கோடி அம்புகள்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு – கொரட்டூர் ஏரி – சென்னை – 28.02.2026


இது குருஷேத்திரத்தில் நிகழ்ந்தது!

தேரோட்டியான கிருஷ்ணன் தேரில் காண்டீபத்தை கைவிட்டு கலக்கத்துடன் நின்றிருந்த அர்ஜூனனைப் பார்த்து இப்படிச் சொன்னார்.

“பார்த்தா கேள்! இத்துடன் நான் உன் வழியாக உலகத்திற்கு சொல்ல வேண்டிய பதினெட்டு யோகங்களும் முடிவடைந்ததன. நீ இன்னும் குழப்பத்திலிருப்பதால், உனக்கே உனக்கென கடைசியாக ஒன்றைச் சொல்லுகிறேன். கவனத்துடன் கேட்பாயாக” என்றபடி தொடர்ந்தார்.

“இன்றிலிருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் மேற்கே அவதரிக்கப்போகும் மனிதக் குமாரனை, கலியுகமக்கள் சிலுவையிலறைந்து கொன்று, அவர் பிறந்த ஆண்டை புதுயுகத்தின் துவக்கமென்று சொல்லியபின், அதிலிருந்து மேலும் இரண்டாயிரத்து இருபத்து ஆறு ஆண்டுகள் கழித்து நடந்ததிது.

“தொடு என் விரலை” என்றபடி தன் வலது கை ஆள்காட்டிவிரலை கிருஷ்ணன், அர்ஜூனனிடம் நீட்டினார். அர்ஜுனன் தயக்கத்துடன் தன் விரலால் அவர் விரலைத் தொட, பெரும் மின்னலொன்று மண்ணிலிறங்கி சூழலை வெள்ளையிருட்டாக்கியது. பின் கொஞ்சம் கொஞ்சமாக வண்ணங்கள் தெளிந்துவந்தன. குருஷேத்திரம் மறைந்து ஓர் பெரிய ஏரி தெரிந்தது. பசுமையும், பற்பல பறவைகளும் தெரிந்தன. இன்னும் தூரத்தில் இருப்பதென்ன? வெள்ளை மலைகளா? ஆனால் அவை ஏன் துண்டு நிலத்தில் செறிந்து நிற்கும் நாணல்கள் போல் நீளவாக்கில் உள்ளன? அவற்றில் துளைகளும், ஆள் நடமாட்டமும் தெரிய, வியப்பில் வாய்பிளந்து ‘ஆ’ என சொல்லமுயல, அது ‘கா’ என ஒலித்தது.

அப்போது ‘கா கா பார்த்தா கா…’ என அருகே அழைப்பு கேட்டுத் திரும்பினால், அங்கே ஒருகாகம் “நான்தான் பார்த்தா” என்றது.

“மாதவரா?”

“ஆம். நாம் காகவடிவு கொண்டுள்ளோம். இக்காலத்தை அணுகியறிய காகங்களன்றி சிறந்த உயிர் வேறில்லை. மேலும் நம் நிறத்திற்கு ஒத்துப்போகும் மிகச்சில உயிர்களில், காகங்களும் ஒன்று” என்றபின் “சரி, அங்கே பார் எனத் தலையைத் திருப்பிச் சுட்டினார்”

சற்று தொலைவில் இருசக்கரங்களை ஒரு பலகையால் முன்னும் பின்னுமாக இணைத்து, அதன் மேலொருவன் அமர்ந்து கால்களால் தரையை உந்தியபடி அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். இல்லை கால்கள் மேலே தான் இருந்தன. “எனில் எப்படி அந்தச் சக்கரங்கள் சுழல்கின்றன?” அப்போது ‘டப் டப் டப்’ எனும் சத்தம் கேட்க, அர்ஜூனனுக்கு புரிந்தது. ஏதோ ஓர் கண்ணுக்குத் தெரியாத மிருகம் அந்த வாகனத்தின் முன் கட்டப்பட்டு, அதனால் வாகனம் இழுக்கப்படுகிறது. அதற்குள் அவன், அவர்களை நெருங்கிவிட்டான். இவர்கள் ஒரு கொடியின் மேல் அமர்ந்திருக்க, அவன் வாகனத்தைக் கீழே நிறுத்தி அந்த கண்ணறியாத விலங்கை விடுவித்ததும் சத்தம் நின்றது. விலங்கு ஏரியில் நீரரருந்த போயிருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.  “இவர்களுக்கு எதிர்காலம் எப்படியிருக்கும் என எப்படி நான் புரியவைப்பது?” என புன்சிரிப்புடன் கிருஷ்ணன் பார்த்துக் கொண்டிருந்தார்.

