செம்பருந்து (Brahminy Kite)
ஒரு மதிய வேளை, உக்கடம் அருகே மின்சார கம்பத்தில் செம்பருந்து அமர்ந்திருந்தது. இரைக்கொல்லி பறவைகளுக்கே உரிய கம்பீரமான தோற்றம். தலையும் , கழுத்தும், அடிப்பகுதியும் வெள்ளை நிறம் . இறகின் நுனியில் கருப்பு. வெயிலில் அதன் செம்பழுப்பு நிறம் தீ போல ஒளிர்ந்தது. ஒரு அரசனைப் போல மேலிருந்து கீழ் நோக்கி, சுற்றிலும் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தது. அதன் அகண்ட சிறகுகளை விரித்து பறந்தது. பெரும்பாலான நேரம் அதை உயரத்திலேயே பார்த்திருப்பதால், அதன் தோற்றம் சற்று சிறிதாகவே மனதில் இருக்கிறது. அருகில் பார்க்கும் போது, அதன் விரிந்த இறக்கைகளின் பிரம்மாண்டம் சட்டென்று ஆச்சரியப்படுத்துகிறது. பறக்கும் போது இவற்றின் வால் பிரிவில்லாமல் தட்டையாக இருக்கும். பெண் பறவை சற்று பெரிதாக இருப்பதை தவிர, ஆண் பெண் பறவைகளுக்கிடையே வேறு வேறுபாடு இல்லை.

கோவையிலிருந்து கேரளா செல்லும்போது, சாலையின் மேலே இவை வட்டமிட்டுக் கொண்டே இருந்தன. ஒரு பயணத்தில் 30 செம்பருந்துகள் வரை பார்த்திருக்கிறோம். அது Checklist க்கு முந்தைய காலம் என்பதால் பதிவு செய்யவில்லை. கருடன் பார்த்தால் புண்ணியம் என்று தேவ் எண்ணிக்கொண்டே வந்தான். கருடன் என்று நம் தொன்மத்தில் கூறப்படுவது செம்பருந்தாகவும் இருக்கலாம் , வெண்மார்பு கடற்கழுகாகவும் (White-Bellied Sea Eagle) இருக்கலாம் . இரு கருத்துக்களும் நிலவுகின்றன.
படித்தறிந்தது
- இந்தியாவிலிருந்து, ஆஸ்திரேலியா வரை காணப்படுகிறது. நான்கு துணையினங்கள் உள்ளன . அதில் ஆசிய துணையினங்களில், வெள்ளைப் பகுதியில் கருப்பு நிற மெல்லிய செங்குத்து கீற்றுகள்(streaks) உள்ளன. ஆஸ்திரேலிய துணையினங்கள், தூய வெள்ளையாக இருக்கிறது.

- இளம்பருவப் பறவை Whistling Kite, Common Buzzard அல்லது Osprey ஆகிய பறவைகளுடன் எளிதில் குழப்பப்படலாம்.

- பேரினப் பெயரான Haliastur என்ற கிரேக்க சொல் Hali (கடல் ) மற்றும் astur(hawk-பருந்து ) என்ற இரு சொற்களால் ஆனது. சிற்றினப் பெயரான indus என்ற சொல் இந்தியாவை குறிக்கிறது . Haliastur indus- கடல் பருந்து, இந்தியாவை இருப்பிடமாக கொண்டது.
