நட்சத்திரங்களின் தொலைவு

செங்கல்பட்டு பயண அனுபவக்குறிப்பு – நட்சத்திரக் கொண்டாட்டம் & கேளம்பாக்கம் சதுப்புநிலம் –  21 & 22.02.2026

தொலைவு எனும் பொருள்தரும்
சரியான சொல் எது?
அருகே எனும் பொருளுக்கு
அருகேவரும் சொல்லாவது உண்டா?
நாங்கள் ஒரே இடத்தில் நிற்கிறோம்.
என் தொலைவு, அவர் அருகாமை.
எனக்கு அருகே, இவருக்கு தொலைவில்.
பலர் பார்க்கும் ஒரே பொருளைச் சுட்ட
வெவ்வேறு சொற்கள்.
உண்மையில் தொலைவைச் சுட்டும் சொல்,
தொலைவா? அருகாமையா??

அன்று கண்ட ஒண்முகில்கள் (Nebula’s) – நட்சத்திரங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. © Sreeram

கடந்த 21ஆம் தேதி மதியம் நான், ஜெய்ஸ்ரீ மற்றும் பகவன் மூவரும் வீட்டிலிருந்து கிளம்பி, மாலை ‘Lazy Grosshopper’ எனும் பண்ணையை அடைந்தோம். இங்கே இரவு நட்சத்திரக் கொண்டாட்டம் நடக்கவிருக்கிறது. இது பெரிய திறந்தவெளி கொண்ட, வேலியிடப்பட்ட, பாதுகாப்பான இடம். இரவில் சோர்ந்துவிட்டால் தூங்குவதற்கு வசதியாக, சுகாதாரமான அறைகள் இருந்தன. நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தனர். ஒவ்வொருவர் கையிலும் பெரிய, பெரிய பெட்டிகள், நீள, நீள உருளைத் தொலைநோக்கிகள்.

அந்திசாயத் துவங்கியதும் ஒவ்வொருவரும் தங்கள் கருவிகளைப் பொருத்தத்துவங்கினர்.  ஐந்தடக்கலைக் கோரும் பெரும் பணியிது. தொலை நோக்கியை பூமியில் நிலைநிறுத்தி, பார்க்கவேண்டிய கோளையோ, இன்ன பிறிதையோ தோராயமாக இடம் சுட்டி, பிற நட்சத்திரங்களின் துணையுடன் விண்ணில்வழி தேடி, கண்டுபிடித்தபின் ஆடிகளை முன், பின், பக்கவாட்டில் என நகர்த்தி, தெளிவான பிம்பம் கிடைத்ததும் அது நோக்கு வட்டத்திலிருந்து விலகாமலிருக்க அட்ச, தீர்க்க ரேகைகளுடன் துருவ நட்ச்சத்திரத்தையோ அல்லது மூன்று நட்சத்திர ஒழுங்கமைப்பு முறையிலோ தொலைநோக்கியின் தாங்கியை இணைத்துச் சுழலச் செய்யவேண்டும். இத்தனை வேலையையும் கெடுக்க ஒரு சிறு அசைவு போதும். அதையும் செய்து பார்த்த பெருமை எனக்குக்கிட்டியது. ‘அதனாலென்ன, மறுபடியும் பண்ணிடலாம். கவலை வேண்டாம்’ என சொல்லி மீண்டும் முதலிலிருந்து துவங்கினார் சிவராமன் சார்.

நாம் புராணங்களை நம் பகுத்தறிவு கொண்டு, முற்றிலும் உணர்வற்ற முறையில் புரிந்து கொள்கிறோம். உதாரணமாக மகாபலி, வாமனர் பற்றிய கதை. மூன்றாவது அடிக்கு வானும் மண்ணும் இல்லாமல் போகும் அளவுக்கு பேருருவம் கொள்கிறார் வாமனர். மகாபலி, தன் தலையை அவர் காலுக்கு அளிக்கிறார். கடவுளால் தான் இந்த இந்த அற்புதத்தை நிகழ்த்தமுடியும் என்பதால், விஷ்ணுவின் அவதார வரிசையில் வாமனருக்கும் ஓரிடம் அளிக்கப்பட்டது. சரிதானே? ஒரு மனிதன் எவ்வாறு பேருருவம் கொள்ளமுடியும்?

முடியும்!