வந்தவன் வேடிக்கையாயிருந்தான். கருநிற தோல் செருப்பு, முட்டிக்கு மேலேயே முடிந்துவிட்ட கருப்பு வேட்டி, ஒரே வண்ணத்தில் அடர்த்தி வேறுபாடுகள் கொண்ட பச்சைநிறச் சட்டை அணிந்திருந்தான். கண்களுக்கு முன் பளிங்குகளைக் கட்டியிருந்தான். முதுகில் கருப்பு, சிவப்பு கோடுகளிட்ட தோல் பை கனமாக தொங்கிக் கொண்டிருந்தது. “இது எந்த விலங்கின் தோல்” என அர்ஜூனன் குழம்பினான். அப்போது கிருஷ்ணன் இடைமறித்து இவ்வாறு கூறினார்.

“பார்த்தா, நாம் பின் தொடரப் போவது இவனைத்தான். கவனமாகப் பார்த்துக் கொண்டிரு. இனிமேல் நிகழ்வது ஒரு கட்டுரைவடிவில் அவனால் நமக்கு விளக்கப்படும்” என்றார்.

வலமிருந்து இடமாக: அரவிந்த், தனுஷ், இர்ஃபான், இம்ரான் மற்றும் நான்

28.02.2026 அன்று ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பின் கடைசிப் பட்டியலுக்காக கொரட்டூர் ஏரிக்குச் சென்றிருந்தேன். வழக்கம் போல வாகனம் நிறுத்துமிடத்திற்கு மேலிருந்த மின்கம்பியில் காகங்கள் செறிந்திருந்தன. கரைக்கு மேல் ஏறுவதற்கு முன்பே அங்கு திரிந்து கொண்டிருந்த மஞ்சள் வாலாட்டியைப் (Eastern yellow wagtail) பார்த்தேன். கரையேரியதும் அங்கே இருந்த சிறுவர்கள் தூண்டிலிட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராவிதமாக, ஏரிக்கரை வரை தண்ணீர் நிரம்பியிருந்தது. இதற்கு முன் வந்த போதெல்லாம் ஏரியின் உள்ளே சிலநூறு மீட்டர்கள் வரை நடந்து சென்று ஆழமற்ற நீரில் இரைதேடிக் கொண்டிருக்கும் பறவைக் கூட்டங்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இப்போது அதற்கு வாய்ப்பில்லை. தொலைநோக்கியால்  பார்க்க முடியாத தொலைவிற்கு பறவைகள் தெரிந்த போதுதான் கொரட்டூர் எவ்வளவு பெரிய ஏரி என்று புத்தியில் உறைத்தது.

மஞ்சள் வாலாட்டி (Eastern yellow wagtail)

ஆனால் இன்னொரு வகையில் அது நல்லதாகவும் அமைந்தது. இதுவரை நேராக ஏரிக்குள் சென்றுவிடும் என்னை, இன்று ஏரியின் ஓரத்தில் அடர்ந்திருக்கும் தாவரங்களைப் பார்க்கவைத்தது. சீமைக்கருவேலங்கள் நிறைந்திருந்த ஏரியின் விளிம்பு பல்வேறு பறவைகளின் ஒலியால் என்னை அழைப்பதை உணர்ந்தேன். முடிந்தவரை மரங்களினருகில் சென்றேன். நான் நின்றிருந்த மணற்திட்டின் எல்லையில் மூன்று பசுக் கன்றுகளும், ஒரு எருமைக் கன்றும் அமர்ந்து அசைப்போட்டுக் கொண்டிருந்தன. எருமைக் கன்றின் அருகே இடமிருந்ததால் நான் சென்று அமர்ந்து கொண்டேன். பறவைப் பார்த்தல் தொடர்பாக எருமையிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

மெதுமெதுவாக பறவைகள் அணிவகுக்கத் துவங்கின. பச்சைக் கிளிகள் (Rose ringed parakeet), சுடலைக் குயில் (Pied cuckoo), நீலவால் ஈ பிடிப்பான் ( Blue tailed bee eater), பச்சைப் பஞ்சுருட்டான் (Asian green bee eater), கதிர்க்குருவி (Plain priniya) சாம்பல் கதிர்க்குருவி (Ashy priniya), செண்பகம் (Greater coucal- Southern), பொறி மைனா (Indian pied starling) என வந்து கொண்டே இருந்தன. வழக்கம் போல Warbler-கள் வந்து மண்டையைக் காயவைத்தன.

