தூவித்தோழர்கள்-34

வெண்புருவ வாலாட்டி (White-browed Wagtail)

அதிகாலையில் வீட்டு வேலை செய்யும் போது, இனிய பறவைப் பாடல் கேட்டது. புதிய குரலாக இருக்கிறதே என்று Merlinல் போட்டால், வெண்புருவ வாலாட்டி என்று காட்டியது. வெளியே சென்றவுடன், சட்டென்று அமைதி. வீட்டினுள் வந்தவுடன், மீண்டும் பாடல். இப்படியாக கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது. தினமும் காலையில் இதே வேலை. ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ என்று சுற்றுசுவரின் பின்னாலிருந்து எட்டிப் பார்த்தாலும், சட்டென்று நிசப்தம். ஒரு நாள் காலை நடை சென்று, வீடு திரும்பும் போது ஜோடியாக தரிசனம் கொடுத்தது. தரையில் இரண்டும் இரைத் தேடிக் கொண்டிருந்தன. மைனாவை விட சிறிய மெல்லிய பறவை. கருப்பு வண்ண தலையில், வெண்ணிற புருவம். மார்பும் கருப்பு. அடி வயிற்றுப் பகுதி வெள்ளை. கருப்பு, வெள்ளை என்று இரு நிறங்கள் மட்டுமே இருந்தாலும்கூட அழகிய பறவை. பெண் பறவை சற்றே மங்கிய கருப்பு நிறத்தில் இருக்கிறது.

©Bhaskar pandeti

வாலாட்டி ஏன் வாலாட்டுகிறது ? விஜய் Sir கூறுவது போல பறவைகளைப் பற்றி நமக்கு தெரிந்தது மிகவும் குறைவு; தெரியாதது அதிகம். ஒரு ஊகமாக இவ்வாறு கூறுகிறார்கள் . வாலாட்டுதல் ஆபத்தில்லாத சூழலில் குறைவாகவும், அபாய சூழலில் அதிகமாகவும் இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே வாலாட்டி வாலாட்டுவது வேட்டையாடிகளுக்கு அதன் எச்சரிக்கை உணர்வை காட்டுவதற்காக இருக்கலாம்.

©Rison Thumboor from Thrissur, India

படித்தறிந்தது

  • இந்திய துணை கண்டத்திலும் மட்டுமே காணப்படுகிறது. Motacilla – motare என்ற லத்தீன் சொல்லுக்கு அசைவது என்றும், cilla என்றால் வால் என்றும் அர்த்தம். maderaspatensis – இதன் சிற்றின பெயர் உங்களுக்கு மிகவும் தெரிந்த ஊரின் பெயர். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் . Motacilla maderaspatensis – வாலாட்டும் மதராசபட்டினத்தில் முதலில் காணப்பட்ட பறவை .
©BOW
  • ஒரே இணையுடன் வாழும். நீர் நிலைகளின் ஓரத்தில் ஆண் பெண் பறவைகள் சேர்ந்து கூடு கட்டி, மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இட்டு, இரு பறவைகளும் அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.
  •  சமஸ்கிருதம் மற்றும் பெங்காலி பாடல்களில் கவிஞர்கள், பெண்ணின் கண்ணிற்கும் நடை அழகிற்கும் கஞ்சன்(Khanjan) என்று, இப்பறவையை உவமையாக கூறுகிறார்கள். வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதை என்ற  சோதிட நூலில், இப்பறவையை எங்கு பார்த்தால் நல்லது , நல்லதில்லை, அதற்கான பரிகாரங்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே வாசித்துப் பார்க்கலாம். (இக்கட்டுரையை எழுதியவர் சரத்சந்திர மித்ரா(1863 – 1938). தொன்மங்களையும், நாட்டுப்புற பாரம்பரியம் பற்றியும் விரிவாக பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.)
©Journal of the Asiatic Society of Bengal.(pdf pg no:689)