வெண்தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான் (Spot-breasted Fantail)
குன்னூர் Sims பூங்காவின் உள்ளே நுழைந்ததும், பறவைகளின் இனிமையான ஒலி கேட்டது. சிறிது தூரம் சென்றவுடன், ஒரு பழுப்பு நிறப் பறவை, அதன் சிறுவாலை விசிறி போல விரித்து அங்கும் இங்கும் குதித்துக் கொண்டிருந்தது. சிறிது கூட பயமே இல்லாமல் அருகில் வந்து நின்றது. அதன் வெண் புருவங்களும், தோகை போல வாலை விரித்ததும் அழகு. சாம்பல் நிற பறவை. கரு நிற தலை. வெண்ணிற தொண்டை, புருவம். மார்பில் வெள்ளை புள்ளிகள் உண்டு. வயிற்றுப் பகுதி வெள்ளை. கரும் பழுப்பு நிற கால், சிறிய அலகு. Merlin app வைத்து அதன் பெயர் Spot breasted fantail என்று அறிந்தோம். ஆண் பெண் பறவைகளுக்கிடையே வேறுபாடு இல்லை.

© Samish Dhongle
படித்தறிந்தது
- ஆண், பெண் பறவைகள் சேர்ந்து, பச்சைப்புல், இலை ஆகியவற்றை வைத்து கூடுகட்டி,12/13 நாட்கள் அடைகாக்கும். இரண்டு முதல் நான்கு முட்டைகள் வரை இடும்.
- இப்பறவை இனத்தை சில சமயம் White throated fantail ன் துணை இனமாகவும் கருதுகிறார்கள். Spot breasted fantail -தென்னிந்தியாவில் மட்டும் காணப்படுகிறது.White throated fantail -வட இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படுகிறது. ஆனால் இவ்விரு இனங்களும் சேர்ந்து கலப்பினங்கள் உருவாகிறது. (Hybridization)

- Rhipidura – rhipis என்ற கிரேக்க சொல்லுக்கு விசிறி என்றும், oura என்றால் வால் என்றும் அர்த்தம். albogularis– இதன் சிற்றின பெயர் albus (வெள்ளை ) மற்றும் gula (தொண்டை ) என்ற இரு சொற்களால் ஆனது. Rhipidura albogularis- விசிறிவாலும் , வெள்ளைத் தொண்டையும் கொண்ட பறவை. White-throated Fantail (Rhipidura albicollis– வெள்ளைக்கழுத்து கொண்ட பறவை)