Indian pied starling

“இதுல பார்த்தா கிட்ட தெரியுமா” என்ற குரல் கேட்க நானும், எருமையும் மோனம் கலைந்து ஒன்றாக பின்னால் திரும்பினோம்.
வந்திருந்தது முதலில் பார்த்த, மீன் பிடித்துக் கொண்டிருந்த பையன்கள்.

“ஆமா தம்பி, பாக்குறீங்களா” என்றவாறு எழுந்தேன்.

தொலைநோக்கியை வாங்கி எதைப் பார்ப்பது எனத் தெரியாமல் துழாவிக் கொண்டிருந்தவர்களுக்கு, தூரத்தில் சிறகு காயவைத்துக் கொண்டிருந்த சிறிய நீர்காகத்தை சுட்டிக்காட்டி, தொலைநோக்கியை எப்படி இயக்க வேண்டும் எனவும் சொல்லி மீண்டும் பார்க்கச் சொன்னேன். “ஆ…” என வியப்பொலி எழ, அவர்கள் பறவையைப் பார்த்துவிட்டதை உறுதிசெய்து கொண்டேன்.

இவர்கள் பார்ப்பதைப் பார்த்து இன்னும் இரண்டு சிறுவர்கள் இணைந்து கொண்டனர். கொஞ்ச நேரத்தில் அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த ‘முனுசாமி’ என்பவரும் இணைந்துகொள்ள, உற்சாகம் அதிகமானது.

முனுசாமி அண்ணன்

வெள்ளிமலை வகுப்பில் வழங்கப்பட்ட தமிழக பறவைகள் கையேட்டையும், க்ரியா பதிப்பித்த பறவைகள் அறிமுக புத்தகத்தையும் நான் எப்போதும் உடன் வைத்திருப்பதுண்டு. அவர்களுக்கு கையேட்டைக் காட்டி நீங்கள் இதுவரைப் பார்த்த பறவைகளை அடையாளம் காணுங்கள் என்றேன். அண்ணன் முனுசாமியும் ஆர்வத்துடன், சிறுவர்களுடன் இணைந்து போட்டி போட்டுக் கொண்டு அடையாளம் சொல்லிக் கொண்டிருந்தார். முக்குளிப்பானுக்கு (Little grebe) உள்ளூர் பெயர் ‘க்காங் கோழி’ என்றார். சுவாரஸ்யமான பெயர்.

சிறுவர்களுடன் பறவைப் பார்த்தல் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். எனக்கு இதில் ஆர்வம் வந்ததைப் பற்றியும். இணைய / தொலைபேசி / தொலைக்காட்சியின் அடிமையாகாமல் இருப்பதற்கு இது உதவுவதைப் பற்றியும், புலன்கள் கூர்மையடைவதும், சலிப்பென்பது இல்லாமலாவதையும் ஊக்கத்துடன் சொல்லிக் கொண்டிருந்தேன். சிறுவர்களும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். அளித்தலின் நிறைவு நெஞ்சில் நிரம்பியது.

ஒருவழியாக முடித்துக் கொண்டு “மீண்டும் சந்திப்போம்” என விடை பெற்றுக் கிளம்பும் போது “ன்ணா” எனும் குரல் கேட்டுத் திரும்பினேன்.

அடுத்த நொடி ஒரு இடிவிழுந்து காதும் கண்களும் மீண்டும் இருண்டன. காட்சித் தெளியத்துவங்கியதும் அர்ஜூனன் தான் தேர்த்தட்டிலிருப்பதை உணர்ந்தான். பதற்றத்துடன் “பரந்தாமா, என்ன நடந்தது அங்கே?” என்றான்.