ஒடுங்கிய உடல் கொண்ட காந்தியின் அடிகளில் எவ்வளவு பேர் தங்கள் தலைகளை அர்ப்பணித்தனர் என்பதை எண்ணிப்பாருங்கள். இன்றும் நாம் பெரியவர்களின் தாள்பணிகிறோம். தங்கள் கருணையால் அவர்கள் தம் கால்களாலன்றி, கைகளால் நம் தலையைத் தொட்டு ஆசியளிக்கின்றனர். வெண்முரசை துவங்கிவைக்கும் ஆஸ்திகனை நினைவுகூறுங்கள். எனில் பேருருவம் என்பது உடலால் அல்ல, உள்ளத்தால், கருணையால், அன்பால் அடையப்படுவது. மீண்டும் மும்முரமாக கருவியை இயக்கிக் கொண்டிருந்த சிவராமன் சாரின் தலை விண்மீன்களின் அருகே தெரிந்தது.

தொலைநோக்கிகள் பொருத்தப்படுகின்றன

1500 ஒளியாண்டுகள் தொலைவிலிருந்த ஒண்முகிலைகளைப் (Nebula’s) பார்த்துக் கொண்டிருந்தோம். வியாழ கிரகத்தில் அடித்துக் கொண்டிருக்கும் புயலுக்கு வயது 300 என்றார் ஒருவர். ஒருவர் பார்த்துமுடித்து அடுத்தவர் பார்க்கும் முன் மீண்டும் மீண்டுமென தொலைநோக்கியின் நோக்கு வட்டத்தை நகர்த்த வேண்டியிருந்தது. ஆம், கோள்கள் அவ்வளவு வேகத்தில் பறந்து கொண்டிருந்தன! கார்த்திகை (Seven sisters) போன்ற நட்சத்திரக் கூட்டங்கள் (Star clusters), ஓரியன் (Orien) போன்ற நட்சத்திர மண்டலங்கள் (Star constellations) எனப்பல. வெறும் கண்களால் படுவேகமாக சுற்றிக் கொண்டிருந்த செயற்கைக் கோளைப் பார்த்தது அற்புதமான அனுபவம்.

பறவைப் பார்த்தலுக்கும், நட்சத்திரங்களைப் பார்த்தலுக்கும் இடையேயான ஒற்றுமை, வேற்றுமைகளை மனம் கணக்கிட்டுக் கொண்டே இருந்தது. நாம் சூரிய உதயத்தில் துவங்கி, மறைவில் முடித்துக் கொள்கிறோம்.  இங்கே சூரியன் மறைந்ததும் துவங்குகிறார்கள். சூரியன் மட்டுமல்ல, நிலவின் ஒளி கூட இங்கே இடைஞ்சலாகக் கருதப்படுகிறது. மேகங்கள் கிட்டத்தட்ட சபிக்கப்படுகிறது. மழையை சொல்லவே வேண்டாம். விண்ணகத்தை படம்பிடிக்க (AP – Astro photography) அதிநவீன கருவிகளைக் கையாள்கின்றனர். ஒரு வெட்டொளி (flash) பல மணிநேர உழைப்பைக் நொடியில் அழித்துவிடும் என்பதாலும், இருளுக்கு, ஒளிக்கு என கண்கள் முன் பின்னாக அலைந்து சோர்வுரும் என்பதாலும் இங்கே வெளிச்சத்திற்கு சிவப்பு நிற விளக்குகளை பயன்படுத்துகிறார்கள்.

இரவு சிற்றுண்டி அருந்தும் வேளையில் அனைவரும் தம்மை குழுவுக்கு அறிமுகப்படுத்தி பேசிக் கொண்டிருக்க, நான் என்னை முதல் முறையாக என் தொழிலை குறிப்பிடாமல் ‘பறவைகள் ஆர்வலன்’ என அறிமுகப்படுத்திக் கொண்டேன். வியக்கும் வகையில் அங்கிருந்த பலர் ஆர்வடைந்து நாங்களும் முயன்று கொண்டிருக்கிறோம். இவர் இப்பொழுதுதான் துவங்கியிருக்கிறார் என மகிழ்ச்சியுடன் எதிர்வினையாற்றினர். பித்தர்களை பித்தர்களே அறிந்துகொள்ள முடியும் போல.

அடுத்த நாள் காலை 4.30 மணிக்கு பால்வெளியை பார்ப்பதாக திட்டம்.  ஆனால் மேகங்கள் சூழ்ந்ததால் பார்க்க முடியவில்லை. இனிமேல் சூரியனின் ஆட்சியென்பதால், நமக்கு வேலையில்லை என அனைவரும் பெட்டியை கட்டிக்கொண்டு கிளம்பத் துவங்கினர். நாங்களும் கிளம்பி முந்தையநாள் விஜயபாரதி சார், முட்டுக்காட்டில் பூநாரைகள் (Flemingo) வந்திருப்பதாக குழுவில் தெரிவித்திருந்ததால், வண்டியை கேளம்பாக்கம் பக்கம் திருப்பினோம்.

