செவ்வலகு பூஞ்சிட்டு(Pale-Billed Flowerpecker)
தினம் மாலை வீட்டின் பின்புறம் உள்ள தூங்குவாகை மரத்திற்கு செவ்வலகு பூஞ்சிட்டு வரும். மின்னல் போல மிக வேகமாக அங்கும் இங்கும் பறந்து, பூக்களில் உள்ள மலரமுதை அருந்தும். தேன் சிட்டை விட சிறிதாக இருக்கிறது. சாம்பல் வண்ண உடல். சற்றே நிறம் மங்கலான அடிப்புறம். இளஞ்சிவப்பு நிற, கீழ் நோக்கி சற்றே வளைந்த கூர்மையான அலகு. மிகச் சிறிய வால். ஆண் பெண் பறவைகளுக்கிடையே வேறுபாடு இல்லை. இந்தியாவில் காணப்படும் மிகச் சிறிய பறவை இதுதான்.

ஒரு நாள் செம்பருத்தி பூ பறித்துக் கொண்டிருந்தபோது, மிக அருகில் ‘டிக் டிக் டிக்’ என்ற குரல் கேட்டது. அருகில் உள்ள நொச்சி மரத்தில் அமர்ந்திருந்தது. நீல நிற மஞ்சரியிலிருந்து மலரமுது உண்பதை மிக அருகில் பார்த்தேன். பட்டாம்பூச்சி போல ஒரு மலரிலிருந்து இன்னொரு மலருக்கு சென்றபின் பறந்துவிட்டது. புல்லுருவி(mistletoe) என்ற ஒட்டுண்ணித் தாவரம் பரவுவதற்கு முக்கிய காரணமாக இப்பறவை விளங்குகிறது. அதன் மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது . பழங்களை உண்டு விதைகளையும் பரப்புகிறது. அந்த விதைகள் பறவை எச்சமாக வெளியே வரும்போது, பசை போன்ற ஒட்டும் தன்மையுடன் இருக்கின்றன . அதை இப்பறவை மரக்கிளைகளில் தேய்த்து விடுகின்றது . அந்த இடத்தில் புல்லுருவி வளர ஆரம்பிக்கிறது . இவ்விரு இனத்திற்கும் இருக்கும் பரஸ்பர புரிதல் (Symbiosis) இயற்கையின் அதிசயம் தான். குருவியின் எச்சத்திலிருந்து வளர்வதால் , இச்செடிக்கு குருவிச்சம் என்றொரு பெயர் உள்ளதாக லோகமாதேவி Mam ‘முத்தசிறுகிளை ‘ என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
படித்தறிந்தது
- இந்திய துணை கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது. இலங்கையில் காணப்படுவது தனி சிற்றினமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

- ஆண் பெண் பறவைகள் சேர்ந்து, சிறிய பை போன்ற கூட்டை, புல்லை வைத்து கட்டுகிறது. ஒன்று முதல் மூன்று முட்டைகள் வரை இடும். அடைகாக்கும் காலத்தைப் பற்றி மேலதிக தகவல்கள் இல்லை.

- Dicaeum என்ற கிரேக்க பேரினப் பெயருக்கு சிறிய பறவை என்று அர்த்தம். erythrorhynchos – சிற்றின பெயர் erythro ( சிவப்பு) மற்றும் rhynchos (அலகு) என்ற இரு கிரேக்க சொற்களால் ஆனது. Dicaeum erythrorhynchos – சிறிய பறவை சிவப்பு அலகு கொண்டது. பார்ப்பதற்கு இளஞ்சிவப்பாகத்தான் தெரிகிறது. ஆனால் சிவப்பு என்று பெயரிட்டு இருக்கிறார்கள். தமிழிலுமே செவ்வலகு பூஞ்சிட்டு என்றுதானே இருக்கிறது?