தையல் சிட்டு( Common Tailorbird)
பள்ளி பாடத்திலேயே இப் பறவையின் பெயரை கேட்டிருந்தாலும், பார்த்ததே இல்லை. வகுப்பிற்கு சென்று வந்தபின், வீட்டின் அருகே பறவை பார்க்கும்போதுMerlin Appல் தையற்சிட்டின் பெயர் தினமும் வந்தது. முதல் முறை, அதை ஆடாதொடை செடியின் அருகே பார்த்தேன். செம்பழுப்புநிற தலை. மெல்லிய நீண்ட அலகு. பழுத்தும், பச்சையும் கலந்த உடல். மங்கலான நிறத்தில் உடலின் அடிப்பகுதி. சிறு பூச்சிகளையும், மலரமுத்தையும் உண்ணும் . நீண்ட வாலை ஆட்டியபடியே, கிளைக்கு கிளை, குதித்து குதித்து தாவி, எறும்புகளை பிடிக்கும் .

பெண் பறவையின் வால் சற்று குட்டையாக இருப்பதை தவிர, ஆண் பெண் பறவைகளுக்கிடையே வேறுபாடு இல்லை.அதன் ‘டுவி டுவி’ சத்தம் நாள் முழுவதும் கேட்கும் . வகுப்பிற்கு முன் எப்படி, இதன் இடைவிடாது நீளும் பாடலை கவனிக்காமல் இருந்தேன் என்று புரியவே இல்லை. சந்தேஷ் கடுர் அவர்களின் ‘Nilgiris – A Shared Wilderness’ படத்தில், கைக்குள் வைத்துக் கொள்ளும் அளவு சிறிய பறவையை, அத்தனை பெரிதாக திரையரங்கின் திரையில் பார்த்ததை மறக்க முடியாது .
படித்தறிந்தது
- இந்திய துணை கண்டத்திலும், தென்கிழக்கு ஆசிய பகுதிகளிலும் காணப்படுகிறது.

- பெரிய இலைகளை ஒன்றாக தைத்து கூட்டை அமைக்கிறது. ஆண் பறவை தேவையான பொருட்களை சேகரிக்கிறது . பெண் பறவை சரியான இலைகளை தேர்ந்தெடுத்து, அதன் ஓரத்தில் துளைகளிட்டு, நாரை(fibre ) ஓட்டைகளில் நுழைத்து நான்கு நாட்களில் கூட்டை அமைக்கிறது. ஓரத்தில் முடிச்சு போடுவதில்லை. மழை காலங்களில் கூட்டை அடிக்கடி சீரமைக்கிறது. பஞ்சு, ஒட்டடை போன்ற பொருட்களை உள்ளமைத்து 3 முதல் 5 முட்டைகளிடுகிறது. ஆண் பெண் பறவைகள் சேர்ந்து 12 நாட்கள் அடைகாக்கும். மிகவும் சிறிய குயிலான இன்னிசைக் குயில்(Plaintive Cuckoo) , இதன் கூட்டில் முட்டையிடும். இத்தனை சிறிய பறவையின் உழைப்பை சுரண்ட, அந்த குயிலுக்கு மனசாட்சியே இல்லை போலும் .

- இப்பறவை Warbler(Cisticolidae) குடும்பத்தை சேர்ந்தது. Orthotomus – ortho என்ற கிரேக்க சொல்லுக்கு நேராக என்றும், tomos என்றால் வெட்டுதல் என்றும் அர்த்தம். sutorius– இதன் சிற்றின பெயருக்கு sutor – செருப்பு தைப்பவர் என்று பொருள். Orthotomus sutorius-நேராக வெட்டி, செருப்பு தைப்பவர் போல் கூடு கட்டும் பறவை. ஒன்பது துணையினங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.
தகவல்கள் வரைபடமாக ஆங்கிலத்தில் . நன்றி : roundglass sustain