சிறிய, நடுவாந்தர, பெரிய கொக்குகள். சிறிய நீர்காகங்கள். மடையான்

கேளம்பாக்கம் சதுப்பு நிலத்திற்கு முதன்முறை வருகிறோம். கூகுள் வரைபடத்தில் பறவைகள் பார்க்கும் இடம் என்று குறித்து வைத்திருந்த இடத்தில், சிறு பாலத்திற்கு அடுத்து வாகனத்தை நிறுத்தி, அடியில் எட்டிப்பார்த்து வியந்து நின்றோம். எவ்வளவு பறவைகள். அதுவும் எவ்வளவு அருகாமையில்! ஏராளமான
சிறிய நீர்காகங்கள் (Little cormorant), சின்ன, நடுவாந்தர, பெரிய கொக்குகள் (Little, Medium & Great Egrets). பிற இடங்களிலெல்லாம் கொக்கின் கண்களுக்கு கீழுள்ள கோட்டை, இது நடுவாந்திரமா இல்லை பெரிய கொக்கா என தொலை நோக்கி வழி உற்று, உற்று பார்த்துக் கொண்டிருப்பேன். இங்கே வெறும் கண்களால் பார்க்க முடிந்தது. ஆலாக்களும் (Terns) கடற்காகங்களும் (Gulls) சற்றே எம்பினால் பிடித்துவிடும் தூரத்தில்.

பெரிய கொக்கு (Great Egret)

அங்கே உணவுக் களியாட்டு நடந்து கொண்டிருந்தது. இவ்விடம் மீன்களுக்கான சொர்கவாசல் போல. பறவைகளுக்கு விருந்தாகவென வரிசையாக அவை வந்து கொண்டிருந்தன. அனைத்துப் பறவைகளும் தன் ஒவ்வோறு முங்கலுக்கும், கொத்தலுக்கும், தீண்டலுக்கும் அலகில் ஒரு மீனுடன் சென்றன. சின்ன கொக்கெல்லாம் ஆசுவாசமாக மீன் பிடித்துக் கொண்டிருப்பதை இங்குதான் பார்க்கிறேன். ஏதேனும் மார்க்கமிருந்தால், புழலில் ஒவ்வொரு வாய் மீனுக்கும் போராடிக் கொண்டிருக்கும் கொக்குகளுக்கு வழி சொல்லி இங்கே அனுப்பிவிடலாம் என நினைத்துக் கொண்டேன்.

விருந்து!

அடுத்த ஆச்சரியம் சிறிய பச்சைக் கொக்கைப் (Striated heron) பார்த்தது. முதலில் இதை குருகு (Black bittern) என்றே நினைத்தேன். குருகை, தற்செயலாக எழுந்து பறக்கும் போது மட்டும்தான் பார்த்திருக்கிறேன். மீண்டும் அவை புதருக்குள் சென்றால், நாம் தொலைநோக்கியை திருப்பிவிட வேண்டியதுதான். இங்கே இப்பறவை வெட்ட வெளியில், வானம் சூழ, என்னருகே நின்றிருந்தது. உன்னால் சங்க இலக்கியப் பாடலின் அர்த்தமே வேறு திசைக்கு திரும்பிவிடும் போலிருக்கிறதே என பயம் கூட வந்தது. நல்லவேலையாக இதன் கால்களும், கருந் தொப்பியணிந்த தலையும், மஞ்சள் பூசிய கீழலகும் இப்பறவை வேரென்று குறிப்புணர்த்தின.

சிறிய பச்சைக் கொக்கு (Striated heron)

அங்காங்கே பறவைகள் வானத்திலிருந்து மண்ணில் கொட்டி வைத்தது போல கூட்டமாய் நின்றிருந்தன. கூழைக்கடாக்கள் (Spot billed Pelicans) சங்குவளை நாரைகள் (Painted storks), சாம்பல் நாரைகள் (Grey heron) இன்னும் பல. எங்கே பூநாரைகள்? என எண்ணிக் கொண்டிருந்தபோதே தலைக்கு மேலே பூநாரைகளின் பெருங்கூட்டமொன்று எங்களை கிழக்கிலிருந்து மேற்காக கடந்து சென்றது. நான் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் Flemingo, Flemingo என கத்திக் கொண்டே, தொலைநோக்கியால் பின் தொடர்ந்தேன். தொலைநோக்கியிலிருந்து மறையும் தொலைவிற்கு சென்றும் பறவைகள் தரையிறங்கவில்லை. ஒரு நம்பிக்கையில், அங்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த படகோட்டி அப்புவை அழைத்துக் கொண்டு பறவைகள் சென்ற திசையில் முன்னேறிச் சென்றோம். படகு மீண்டும் தரையில் தட்டும்வரைச் சென்றும் பூநாரைகளைக் காணவில்லை. அப்பு, இதற்கு மேல் செல்லமுடியாது என நான்காவது முறையாக சொல்லியபோது வருதத்துடன் திரும்பலாம் என தலையசைத்தேன்.

