தூவித்தோழர்கள்-35

உண்ணிக் கொக்கு(Eastern Cattle Egret)

உண்ணிக் கொக்கு கால்நடைகளுடன் இருப்பதை பார்க்கலாம். முழுவதும் வெள்ளை நிறம். மஞ்சள் நிற கூரிய அலகு. கால்கள் கரும்பச்சை நிறம். தூரத்தில் இருந்து பார்க்கும் போது, கருப்பு நிறமாக தெரியும். நடக்கும்போது தலையை முன்னால் நீட்டி நீட்டி செல்கிறது. ஆண், பெண் பறவைகளிடையே வேறுபாடு இல்லை.இதன் பெயர் உண்ணிக் கொக்கு என்றிருந்தாலும் , இது கால்நடைகளின் உண்ணியை சாப்பிடுவதில்லை. மாறாக அவை நடக்கும் போது, பறக்கும் பூச்சிகளை உண்ணுகின்றன.

இனப்பெருக்க கால தோற்றம்

இனப்பெருக்க காலத்தில் ஆரஞ்சு வண்ண இறகுகள் தலையிலும், மார்பிலும், கழுத்திலும் காணப்படும். பச்சை கலந்த மஞ்சள் நிறக் கால்கள். இனப்பெருக்க காலத்திலேயே சில நாட்களுக்கு மட்டும் கண், அலகு மற்றும் கால்கள், அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இனப்பெருக்க காலத்தில் பெண் பறவையின் இறகுகள் சற்று குட்டையாக இருக்கும். ஆனால் களத்தில் பார்க்கும்போது அடையாளம் காணுவது சிரமம். மேற்கத்திய உண்ணி கொக்குகளில்(Western Cattle Egret) தலையிலும், மார்பிலும், இறகுகளிலும் வெளிர் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

இனப்பெருக்க கால தோற்றம்(Eastern Cattle Egret) ©Hans Wohlmuth
இனப்பெருக்க கால தோற்றம்(Western Cattle Egret) ©Brandon Nidiffer

வெண்முரசின் ஆறாம் பாகமான வெண்முகில் நகரத்தில் ஒரு காட்சி. பள்ளியறையில் பானுமதிக்காக துரியோதனன் காத்திருக்கிறான். மாமரத்தில் கிளைஇணையும் இடத்தில், ஒரு வெள்ளை நிற பறவை அசைவில்லாமல் அமர்ந்திருக்கிறது. உற்று நோக்கிய பின், அது உண்ணிக்குருகு என்று தெரிந்து கொள்கிறான். சங்குக்கு கழுத்தும் காலும் முளைத்திருப்பது போல, அது இருப்பதாக நினைக்கிறான். பானுமதி உள்ளே நுழைந்த உடன், அவரிடம் ‘நான் பார்த்த பறவையை கூறு’ என்கிறான். அவர் வெளியே பார்த்தவுடன், பகுளம் என்று கண்டுபிடிக்கிறார். சங்குக் குருகு என்றும் பெயர் இருப்பதாக கூறுகிறார். இறுக்கம் தளர்ந்து, உரையாடல் தொடர்கிறது . அவர்கள் பேசிக்கொள்ளும் முதல் விஷயமே, இந்த உண்ணிக் கொக்கை பற்றி தான். அப்பறவையை எப்போது பார்த்தாலும் , இவர்கள் இருவரையும் நினைக்காமல் இருக்க முடியாது. அது பெரும்பாலும் அமைதியாக இருப்பது , எருமைகளின் மேல் அமர்ந்திருப்பது, கரிய பாறையின் மேல் வெண்கொடி பறப்பது போல என்று ஜெ மிகவும் துல்லியமாக வர்ணித்திருப்பார். (அத்தியாயத்தை வாசிக்க)

©Bob – Picasa Web Albums

படித்தறிந்தது

  • 1948 முதல் 1963 வரை, மலாய் தீவுக்கூட்டம் (Malay Archipelago) வழியாக மலுக்கு தீவுகளிலிருந்து(Moluccas) நியூ கினியா, கிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வரை பரவியது. பெருமளவிலும், இந்த அளவு வேகமாகவும் வேறு எந்த பறவையினமும் பரவியது, இது வரை பதிவு செய்யப்படவில்லை.
©BOW
  • இந்தோனேசியாவின் போரோபுதூர் கோயிலில் உள்ள லலிதாவிஸ்தாரா புடைப்புச் சிற்பங்கள் (Reliefs) கௌதம புத்தரின் வாழ்க்கையை விவரிக்கிறது. இதை ஷைலேந்திர அரச குலத்தை சேர்ந்த சமரதுங்கா என்பவர் 8-ஆம் நூற்றாண்டில் கட்டினார்.  அதில் உண்ணிக் கொக்கு காணப்படுகிறது. இப்படத்தில் சிவப்பு சதுரமிட்டு காட்டப்பட்டுள்ளது. 31 சட்டகங்களில் 22 பறவை இனங்களை சேர்ந்த 133 பறவைகள் உள்ளன. அதிக முறை காணப்படும் பறவை இந்தோனேசிய மயிலாகும்(Green Peafowl-29 times).
Source:Tropical Natural History
  •  பேரின பெயரான Ardea என்ற லத்தின் சொல்லுக்கு நாரை (Heron) என்று அர்த்தம். இதன் சிற்றின பெயர் coromanda, இந்தியாவின்  சோழ மண்டலக் கடற்கரை பகுதியை குறிக்கிறது. Ardea coromanda – கோரமண்டல் பகுதியில் முதலில் காணப்பட்ட நாரை.