறது. அன்னை தனக்கு கொண்டுவந்த பாலை அருந்தாமல், அனைவருக்கும் கொடுத்தபின் கொண்டுவரச் சொல்லி திருப்பி அனுப்பினார்.

தாரணை என்னும் ஒருவகை யோகப்பயிற்ச்சியுள்ளது (நிச்சயமாக இது செயல் முறை விளக்கமல்ல. சரியான ஆசிரியரும், முறையான வழிகாட்டுதலும் இதற்குத் தேவை) இருண்ட அறையில் ஒரு விளக்கை ஏற்றி, அதன் சுடரை கண்கொட்டாமல் பார்க்க வேண்டும். கண்களில் நீர்த்திரை சுடரை மறைக்கத் துவங்கியதும், கண்களை மூடி அந்த சுடர் உள்ளே பிரகாசிப்பதை கவனிக்கவேண்டும். நான் அன்னையின் பிரகாசத்தை நோக்கிக் கொண்டிருந்தேன். எதிரே விஜய் சார் கண்கள் தளும்பிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் சற்றே நிலைகுலைந்த என்னை நான் மீண்டும் இறுக்கிக் கொண்டேன். என் கண்களில் திரைவிழலாகாது. எதிரே சுடர்ந்து கொண்டிருக்கும் ஜோதி என்னுள் முழுவதுமாக நிரம்பட்டும். என் சோர்வெனும் இருள் நீங்கட்டும். நான் செல்லவேண்டிய பாதையில் பொய்யா விளக்காய் உடன் வரட்டும். நான் தடுமாறும் சமயங்களில் இம்மானிதர்களின் நினைவு எனக்கு தோள் கொடுக்கட்டும்.

கிளம்ப வேண்டிய நேரம். சரண்யா, அன்னையைக் குழந்தை போல கொஞ்சிக் கொண்டிருந்தார். வரம் பெற்றவர். அவரிடம் அவகாசம் வாங்கி அன்னையிடம் ஆசீர்வாதம் பெற்றுத் திரும்பினோம். திரும்புகையில் எண்ணிக் கொண்டிருந்தேன். எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் என விரியும் அன்னையின் மனமன்றி இச்சூழலுக்கு வேறெது மருந்தாக முடியும்? பாரதி தன்னை புள்ளெனச் சொன்னது அந்த விரிவைத்தானே? அன்னையின் அருகாமை எங்களையும், நம்மையும் புள்ளென்றாக்கட்டும்.

eBird பட்டியல்: https://ebird.org/checklist/S300229275


லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்
சென்னை
16.02.2026