இவ்வளவு தொலைவு வந்து, இங்கே  பூநாரைகள் இருப்பது தெரிந்தும் கூட அவற்றை பார்க்காமல் செல்வது வருத்தமாயிருந்தது. வேறு வழியில்லை. நேரமும் இல்லை. மதியம் அலுவலகம் செல்ல வேண்டும். காரை எடுத்துக் கொண்டு கிளம்பினோம். வழியில், இருருளிகளில் கூட்டமாய் முன்னேறிக் கொண்டிருந்த இளைய தலைமுறையினரை காவல்துறை நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்த்தவாறு சென்ற எங்களுக்கு, வினாடியில் பத்தில் ஒரு பங்கு நேர இடைவெளியில் கிழக்கே ஒரு வெண்பறவைக் கூட்டம் தெரிந்தது. பார்த்தது என்னவென்று உணரும் முன்னரே நாங்கள் சிறிது தொலைவு வந்துவிட்டோம். எங்கள் இருவருக்கும் ஒருவேளை அவைதானா? என சந்தேகமெழ, மீண்டும் வண்டியைத் திருப்பிக்கொண்டு போய், சாலையே ஒரு ஓரமாய்க்கிடக்க, அதில் இன்னும் சற்று ஓரத்தை கண்டுபிடித்து நிறுத்தி வண்டியிலிருந்தே தொலைநோக்கியில் அந்தக் கூட்டத்தைப் பார்த்தோம். பூநாரைகள் (Greater Flemingo)!

பூநாரைகள் (Greater Flemingo)

முன்னால் நின்றிருந்த காவல்துறையும், பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்களின் பொறுமையின்மையும் சேர்த்து எங்களை பூநாரைகளை சரியாகப் பார்க்க முடியாதபடி செய்தன. தூரம் அதிகமென்பதால் கைப்பேசியின் படக்கருவி தன் தோல்வியை ஒப்புக் கொண்டது. நெடுநாட்களாக யோசித்துக் கொண்டிருந்த ஒரு தகுந்த புகைப்படக்கருவியை வாங்கும் நேரம் வந்துவிட்டது என உறுதிகொண்டபடி அங்கிருந்து கிளம்பினோம்.

இந்த நாள் பல்லாயிரம் ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள நட்சத்திரங்களைப் பார்த்தபடி தொடங்கி, சில மீட்டர்கள் தொலைவிலிருந்த பறவைகளைப் சரியாக பார்க்க முடியாதபடி முடிந்தது. இரண்டும் பார்வைக்கெட்டும் தொலைவிலிருந்தும் தொடமுடியாத தொலைவிலும் இருந்தது. இரண்டிற்காகவும் காத்திருந்தோம்.  இரண்டையும் கண்டுகொண்டபோது பரவசத்திலாழ்ந்தோம். தடைகள் வந்ததும் சோர்ந்தோம். கிளம்பிய போதும் மீண்டும் வருவதைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தோம்.

அன்றிரவு, நட்சத்திரங்கள், கோள்கள், பறவைகள் மட்டுமின்றி இன்னொன்றையும் நெடுநாட்களுக்குப் பின் பார்த்தோம்.

மின்மினிப்பூச்சி!!

பகவன் முதன்முறைப் பார்க்கிறான்.
வானில் மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்கள் தம் குழந்தைகளை மண்ணிற்கனுப்பியது போலிருந்தது அது! அல்லது தொலைவிருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்து ஏங்கிய தம் குழந்தைகளுக்கு இறைவனளித்த, அருகே பறக்கும் நட்சத்திரங்களா இவை? எனில் பறவைகளனைத்தும் பகலில் தெரியும் இயற்கை செய்வித்த வண்ணநட்சத்திரங்களா?


eBird பட்டியல்: https://ebird.org/checklist/S303168121

லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்
சென்னை
28.02.2026