தேரோட்டியும், மன்னனும், சாந்தீபனி குருகுலத்தின் ஆசிரியருமான கிருஷ்ணன் இவ்வாறு சொல்லலானார்.
“தனஞ்ஜெயா, நாம் சென்று திரும்பியதே இப்புவியின் எதிர்காலம். அக்காலத்தில் அறம் மானுடருக்கானது எனும் குறுகிய வட்டத்திலிருந்து அனைத்துயிர்ளுக்கும், தாவரங்களுக்கும், சூழலுக்கும், இந்த ஒட்டு மொத்தப் புவிக்கென விரியும்” என்றார்.

மேலும் “அப்போது அறத்திற்கான மானுடத் தரப்பு போரிடப்போவது தன் எதிரிகளுடனல்ல, சொந்தகளுடனல்ல, தங்களுடன்! அன்று அதர்மத்தின் தரப்பு இயல்பென அனைவருக்குள்ளும் வேரோடியிருக்கும். நான், எனக்கு எனும் சொற்கள் எதிரியின் தரப்பால் ஊட்டி வளர்க்கப்படும். சுயநலம் பேருருவம் கொண்டு, அம்மக்களையே விழுங்கக் காத்திருக்கும். அச்சூழலில் களம்புகும் நம்மவர்கள் உணரப்போவது உதாசீனத்தை, எள்ளலை, பெரும் சலிப்பை…”

“அன்று அதை வெல்லும் ஒரே வழியென சான்றோர் உரைக்கப்போகும் சொல்லே தன்னறம். உன்கதை அதற்கு உதாரணமாக்கப்படும். எனவே எடு உன் காண்டீபத்தை! உனக்காக அல்ல, எதிர்காலத்தின் பொருட்டு. நீ எதிர் நிற்பது உன் சொந்தங்களுடனல்ல, நாளை இவ்வுலகை முற்றழிக்கவென எழும் தன்னலத்துடன். பொருத்துக நாணை. நாளை நம்மவர்கள் களத்தில் தாழாமல் இருப்பதற்காக. எழட்டும் அம்புகள்! இப்புவியின் எதிர்காலமெனும் வெளிச்சத்தை மறைக்க விழும் திரையை கிழிக்கட்டும் அவை. குறி தவறிய போதும், வானிலேயே சிதறடிக்கப்பட்ட போதும், உன்னால் காணமுடியாத ஆழங்களில் விழுந்த போதும், சலிப்பில்லாமல், சொல்லென எழட்டும் அம்புகள். ஒன்றென, நூறென, ஆயிரமென இல்லை கோடி அம்புகள் எழட்டும்.” என்றார்.

கண்களில் அனல் தெரிக்க, பார்வை களத்தையும் தாண்டி வெளியே நோக்க, காண்டீபத்தை இறுக்கிப்பிடித்தபடி
“தேர் கிளம்பட்டும், கேசவா” எனக் கூவினான் அர்ஜூனன்.

பாஞ்சஜன்யம் முழங்கியது. பல்லாயிரம் ஆண்டுகளாய் தொடரப்போகும் போர் அன்று தொடங்கியது.

தன் முதல் அம்பை எடுத்து, துரோணரைத் தொழுது, நாணில் ஏற்றி அதைத் தொடுக்கும் முன் அர்ஜூனன் கேட்டான்.
“மாதவா, அன்று இறுதியாக என்ன நிகழ்ந்தது”

அமரத்திலிருந்த கிருஷ்ணன் திரும்பி
“என் கண்களை நோக்குக” என்றார்.
அவர் கண்களைப் பார்த்த அர்ஜூனன், அடுத்த கணத்தில் அந்த ஏரிக்கரையை பளிங்கு கட்டிய கண்களால் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனிடமிருந்து சொல் எழுந்தது “என்ன தம்பி?  சொல்லு”

“அண்ணா, இந்த பறவைங்களெள்லாம் நல்லா படமெடுத்துக் கொடுத்தா, நெறய பணம் கெடைக்குமா?”

மூவரும் சிரித்தபடி, ஸ்டியரிங்கையும், சம்மட்டியையும், காண்டீபத்தையும் இறுகப் பிடித்தனர்.


eBird பட்டியல்: https://ebird.org/checklist/S304493520


லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்
சென்னை
01.03.2026