தூவித்தோழர்கள்-33

செம்மீசை சின்னான் (Red-Whiskered Bulbul)

தாவரவியல் வகுப்பிற்கு வந்தபோது, முதன்முதலில் செம்மீசை சின்னானை பார்த்தேன். வெள்ளிமலையில் அதிகமாக காணப்படும் பறவைகளுள் ஒன்று. சின்னான் அளவே உள்ளது. கருப்பு நிற கொண்டையுடன் கூடிய தலை. தொண்டை வெள்ளை. வாலடியும் , கண்ணுக்கு அருகில் அலங்காரம் செய்தது போல் சிவப்பு. குட்டையான அலகு. கருப்பு நிற வட்டத்திற்குள் வெள்ளை நிற கன்னம். அடிப்புறம் மங்கலான நிறம். இறக்கைகளும், நீண்ட வாலும் சாம்பல் நிறம். நடு வால் இறகுகளை(rectrices) தவிர, மற்ற வால் இறகுகளின் நுனி வெள்ளை. ஆண், பெண் பறவைகளுக்கிடையே வேறுபாடு இல்லை. மதிய நேரம் ஆல மரத்தின் அருகிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது, எதிரில் உள்ள பெரிய அம்பருத்தி மரத்தில் பத்து சின்னான்களுக்கு மேல் அமர்ந்து, பழங்களை உண்டு கொண்டிருந்தன. அதனால் ஸ்ரீநிதி அதற்கு புல் புல் மரம் என்று பெயரிட்டாள். (Indian Charcoal Tree/Trema orientalis-நித்ய வனமெங்கும் பார்க்கக்கூடிய மரம் இதுவே.)

©Steven Mlodinow

ஒரு நாள் காலை, ஊட்டியின் தங்குமிட அறைக்கு வெளியே, இப்பறவை ஜோடியின் இனிய பாடலை கேட்டேன் . எந்த பயமும் இல்லாமல் விளக்கு தூணில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்தது. சுற்றிலும் சிறிது பனியாக இருக்கும்போது, அதன் சிவப்பு மீசை பளிச்சென்று தெரிந்தது. பாடிக்கொண்டே சிறிது நேரம் அங்கும் இங்கும் நகர்ந்து அமர்ந்தது. பின் ஜோடியாக பறந்து சென்று விட்டது.

படித்தறிந்தது

  • இயற்கையாக இவற்றின் வாழிடம் இந்திய துணை கண்டமும் , தெற்கு ஆசியாவும் தான். 1960களில் இந்தியாவிலிருந்து மியாமிக்கு கொண்டு செல்லப்பட்ட இப்பறவைகள் தப்பித்து, அமெரிக்காவில் இனப்பெருக்கம் செய்து வாழ ஆரம்பித்தன. பயிர்களுக்கும், அங்குள்ள பறவைகளுக்கும் ஊறு விளைவித்ததாலும், களைச் செடிகளை பரப்புவதாலும், இவற்றை அழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் அது முழுவதும் வெற்றி பெறவில்லை. தற்போது வரை இப்பறவைகள் அங்கு வசித்து வருகின்றன.
©BOW
  • வேர், காய்ந்த இலை, குச்சி, புல் வைத்து கிண்ண வடிவ கூட்டை, பெரும்பாலும் பெண் பறவை கட்டுகிறது. இரண்டு முதல் ஐந்து முட்டைகளை, 11 நாட்கள் வரை அடைகாத்து, குஞ்சு பொரிக்கிறது.
©Chidambara
  •  Pycnonotus – Pyknos  என்ற கிரேக்க சொல்லுக்கு அடர்த்தியான என்றும், nōton என்றால் பின்புறம் என்றும் அர்த்தம். jocosus– இதன் லத்தீன் சிற்றின பெயருக்கு மகிழ்ச்சியான என்று அர்த்தம்(Joke ஞாபகம் வருகிறதா?) Pycnonotus jocosus – அடர்த்தியான பின்புறத்தை உடைய மகிழ்ச்சியான பறவை.