தூவித்தோழர்கள்-29

பொறி மார்புச் சிலம்பன் (Puff-throated babbler) 

ஆனைகட்டி சத்‍‍‍‍‍‍‍‍-தர்ஷனில் நான், தேவ், மித்து பாப்பா மூவரும், மரத்தில் இருந்த குண்டு கரிச்சானை(Oriental Magpie Robin) பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது அருகில் தரையில் இருந்து இனிமையான கீக்கி ஒலி கேட்டது. ஐந்து பறவைகள் கொண்ட சிறு கூட்டத்தை பார்த்தோம். தரையில் இருப்பதாலும், கூட்டமாக கத்திக் கொண்டிருப்பதாலும், அது Babbler ஆக இருக்கலாம். Merlin செயலியில் பார்த்தால் பொறி மார்புச் சிலம்பன் என்று காட்டியது. சாம்பல் நிறப் பறவை.செம்பழுப்பு நிற தலை. மஞ்சள் அலகு. கழுத்து வெள்ளை. அடிப்பகுதியில் நீள வாக்கில் இருக்கும் கோடுகள் தனித்து தெரிகின்றன. ஆண் பெண் பறவைகளுக்கிடையில் வேறுபாடு இல்லை.

உப்பிய தொண்டையுடன் சிலம்பன்©Alain Sylvain

அனுவாவி முருகன் கோயிலில், அனுமான் சஞ்சீவி மலையை தூக்கி செல்லும் போது, அவரின் தாகம் தீர்க்க முருகன் வேலால் மலையை குத்தி அருளிய ஊற்று உள்ளது. அந்த ஊற்றில் நீர் அருந்தி கொண்டிருந்த நான்கு சிலம்பன்களை பார்த்தோம். குதித்து குதித்து நீரில் விளையாடியது.காய்ந்த இலைகளை புரட்டி அடியில் உள்ள பூச்சியை பிடித்து உண்ணும். சத்தமாக ஒலி எழுப்பும்போது, இதன் வெள்ளை நிற தொண்டை, உப்பி (Puff) காணப்படுகிறது.

படித்தறிந்தது

  • இந்திய துணை கண்டத்திலும், தென்கிழக்கு ஆசிய பகுதிகளிலும் காணப்படுகிறது. வலசை செல்லாத பறவைகளுள் ஒன்று .
©Birds of the world
  • பறவை கூட்டை தலைகீழாக வைத்தது போல், அரை கோள வடிவில் தரையில் கூடு கட்டுகிறது. பக்கவாட்டில் நுழைய வழி உள்ளது.இரண்டு முதல் ஐந்து முட்டைகள் வரை இடுகிறது அடைகாப்பதை பற்றி மேலதிக தகவல்கள் இல்லை.
  •  Pellorneum – pella என்ற கிரேக்க சொல்லுக்கு மங்கலான நிறம் என்றும், orneum என்றால் பறவை என்று அர்த்தம். ruficeps– இதன் சிற்றின பெயர் rufus (சிவப்பு) மற்றும் caput (தலை என்ற இரு சொற்களால் ஆனது. Pellorneum ruficeps – சிவப்பு தலையை உடைய மங்கலான நிறமுள்ள பறவை.

One thought on “தூவித்தோழர்கள்-29”

Comments are closed.