நன்மங்கலம் ஏரி 1-2-2026

பலமுறை குடும்பமாக எங்கள் நண்பர்கள் ஈஸ்வரி-பொன்ராஜ் தம்பதியர் வீட்டிற்கு சென்றிருந்தாலும், இந்த முறை பறவை பார்த்தலுக்காக அவர்களின் வீட்டருகே உள்ள நன்மங்கலம் ஏரிக்கு (தென்மேற்கு பகுதி, சியான் பள்ளி, செம்பாக்கம் அருகே) சென்றது புதிய அனுபவமாக இருந்தது. அவர்களின் மகன் முகேஷ் வெள்ளிமலை பறவை பார்த்தல் வகுப்பிற்கு சென்று வந்தவுடன் தன் வீட்டருகே ஏரியில் பறவைகளை பார்த்ததை கூறவும், விஜய் பாரதி அவர்களின் முன்னெடுப்பில் அங்கு செல்ல முடிவானது. விஷ்ணுபுரம் பறவை ஆர்வலர்கள், குழந்தைகள் என குழுவாக சென்றிருந்தோம்.

செல்லும் வழியிலேயே சாம்பல் நாரை (Grey heron) சுவரில் தவத்தில் ஆழ்ந்த வண்ணம் நின்றிருந்தது, மனதை லேசாக்கியது. கூட்டமான தகைவிலான்களை (Barn Swallow)கண்டு குழந்தைகள் ஆர்வமுடன் வந்தனர். இரு கம்பிகளில், என மொத்தம் 106 தகைவிலான்கள்(Barn Swallow)அமர்ந்திருந்தது. பார்க்கும் இடம் சென்றவுடன் பறவைகளை தனித்தறிய தலைப்பட்டோம். பெரும்பாலும் நீர்நிலை பறவைகள் தென்பட்டாலும், மற்ற பறவைகளையும் பார்த்தோம்.

தாழைக்கோழி(Eurasian moorhen), சாம்பல் நாரை (Grey heron), நீலத் தாழைக்கோழி(Grey-headed Swamphen), நெடுங்கால் உள்ளான்கள் (Black winged stilt), தாமரை இலைக் கோழி(Bronze winged jacana), சாதா உள்ளான்(common sandpiper), பொரி உள்ளான்(wood sandpiper) என நீளும் பட்டியல்.

ஸ்கோப்பில், சாம்பல் கூழைக்கடா(spot billed pelican) கண்டோம். அதன் கழுத்து இறகுகளின் மென்முனை வரிசைகள் கூட துல்லியமாக தெரிந்தது. ஸ்கோப்பை பரிசளித்த விஷ்ணுபுரம் நண்பர் டெக்ஸாஸ் சிவா அவர்களுக்கு நன்றி. பாம்புதாரா (oriental darter) தன் மின்னும் கழுத்தை எண்ணிய வண்ணம் வளைத்து, அதிலேயே நிலைத்து, பின் மெதுவாக திருப்பி என பாம்பின் உடலையே நினைவுறுத்தியது.

தரையோடு தரையாக இருந்த மயில் உள்ளான்(Greater painted-snipe), இரண்டு சாம்பல், மென் பழுப்பு நிறத்தில் இருந்தது. இரண்டுமே ஆண்களென்றும், இந்த பறவையினத்தில் பெண்ணே பளிச்சென்ற சாந்து நிறத்தில் முகமும், கருப்பு வெள்ளை கழுத்துக் கோடுகளுடன் இருக்கும் என்ற தகவல் ஆச்சர்யமான ஒன்று. எங்களிடையே திடீர் சலசலப்பை ஏற்படுத்தியது வாலாட்டியை கண்டது. தன் பழுத்த மஞ்சள் நிற முகத்துடன் தரையில் அமர்ந்து, துள்ளி, பறந்து கொண்டிருந்தது. அது மஞ்சள் தலை வாலாட்டி(citrine wagtail) எனவும், வலசை வந்துள்ளது என்பதும் தெரிந்து அனைவரும் ஆர்வமுடன் கண்டோம். பறவையின் உலகில் சிறிது நேர பார்வையாளராக இருந்தாலும், தன் அழகை, இயற்கையின் ஓர் அங்கமாக தான் இருப்பதை, ‘நீயும் தான்’ என்று நம்மிடம் கூறுவதை அது மறப்பதில்லை. பொறுமை, உணவை எடுக்கும் துல்லியம்/லாவகம், கூடு கட்டுவதில் நேர்த்தி, அயரா வலசை பயணம் என தன் வாழ்வை வாழும் பறவைகளை கண்டு திரும்பினோம்.

https://ebird.org/checklist/S297362277#share-checklist