தூவித்தோழர்கள்-36

குண்டுக்கரிச்சான் (Oriental Magpie-Robin)

பறவை பார்த்தல் வகுப்பிற்கு வந்தபோது, யானை குடிலருகே அனைவரும் அமர்ந்து பறவைகளுக்காக காத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு ஆண் குண்டு கரிச்சான் மர உச்சியில் அமர்ந்து பாட ஆரம்பித்தது. அதன் குரலை ஞாபகம் வைத்துக் கொண்டேன். ஒரு பறவையின் குரலை நினைவில் வைத்தேன், என்ற ஆனந்தம் ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை . அது பாடலை மாற்றி விட்டது. நான் அதிர்ச்சியாகி விட்டேன். ஒரு பறவையே வெவ்வேறு பாடலை பாடும் என்று அதன் பிறகு தெரிந்து கொண்டேன்.

©Manoj M Kumar

மின்னும் கரிய தலை மற்றும் உடல். வெள்ளை அடிப்புறம். இறக்கையில் வெள்ளை பட்டை. கருப்பு நிற அலகும், கால்களும். ஆணின் கருப்பு நிறம், பெண்ணில் சாம்பல் நிறமாக இருக்கிறது. அதைத் தவிர வேறுபாடு இல்லை. முக்கியமான உணவு பூச்சிகள். அவற்றை தரையில் இருந்து பிடித்து உண்ணுகின்றன. சில சமயம் மலரமுதும் உண்ணும். குதித்து குதித்து தரையில் செல்லும்போது, வாலை தூக்கி வைத்திருக்கும். வெள்ளிமலை உணவு கூடத்தின் பின்புறம் மிக அருகில் அமர்ந்திருந்தது. கைக்கெட்டும் தூரத்தில் அதை பார்த்தது, மறக்க முடியாத தருணம்.

படித்தறிந்தது

  • இந்திய துணை கண்டத்திலும், தென்கிழக்கு ஆசிய பகுதிகளிலும், இந்தோனேசியாவிலும் காணப்படுகிறது. வலசை செல்லாத பறவைகளுள் ஒன்று. ஏழு துணை இனங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.
©BOW
  • பழங்கால இந்தியாவில் இதன் பாடும் திறனுக்காக கூண்டில் அடைத்து வளர்த்திருக்கிறார்கள். இது பங்களாதேஷின் தேசிய பறவை . அதன் தலைநகரமான தாக்காவில் தோயல் சத்தர்(Doel Square) என்றொரு இடம் உள்ளது.(வங்காள மொழியில் இப்பறவை தோயல் என்று அழைக்கப்படுகிறது. சத்தர் என்றால் சதுரம்.) வங்காள 2 ரூபாய் நோட்டில் இப்பறவையின் படம் இடம்பெற்றிருந்தது. தற்போது அந்த நோட்டு புழக்கத்தில் இல்லை .
தோயல் சத்தர்(Doel Square)
©Wiki
பங்களாதேஷின் 2 ரூபாய் நோட்டு
©Coins & Stamps
  •  Copsychus என்ற பேரினப் பெயர் கருப்புப் பறவை என்பதை குறிக்கும் கிரேக்க சொல்லான  kopsichos என்பதிலிருந்து வைக்கப்பட்டுள்ளது. saularis என்ற இனப்பெயருக்கு ஹிந்தியில் நூறு பாடல்கள் என்பதாக இருக்கலாம். (‘सौ/Sow’ – நூறு ஞாபகம் வருகிறதா?)  Copsychus saularis– கருப்புப் பறவை 100 பாடல்களைப் பாடும்.